மாணவர் கொடூரமாக சித்ரவதை செய்து ராகிங்: கல்லூரி முதல்வர்- விடுதி வார்டன் சஸ்பெண்டு

ராகிங் செய்த மாணவர்கள் 5 பேரை போலீசார் கைது செய்தனர்.விடுதியில் தங்கியிருந்த மாணவன் கடந்த 3 மாதங்களாக சித்ரவதைகளை அனுபவித்தபடி இருந்திருக்கிறான்.
மாணவர் கொடூரமாக சித்ரவதை செய்து ராகிங்: கல்லூரி முதல்வர்- விடுதி வார்டன் சஸ்பெண்டு
Published on

திருவனந்தபுரம்:

கேரள மாநிலம் கோட்டயத்தில் அரசு நர்சிங் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இங்கு படிக்கும் முதலாமாண்டு மாணவரை, மூன்றாம் ஆண்டு மாணவர்கள் 5 பேர் கொடூரமாக சித்ரவதை செய்து ராகிங் செய்தனர்.

அதாவது அந்த மாணவரை கட்டிலில் கட்டி வைத்தும், ஆடைகளை களைந்து நிர்வாணமாக்கியும், அந்தரங்க உறுப்பின் மேல் எடை தூக்கும் கருவியை வைத்தும், கூர்மையான திசைகாட்டியால் உடலில் பல இடங்களில் குத்தி காயப்படுத்தியும் சித்ரவதை செய்தார்கள்.

இதுகுறித்த புகாரின் பேரில் முதலாமாண்டு மாணவரை கொடூர சித்ரவதைக்கு உள்ளாக்கி ராகிங் செய்த மாணவர்கள் சாமுவேல் ஜான்சன், ராகுல்ராஜ், ஜீவ், ரிஜில் ஜித், விவேக் ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களின் மீது ராகிங் தடைச்சட்டத்தின் கீழ் வழக்கு பதியப்பட்டுள்ளது.

மாணவர்கள் 5 பேரையும் கல்லூரி நிர்வாகம் சஸ்பெண்டும் செய்தது. இந்தநிலையில் முதலாமாண்டு மாணவனை, பிற மாணவர்கள் சித்ரவதைக்கு உள்ளாக்கி ராகிங் செய்த வீடியோ காட்சி வெளியானது. மாணவன் கதறும் நிலையில், இவ்வளவு கொடூரமாக சித்ரவதை செய்ய முடியுமா? என்ற கேள்வி எழும்பும் வகையில் அந்த வீடியோ மிகவும் பயங்கரமாக இருந்தது.

விடுதியில் தங்கியிருந்த அந்த மாணவன் கடந்த 3 மாதங்களாக சித்ரவதைகளை அனுபவித்தபடி இருந்திருக்கிறான். அரசு நர்சிங் கல்லூரியில் நடந்திருக்கும் இந்த ராகிங் கேரள மாநிலம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியதால், அந்த சம்பவம் குறித்து மருத்துவக்கல்வி இயக்குனர் நேரடியாக விசாரணை நடத்தினார்.

இந்தநிலையில் மாணவன் சித்ரவதைக்குள்ளான நர்சிங் கல்லூரியின் முதல்வர் சுலேகா, விடுதியின் உதவி வார்டனாக இருந்த உதவி பேராசிரியர் அஜீஷ் மணி ஆகிய இருவரும் சஸ்பெண்டு செய்யப்பட்டனர்.

மருத்துவக்கல்வி இயக்குனர் விசாரணையை தொடர்ந்து மாநில சுகாதாரத்துறை மந்திரி வீணா ஜார்ஜ் உத்தரவின் பேரில் சுகாதாரத்துறை கூடுதல் தலைமை செயலர் ராஜன் கோப்ரகடே இந்த அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com