பத்திரிகையாளர் கொலை வழக்கில் பாலியல் குற்றவாளி சாமியார் விடுதலை.. ஆயுள் தண்டனை ரத்து | Gurmeet Ram Rahim

தேரா சச்சா சவுதா அமைப்பிற்குள் நடந்த பாலியல் சுரண்டல்கள் குறித்து அவர் செய்தி வெளியிட்டதே கொலைக்கு காரணம். சுமார் 320 நாட்களுக்கும் மேலாக சிறைக்கு வெளியே பரோலில் இவர் கழித்துள்ளார்
பத்திரிகையாளர் கொலை வழக்கில் பாலியல் குற்றவாளி சாமியார் விடுதலை.. ஆயுள் தண்டனை ரத்து | Gurmeet Ram Rahim
Published on

அரியானா, ராஜஸ்தான், உ.பி உள்ளிட்ட வட மாநிலங்களில் பிரபல சாமியாராக திகழ்ந்து வருபவர் குர்மீத் ராம் ரஹீம் சிங். 'தேரா சச்சா சவுதா' என்ற பெயரில் பல மாநிலங்களில் இவர் ஆசிரமம் நடத்தி வருகிறார்.

தனது ஆசிரமத்தில் 2 பெண் சீடர்களை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கு மற்றும் பத்திரிகையாளர் கொலை வழக்கு ஆகியவற்றில் 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவித்து வருகிறார்.

இதில் பத்திரிகையாளர் கொல்லப்பட்ட வழக்கில் ராம் ரஹீமுக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனை தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளது.

அரியானாவின் சிர்சாவில் உள்ளூர் பத்திரிகை நடத்தி வந்த ராம் சந்தர் சத்ரபதி, 2002ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் அவரது வீட்டின் வெளியே சுட்டுக்கொல்லப்பட்டார்.

தேரா சச்சா சவுதா அமைப்பிற்குள் நடந்த பாலியல் சுரண்டல்கள் குறித்து அவர் செய்தி வெளியிட்டதே இந்த கொலைக்குக் காரணம் என்று சிபிஐ தனது விசாரணையில் தெரிவித்தது.

2019ஆம் ஆண்டு பஞ்ச்குலாவில் உள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றம், சத்ரபதி கொலை வழக்கில் குர்மீத் சிங் குற்றவாளி என அறிவித்து அவருக்கு ஆயுள் தண்டனை விதித்தது.

இந்தத் தண்டனையை எதிர்த்துத் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுக்களை பஞ்சாப் - அரியானா உயர்நீதிமன்றம் விசாரித்து வந்தது.

இந்நிலையில் இன்று நீதிபதி விக்ரம் அகர்வால் தலைமையிலான அமர்வு, குர்மீத் சிங்கிற்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை ரத்து செய்து அவரை விடுவித்தது.

குர்மீத் சிங் விடுவிக்கப்பட்டாலும், இந்த வழக்கில் தொடர்புடைய மற்ற இரண்டு குற்றவாளிகளின் மேல்முறையீட்டு மனுக்களை நீதிமன்றம் தள்ளுபடி செய்து, அவர்களுக்கான தண்டனையை உறுதி செய்துள்ளது.

பத்திரிகையாளர் கொலை வழக்கில் விடுவிக்கப்பட்டாலும், பாலியல் வன்கொடுமை மற்றும் பிற வழக்குகளில் தண்டனை பெற்றுள்ளதால் குர்மீத் ராம் ரஹீம் சிங் தொடர்ந்து சிறையிலேயே இருப்பார்.  

ஆனால் 2017-ஆம் ஆண்டிலிருந்து தற்போது வரை மொத்தம் 15 முறை பரோலில் வெளியே வந்துள்ளார். கடந்த சில ஆண்டுகளில் மட்டும் சுமார் 320 நாட்களுக்கும் மேலாக சிறைக்கு வெளியே பரோலில் இவர் கழித்துள்ளார் என்பது சர்ச்சையான நிலையில் தற்போது கொலை வழக்கில் அவரின் விடுதலை விமர்சனத்துக்கு உள்ளாகி வருகிறது. 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com