மணிப்பூர் பிரச்சனைக்கு தீர்வு காண மத்திய அரசு பேச்சுவார்த்தை.. குக்கி - மெய்தேய் பிரதிநிதிகள் பங்கேற்பு

ஓய்வுபெற்ற சிறப்பு இயக்குநர் ஏ.கே. மிஸ்ரா பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். மக்களவையில் மணிப்பூர் குறித்த விவாதத்தின் போது, ​​மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பதிலளித்தார்.
மணிப்பூர் பிரச்சனைக்கு தீர்வு காண மத்திய அரசு பேச்சுவார்த்தை.. குக்கி - மெய்தேய் பிரதிநிதிகள் பங்கேற்பு
Published on

மணிப்பூர் மாநிலத்தில் கடந்த 2023 மே மாதம் குக்கி மற்றும் மெய்தேய் பழங்குடியினரிடையே நிகழ்ந்த மோதல் கலவரமாக வெடித்தது. இதில் சுமார் 260 பேர் வரை கொல்லப்பட்டனர். பெண்கள் நிர்வாணமாக ஊர்வலம் நடத்திச் செல்லப்பட்டது, வன்புணர்வு செய்யப்பட்டது உள்ளிட்ட மனித குலத்திற்கே வெட்கக்கேடான கொடுமைகள் நடைபெற்றன.

ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி வேறு இடங்களுக்கு ஓட வேண்டியிருந்தது. காவல்நிலையத்தில் உள்ள ஆயுதங்கள் கொள்ளையடிக்கப்பட்டன. கலவரம் ஓய்ந்தபின்னும் ஆயுதமேந்திய கிளர்ச்சியாளர்கள் அவ்வப்போது தாக்குதல் நடத்திய வண்ணம் உள்ளனர்.

கடந்த வருட இறுதியில் மக்கள் போராட்டத்தால் மீண்டும் கலவரமான சூழல் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து அம்மாநில ஆளும் பாஜக அரசு கடந்த பிப்ரவரி 13 ஆம் தேதி முதல்வர் பைரன் சிங் ராஜிநாமாவால் கலைக்கப்பட்டு ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது.

மணிப்பூரில் மீண்டும் அமைதியை ஏற்படுத்த தொடர்ந்து முயற்சித்து வருவதாக மத்திய அரசு கூறி வருகின்றது. இந்நிலையில் குக்கி, மெய்தேய் குழு பிரதிநிதிகளை வைத்து கூட்டம் ஒன்றை மத்திய அரசு இன்று நடத்தியுள்ளது.

ஆல் மணிப்பூர் யுனைடெட் கிளப்ஸ் ஆர்கனைசேஷன் (AMUCo) மற்றும் ஃபெடரேஷன் ஆஃப் சிவில் சொசைட்டி ஆர்கனைசேஷன் (FOCS) ஆகியவற்றின் பிரதிநிதிகளைக் கொண்ட ஆறு பேர் கொண்ட மெய்தேய் குழுவும், ஒன்பது பேர் கொண்ட குக்கி சமூகத்தைச் சேர்ந்த ஒரு குழுவும் கூட்டத்தில் கலந்து கொண்டன. இந்தக் கூட்டத்தில் மத்திய அரசின் சார்பில் உளவுத்துறைப் பணியகத்தின் ஓய்வுபெற்ற சிறப்பு இயக்குநர் ஏ.கே. மிஸ்ரா பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.

முன்னதாக மக்களவையில் மணிப்பூர் குறித்த விவாதத்தின் போது, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசுகையில்,  மணிப்பூரில் உள்ள மெய்தேய் மற்றும் குக்கி சமூகங்களின் பிரதிநிதிகளுடன் உள்துறை அமைச்சகம் தனித்தனியே பேச்சுவார்த்தை நடத்தியதாக அவர் கூறியிருந்தார். மேலும் விரைவில் இரு குழுக்களையும் சேர்ந்து கூட்டுக் கூட்டம் நடத்தப்படும் என்று அவர் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com