கர்நாடகாவில் இஸ்ரேலிய சுற்றுலாப் பயணியை கூட்டு வன்புணர்வு செய்த கும்பல்.. தடுக்க வந்த ஆண் நண்பர் கொலை

தடுக்க வந்த ஆண் சுற்றுலாப் பயணிகள் 3 பேரையும் அந்த கும்பல் துங்கபத்ரா நதியில் தள்ளிவிட்டு தப்பினர். உள்ளூர் நீச்சல் வீரர்கள், மோப்ப நாய் உதவியுடன் போலீசார் தீவிரமாக தேடிவந்தனர்.
கர்நாடகாவில் இஸ்ரேலிய சுற்றுலாப் பயணியை கூட்டு வன்புணர்வு செய்த கும்பல்.. தடுக்க வந்த ஆண் நண்பர் கொலை
Published on

கர்நாடக மாநிலம் கொப்பல் மாவட்டம் கங்காவதி தாலுகா சனாபூர் பகுதிக்கு இஸ்ரேல் நாட்டை சேர்ந்த சுமார் 27 வயதான இளம்பெண் ஒருவர் சுற்றுலா வந்தார். அவர் ஒரு தனியார் தங்கும் விடுதியில் தங்கி அந்த பகுதியில் உள்ள சுற்றுலா தலங்களை கண்டு ரசித்து வந்தார்.

நேற்று முன் தினம் (வியாழக்கிழமை) இரவு இஸ்ரேல் பெண் சுற்றுலா பயணி மற்றும் அமெரிக்காவை சேர்ந்த டேனியல், மகாராஷ்டிராவை சேர்ந்த பங்கஜ், ஒடிசாவை சேர்ந்த பிபாஷ் ஆகிய 4 சுற்றுலா பயணிகள், மற்றும் தங்கும் விடுதி நடத்தி வரும் 29 வயதான ஒரு இளம்பெண் ஆகிய 5 பேரும் துங்கபத்ரா ஏரிகரையில் இசையை கேட்டு கொண்டும், நட்சத்திரங்களை ரசித்துகொண்டும் இருந்தனர். அப்போது ஒரு மோட்டார் சைக்கிளில் 3 வாலிபர்கள் வந்தனர்.

அவர்கள் சுற்றுலா பயணிகளிடம் பெட்ரோல் எங்கே கிடைக்கும் என்று கேட்டனர். மேலும் அவர்களிடம் பணம் கேடடு மிரட்டியுள்ளனர். தொடர்ந்து அவர்கள் இஸ்ரேல் பெண் சுற்றுலா பயணி மற்றும் தங்கும் விடுதியின் பெண் உரிமையாளரை கூட்டுபாலியல் வன்கொடுமை செய்துவிட்டு அங்கிருந்து கிளம்பினர்.

அப்போது தடுக்க வந்த ஆண் சுற்றுலாப் பயணிகள் 3 பேரையும் அந்த கும்பல் துங்கபத்ரா நதியில் தள்ளிவிட்டு தப்பினர். இதில் அமெரிக்காவை சேர்ந்த டேனியல், மகாராஷ்டிராவை சேர்ந்த பங்கஜ் ஆகியோர் உயிர் தப்பினர். ஆனால் ஒடிசாவை சேர்ந்த பிபாசை காணவில்லை.

இதுப்பற்றி தெரியவந்ததும் சம்பவ இடத்துக்கு போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மேலும் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட 2 பெண்களையும் மீட்டு சிகிச்சைக்காக அந்த பகுதியில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

பாதிக்கப்பட்ட பெண்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் பாலியல் வன்கொடுமை, கூட்டு பாலியல் வன்கொடுமை மற்றும் கொள்ளை பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.

இதற்கிடையே துங்கபத்ரா நதியில் தள்ளிவிடப்பட்ட ஒடிசாவை சேர்ந்த சுற்றுலா பயணி பிபாசை தீயணைப்பு துறையினர், உள்ளூர் நீச்சல் வீரர்கள், மோப்ப நாய் உதவியுடன் போலீசார் தீவிரமாக தேடிவந்தனர்.

இந்நிலையில் அவர் இன்று காலை 8 மணியளவில் கங்காவதி தாலுகாவில் உள்ள மல்லப்பூர் அருகே உள்ள ஒரு மின் உற்பத்தி நிலையத்திற்கு அருகில் சடலமாக மீட்கப்பட்டார். இதையடுத்து அவர் உடல் கைப்பற்றபட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.  

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com