முடியை வெட்டியதால் மன உளைச்சல்.. சிறையில் இருந்த கேரள யூடியூபர் மனநல காப்பகத்தில் சேர்ப்பு

கல்லூரி மாணவர்களை கார் ஏற்றி கொல்ல முயன்ற வழக்கில் தேடப்பட்டு வந்தார்.திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பை எதிர்பார்த்து காத்திருந்ததாகவும், திருமணமும் செய்ய இருந்ததாகவும் பெற்றோர் தெரிவிக்கின்றனர்.
முடியை வெட்டியதால் மன உளைச்சல்.. சிறையில் இருந்த கேரள யூடியூபர் மனநல காப்பகத்தில் சேர்ப்பு
Published on

'மணவாளன்' (மாப்பிள்ளை) என்று அழைக்கப்படுபவர் 26 வயதான கேரள யூடியூபர் முகமது ஷாஹீன் ஷா. கேரள மாநிலம் திருச்சூரில் உள்ள எரநெல்லூரில் வசிக்கும் இவர் கடந்த வருடம் ஏப்ரலில் கல்லூரி மாணவர்களை கார் ஏற்றி கொல்ல முயன்ற வழக்கில் தேடப்பட்டு வந்தார்.

இந்நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை, கர்நாடக மாநிலம் குடகு பகுதியில் பதுங்கியிருந்த அவரை திருச்சூர் போலீசார் கைது செய்து அழைத்து வந்தனர்.

அதைத்தொடர்ந்து நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்ட அவரது தலைமுடி வெட்டப்பட்டு தாடி மழிக்கப்பட்டுள்ளது. இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளான யூடியூபர் முகமது மன நலம் பாதிக்கப்பட்டு மன நல காப்பகத்துக்கு மாற்றப்பட்டுள்ளார்.

தண்டனை பெற்ற கைதிகளுக்கு கூட தலைமுடியை வெட்டுவதற்கு சிறிது நேரம் கொடுக்கப்பட்டது என்றும், ஆனால் யூடியூபர் வழக்கில், சிறையில் அடைக்கப்பட்ட இரண்டு மணி நேரத்திற்குள் அவரது தலைமுடியை வெட்ட முயற்சி மேற்கொள்ளப்பட்டதாகவும் கூறப்படுகிறது. தலைமுடி மற்றும் தாடி வெட்டப்பட்ட பின்னர் அவர் மன உளைச்சலுக்கு ஆளானதாக அவரின் குடும்பத்தினர் குற்றம்சாட்டியுள்ளனர்.

தங்களது மகன் ஒரு திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பை எதிர்பார்த்து காத்திருந்ததாகவும், திருமணமும் செய்ய இருந்ததாகவும் பெற்றோர் தெரிவிக்கின்றனர். இதனால் முடி வெட்டப்படுவதற்கு எதிராக விண்ணப்பிக்க கால அவகாசம் தருமாறு அதிகாரிகளிடம் மகன் கோரிக்கை விடுத்திருந்தார். ஆனால் அதிகாரிகள் கோரிக்கைக்கு செவிசாய்க்கவில்லை என்றும் பெற்றோர் தெரிவித்துள்ளனர்.

ஆனால் தனது முடியை வெட்ட அவர் ஒப்புக்கொண்டதாக சிறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதற்கிடையே மன நல காப்பகத்தில் உள்ள அவரை கண்காணித்து வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர் 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com