

இந்திய ஜனாதிபதி திரவுபதி முர்மு கடந்த மாதம் 31-ந்தேதி பாராளுமன்றத்தின் இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் உரையாற்றினார். ஜனாதிபதி உரை குறித்து காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், மாநிலங்களவை எம்.பி.யுமான சோனியா காந்தியிடம் கருத்து கேட்கப்பட்டது.
அப்போது, ஜனாதிபதி திரவுபதி முர்மு நீண்ட நேரம் உரையை படித்தார். இறுதியில் சோர்வடைந்துவிட்டார். பாவம் எனக் கூறினார்.
"Poor thing" பாவம் எனக்கூறி ஜனாதிபதியை அவமதிப்பு செய்ததாக பாஜக-வினர் கண்டனம் தெரிவித்தனர். ஜனாதிபதி மாளிகையும் இதை ஏற்றுக்கொள்ள முடியாதது. முற்றிலும் தவிர்க்கக் கூடியது என அறிக்கை வெளியிட்டிருந்தது.
இந்த நிலையில் பாராளுமன்ற உரிமையை மீறியதாக சோனியா காந்திக்கு எதிராக பாஜக எம்.பி.க்கள் மாநிலங்களவை தலைவருடம் உரிமை மீறல் நோட்டீஸ் வழங்கியுள்ளனர். சோனியா காந்தி மீது அவை உரிமை மீறல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.
உயர்ந்த பதவியின் கண்ணியத்தைக் குறைக்கும் நோக்கத்துடன் இந்திய ஜனாதிபதிக்கு எதிராக அவதூறான மற்றும் அவதூறான வார்த்தைகளைப் பயன்படுத்துவதன் மூலம் மாநிலங்களவை எம்.பி. சோனியா காந்தி பாராளுமன்ற சிறப்புரிமை, நெறிமுறைகள் மற்றும் உரிமையை மீறியதாக பாஜக எம்.பி.க்கள் இந்த நோட்டீசில் குறிப்பிட்டுள்ளனர்.