இலவச வாக்குறுதிகளை தடைசெய்ய கோரி தொடர்ந்த வழக்கு - உச்சநீதிமன்ற நீதிபதி அதிரடி உத்தரவு

தேர்தலுக்கு முன்பு இலவச வாக்குறுதி திட்டங்களை அரசியல் கட்சிகள் அறிவிப்பதால் மாநில அரசுக்கு நிதிச்சுமை ஏற்படுகிறது. இதுபோன்ற அறிவிப்புகளை தடுக்க தேர்தல் நடத்தை விதிகளை திருத்த வேண்டும்.
இலவச வாக்குறுதிகளை தடைசெய்ய கோரி தொடர்ந்த வழக்கு - உச்சநீதிமன்ற நீதிபதி அதிரடி உத்தரவு
Published on

புதுடெல்லி:

தமிழக சட்டசபை தேர்தலுக்கு முன்பு இலவச வாக்குறுதி திட்டங்களை அரசியல் கட்சிகள் அறிவிப்பதற்கு தடை விதிக்க உத்தரவிடக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

இதுதொடர்பாக மதுரையை சேர்ந்த கே.கே.ரமேஷ் சார்பில் வக்கீல் ஜெய சுகின், நரேந்தர் குமார் வர்மா ஆகியோர் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில் கூறி இருப்பதாவது:-

தேர்தலுக்கு முன்பு இலவச வாக்குறுதி திட்டங்களை அரசியல் கட்சிகள் அறிவிப்பதால் மாநில அரசுக்கு நிதிச்சுமை ஏற்படுகிறது. இலவச வாக்குறுதி திட்டங்களால் ஏற்படும் நிதிசார் பாதிப்புகள், அதற்கான நிதி முதலீடு குறித்து அரசியல் கட்சிகள் தெரிவிக்க வேண்டும்.

எனவே, தமிழக சட்டசபை தேர்தலுக்கு முன்பு இலவச வாக்குறுதி திட்டங்களை அரசியல் கட்சிகள் அறிவிப்பதற்கு தடை விதிக்க மத்திய அரசுக்கும், தேர்தல் கமிஷனுக்கும் உத்தரவிட வேண்டும். இதுபோன்ற அறிவிப்புகளை தடுக்க தேர்தல் நடத்தை விதிகளை திருத்த வேண்டும். இலவச வாக்குறுதி திட்டங்களின் சாத்தியக் கூறுகளை, நிதி ஆயோக், ரிசர்வ் வங்கி போன்றவற்றின் நிபுணர்களை கொண்ட சுதந்திரமான குழுவை கொண்டு ஆராய வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இந்த பொதுநல மனுவை சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி சூர்யகாந்த், நீதிபதி ஜோய்மால்யா பக்சி ஆகியோர் அடங்கிய அமர்வு இன்று விசாரித்தது.

வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி சூர்யகாந்த், 'கேரள மாநிலத்தில் தேர்தல் வருகிறது என்பதால் இதுபோன்ற ஒரு மனுவை தொடர்ந்தார்கள். தற்போது நீங்கள் தமிழ்நாட்டுக்கு தேர்தல் வருகிறது என்று இந்த மனுவை தாக்கல் செய்கிறீர்கள். எனவே இதை தற்போது ஏற்க முடியாது. தேர்தல் முடிந்த பின்பாக வழக்கை எடுத்து விசாரிக்கலாம். தற்போது அவசரமாக விசாரிக்க வேண்டிய அவசியம் இல்லை' என்று தெரிவித்து வழக்கை ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com