இந்தியா வலிமையானது... பாகிஸ்தான் ஒரு தோல்வியடைந்த நாடு - ஓவைசி

பாகிஸ்தானுக்கு எதிராக வலுவான நடவடிக்கைகளை மத்திய அரசு எடுக்கவேண்டும். இந்தியாவில் வாழும் முஸ்லிம்கள் 1947 இல் ஜின்னாவை நிராகரித்தார்கள்
இந்தியா வலிமையானது... பாகிஸ்தான் ஒரு தோல்வியடைந்த நாடு - ஓவைசி
Published on

ஜம்மு காஷ்மீரில் பஹல்காம் பகுதியில் கடந்த 22-ந்தேதி சுற்றுலா பயணிகள் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதனையடுத்து, பாகிஸ்தானுக்கு எதிராக பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை இந்தியா மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில், "பாகிஸ்தான் ஒரு தோல்வி அடைந்த நாடு, இந்தியா அமைதியாக இருக்க அவர்கள் ஒருபோதும் விடமாட்டார்கள்" என்று AIMIM கட்சி தலைவரும் ஐதராபாத் எம்.பி.யான அசாதுதீன் ஓவைசி தெரிவித்துள்ளார்.

பீகார் மாநிலத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய ஓவைசி, "இந்தியா பாகிஸ்தானை விட வலிமையானது. பாகிஸ்தான் ஒரு தோல்வியடைந்த நாடு. பாகிஸ்தானால் அதன் பல்வேறு இனக்குழுக்களிடையே அமைதியை ஏற்படுத்த முடியவில்லை. ஈரான், ஆப்கானிஸ்தான் போன்ற அண்டை நாடுகளுடனும் பாகிஸ்தான் நல்லுறவைக் கொண்டிருக்கவில்லை.

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து பாகிஸ்தானுக்கு எதிராக வலுவான நடவடிக்கைகளை மத்திய அரசு எடுக்கவேண்டும். எப்.ஏ.டி.எப். எனப்படும் சர்வதேச நிதி நடவடிக்கை கண்காணிப்புக்குழுவின் கிரே பட்டியலில் பாகிஸ்தானை சேர்க்க வேண்டும்.

பாகிஸ்தான் ராணுவத் தளபதி ஜெனரல் அசிம் முனீர், இந்தியாவுக்கு எதிராக பேசுவதை கடுமையாக கண்டிக்கிறோம். இந்தியாவில் வாழும் முஸ்லிம்கள் 1947 இல் ஜின்னாவை நிராகரித்தார்கள். அவர்கள் இந்தியாவை தேர்ந்தெடுத்தார்கள். அவர்களின் சந்ததியினர் எந்த சூழ்நிலையிலும் இந்தியாவை விட்டு வெளியேற மாட்டார்கள் என்பதை பாகிஸ்தான் ராணுவத் தளபதி நினைவில் கொள்ள வேண்டும்.

வங்கதேச ரைபிள்ஸ் ராணுவ படையின் முன்னாள் தலைவரின் பேச்சை கண்டிக்கிறேன். வங்கதேசம் ஒரு சுதந்திர நாடாக இருப்பதற்கு இந்தியாதான் காரணம் என்பதை நீங்கள் நினைவில் கொள்ள வேண்டும்" என்று தெரிவித்தார்.

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பதிலடியாக பாகிஸ்தானைத் தாக்கினால், இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களை ஆக்கிரமிக்க டாக்கா சீனாவுடன் இணைந்து செயல்பட வேண்டும் என்ற வங்காளதேச முன்னாள் ராணுவ அதிகாரியின் கருத்துக்கும் அவர் எதிர்ப்பு தெரிவித்தார்

வங்கதேச ரைபிள்ஸ் ராணுவ படையின் முன்னாள் தலைவரான மேஜர் ஜெனரல் ஏ.எல்.எம். பஸ்லுர் ரஹ்மான் தனது பேஸ்புக் பதிவில், "பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தான் மீது இந்தியா தாக்குதல் நடத்தினால், இந்தியாவில் உள்ள 7 வடகிழக்கு மாநிலங்களையும் (அருணாச்சலப் பிரதேசம், அசாம், மணிப்பூர், திரிபுரா, மேகாலயா, நாகாலாந்து மற்றும் மிசோரம் ஆகியவற்றை) வங்கதேசம் ஆக்கிரமிக்க வேண்டும் என்று முகமது யூனுஸுக்கு பரிந்துரைத்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது. .

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com