LGBTQ+ சமூகத்தினர் ரத்த தானம் செய்ய தடை தொடரும் - மத்திய அரசு வாதத்தை ஏற்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு

இரத்த தானத்தைத் தடுப்பது பாரபட்சமானது.பாதிப்பை ஏற்படுத்தும் என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
LGBTQ+ சமூகத்தினர் ரத்த தானம் செய்ய தடை தொடரும் - மத்திய அரசு வாதத்தை ஏற்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு
Published on

இரத்த தானம் செய்வதிலிருந்து திருநங்கைகள், ஓரினச்சேர்க்கையாளர்கள் மற்றும் பாலியல் தொழிலாளர்களுக்கு இருக்கும் தடையை நீக்க உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது.

உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி சூர்யா காந்த் தலைமையிலான அமர்வு இன்று இந்த மனுவை விசாரித்தது.

மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஜெயினா கோத்தாரி, "பாலியல் அடையாளம் மற்றும் விருப்பத்தின் அடிப்படையில் இரத்த தானத்தைத் தடுப்பது பாரபட்சமானது.

இரத்தம் தானமாகப் பெறப்பட்ட பிறகு அது எச்.ஐ.வி உள்ளிட்ட நோய்களுக்காகப் பரிசோதிக்கப்படுகிறது. அப்படி இருக்கும்போது இந்தத் தடை தேவையற்றது.

கோவிட்-19 பெருந்தொற்றின் போது, திருநங்கைகள் தங்கள் குடும்பத்தினருக்கே இரத்தம் கொடுக்க முடியாமல் இந்த விதிகளால் தடுத்து நிறுத்தப்பட்டனர்" என்று வாதிட்டார்.

இதற்கிடையே கடந்த மே மாதம் உச்ச நீதிமன்றம் அளித்த உத்தரவின்படி, மருத்துவ நிபுணர்கள் இந்த விவகாரத்தை மீண்டும் ஆய்வு செய்தனர்.

இந்தத் தடையைத் தளர்த்தினால், அது மற்றவர்களுக்கு (இரத்தம் பெறுபவர்களுக்கு) பாதிப்பை ஏற்படுத்தும் என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

இதை சுட்டிக்காட்டிய மத்திய அரசு, இந்த தடையை தளர்ந்த உச்சநீதிமன்றத்தில் மறுப்பு தெரிவித்தது.

திருநங்கைகள், ஆண்களுடன் உடலுறவு கொள்ளும் ஆண்கள் மற்றும் பெண் பாலியல் தொழிலாளர்கள் ஆகியோர் எச்.ஐ.வி, ஹெபடைடிஸ் பி, சி தொற்று ஏற்படும் அதி அபாயப் பிரிவினராக வகைப்படுத்தப்பட்டுள்ளனர் என மத்திய அரசு கூறியுள்ளது.

மத்திய அரசின் நிபுணர் குழு அறிக்கையை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம் இந்தத் தடை தொடர அனுமதித்துள்ளது.

"தனியார் மருத்துவமனைகளுக்குச் செல்ல வசதியில்லாத லட்சக்கணக்கான ஏழை மக்கள் அரசு இரத்த வங்கிகளையே நம்பியுள்ளனர்.

அவர்களுக்குத் தொற்று ஏற்பட 1 சதவீத வாய்ப்பு இருந்தால் கூட, நாம் ஏன் அவர்களை ஆபத்தில் தள்ள வேண்டும்?" என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

இந்த வழக்கைப் "ஆடம்பர வழக்கு" என்று குறிப்பிட்ட நீதிமன்றம், ரத்தம் பெறுபவர்களுக்குச் சுத்தமான இரத்தம் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்தியது. 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com