மாணவிகளை நிர்வாணப்படுத்தி சோதனை: பள்ளி முதல்வர் உள்பட 5 பேர் கைது

பாதிக்கப்பட்ட மாணவிகள் வீடு திரும்பியதும் பெற்றோர்களிடம் கூறி கதறி அழுதனர்.சம்பவம் தொடர்பாக 8 பேர் மீது போக்சோ, மானபங்கம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
மாணவிகளை நிர்வாணப்படுத்தி சோதனை: பள்ளி முதல்வர் உள்பட 5 பேர் கைது
Published on

தானே மாவட்டம் சகாப்பூர் பகுதியில் ஆர்.எஸ். தமானி என்ற தனியார் பள்ளி உள்ளது. கடந்த செவ்வாய்க்கிழமை பள்ளி வளாகத்தில் உள்ள கழிவறையில் ரத்தக்கறை படிந்து இருந்ததாக கூறப்படுகிறது. கழிவறையை ரத்தக்கறையாக்கிய மாணவியை கண்டறிய பள்ளி ஆசிரியைகள் விசித்திர செயலை அரங்கேற்றினர். அதன்படி மாதவிடாய் இருப்பதாகக் கூறிய மாணவிகளின் இடது கை ரேகையை பதிவு செய்தனர். அதே நேரத்தில் மாதவிடாய் இல்லை எனக்கூறிய மாணவிகளை கழிவறைக்கு அழைத்து சென்று நிர்வாணப்படுத்தி சோதனை நடத்தி உள்ளனர்.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட மாணவிகள் வீடு திரும்பியதும் பெற்றோர்களிடம் கூறி கதறி அழுதனர். பள்ளியில் அரங்கேறிய இந்த கொடூர சம்பவத்தை கேட்டு கொந்தளித்த பெற்றோர், நேற்று முன்தினம் பள்ளி நிர்வாகத்துக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து இந்த சம்பவம் குறித்து போலீசார் பள்ளியின் முதல்வர், பெண் ஊழியர், ஆசிரியைகள் 4 பேர் உள்பட 8 பேர் மீது போக்சோ, மானபங்கம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

மாணவிகளை நிர்வாணப்படுத்தி மாதவிடாய் சோதனை செய்த சம்பவம் மாநிலம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. பல்வேறு தரப்பினர் பள்ளி நிர்வாகத்தின் செயலுக்கு கடும் கண்டனம் தெரிவித்தனர்.

இந்தநிலையில் தானே தனியார் பள்ளியில் மாணவிகளை நிர்வாணப்படுத்தி சோதனை நடத்திய விவகாரத்தில் போலீசார், பள்ளி முதல்வர் மாதுரி கெய்க்வாட் மற்றும் பெண் ஊழியர் நந்தாவை அதிரடியாக கைது செய்தனர். இதேபோல மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டனர். பள்ளி முதல்வர் உத்தரவின் பேரில் மாணவிகளை நிர்வாணப்படுத்தி சோதனை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த சம்பவம் தொடர்பாக விரிவான விசாரணைக்கு தானே மாவட்ட கல்வி அதிகாரி உத்தரவிட்டு உள்ளார்.

இதற்கிடையே இந்த பிரச்சினை நேற்று மகாராஷ்டிரா சட்டசபையிலும் எதிரொலித்தது. காங்கிரஸ் மூத்த தலைவர் நானா படோலே, முற்போக்கான மகாராஷ்டிரா மாநிலத்தில் இதுபோன்ற சம்பவம் நடந்து இருக்கக்கூடாது என கவலை தெரிவித்தார்.

தேசியவாத காங்கிரஸ் (எஸ்.பி.) கட்சியை சேர்ந்த முன்னாள் மந்திரி ஜிதேந்திர அவாத், மாணவிகளுக்கு எதிராக கொடூரம் நடந்த பள்ளியின் முதல்வர் ஒரு பெண் என வேதனை தெரிவித்தார்.

காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஜோதி கெய்க்வாட் தனியார் பள்ளி விவகாரத்தில் தொடர்புடையவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என வலியுறுத்தினார்.

இதையடுத்து பதிலளித்து பேசிய மந்திரி கிரிஷ் மகாஜன், ''தானே தனியார் பள்ளி விவகாரத்தில் ஏற்கனவே போலீசாா் நடவடிக்கை எடுக்க தொடங்கி விட்டனர். இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு கடும் நடவடிக்கை எடுக்கப்படும். சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் உத்தரவிட்டுள்ளார்'' என்றார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com