முட்டையில் புற்றுநோயை உண்டாக்கும் நச்சு இல்லை- கர்நாடக அரசு அறிவிப்பு

முட்டையில் புற்றுநோயை உண்டாக்கும் ரசாயன நச்சு இருப்பதாக தகவல் பரவியது.பல்வேறு மாவட்டங்களில் இருந்து முட்டைகளை கொண்டு வந்து பரிசோதனைக்காக ஆய்வகத்திற்கு அனுப்பி வைத்தோம்.
முட்டையில் புற்றுநோயை உண்டாக்கும் நச்சு இல்லை- கர்நாடக அரசு அறிவிப்பு
Published on

இந்தியாவிலேயே முட்டை, கறிக்கோழி உற்பத்தியில் தமிழ்நாட்டில் உள்ள நாமக்கல் மாவட்டம் திகழ்கிறது. நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. இதனால் நாடு முழுவதும் கடந்த 2 மாதங்களாக முட்டை விலை அதிகரித்துள்ளது. கர்நாடகத்தில் ஒரு கோழி முட்டை ரூ.8-க்கு விற்பனையாகி வருகிறது.

இந்த நிலையில் கர்நாடகத்தில் கோழி முட்டையில் புற்றுநோயை உண்டாக்கும் நச்சு இருப்பதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவியது. இதனால் மக்கள் அச்சம் அடைந்தனர். மேலும் சிலர் முட்டை சாப்பிடுவதை நிறுத்திவிட்டனர்.

இதையடுத்து கர்நாடக அரசின் சுகாதாரத்துறை முட்டைகளை ஆய்வுக்கு அனுப்ப முடிவு செய்தது. இதையடுத்து பெங்களூரு, மைசூரு, மண்டியா, சிவமொக்கா, பல்லாரி உள்பட மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் முட்டைகள் மாதிரி சேகரித்து இந்திய உணவு பாதுகாப்பு தர ஆணையத்தின் ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதில், முட்டையில் புற்றுநோயை உண்டாக்கும் ரசாயன நச்சுகள் எதுவும் இல்லை என்பது தெரியவந்துள்ளது. இதுகுறித்து சுகாதாரத்துறை மந்திரி தினேஷ் குண்டுராவ் கூறியதாவது:-

கர்நாடகத்தில் முட்டையில் புற்றுநோயை உண்டாக்கும் ரசாயன நச்சு இருப்பதாக தகவல் பரவியது. இதனால் மக்கள் சற்று ஆதங்கப்பட்டனர். மக்களின் அச்சத்தை போக்கும் வகையில் நாங்கள் பல்வேறு மாவட்டங்களில் இருந்து முட்டைகளை கொண்டு வந்து பரிசோதனைக்காக ஆய்வகத்திற்கு அனுப்பி வைத்தோம். அதன் பரிசோதனை அறிக்கை வந்துள்ளது. முட்டையில் புற்றுநோயை உண்டாக்கும் நச்சு எதுவும் இல்லை என்று தெரியவந்துள்ளது.

முட்டை சாப்பிடுவது பாதுகாப்பானது. அதனால் பொதுமக்கள் அச்சமின்றி முட்டையை சாப்பிடலாம். அதனால் எந்த பிரச்சனையும் இல்லை. இந்த தகவலை இந்திய உணவு பாதுகாப்பு தர ஆணையம் கூறியுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com