இந்தியாவை விற்றதில் உங்களுக்கு வெட்கமாக இல்லையா?.. மக்களவையில் ராகுல் காந்தி சரமாரி கேள்வி

அவர் ஏன் இந்தியாவை விற்றார் என்பது உங்களுக்குத் தெரியுமா? ஏனென்றால் அவர்கள் அவரது கழுத்தைப் பிடித்திருக்கிறார்கள். பிரதமரின் கண்களில் பயத்தைக் காணலாம்.அவர்களுக்கு இந்தியர்களின் தரவு தேவை. அந்த வலிமையை இந்தியா பயன்படுத்தத் தவறிவிட்டது.
இந்தியாவை விற்றதில் உங்களுக்கு வெட்கமாக இல்லையா?.. மக்களவையில் ராகுல் காந்தி சரமாரி கேள்வி
Published on

பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நடந்து வரும் நிலையில் இன்று (பிப்ரவரி 11) எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மக்களவையில் உரையாற்றினார்.  

அமெரிக்கா - இந்தியா இடையே கடந்த வாரம் ஏற்பட்ட வர்த்தக ஒப்பந்தம் குறித்து ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்துள்ளார்.

மக்களவையில் ராகுல் காந்தி பேசியதாவது, "நீங்கள் இந்தியாவை விற்றுவிட்டீர்கள். இந்தியாவை விற்றதில் உங்களுக்கு வெட்கமில்லையா? நீங்கள் எங்கள் தாய் பாரத மாதாவை விற்றுவிட்டீர்கள்.

சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், பிரதமர் பலனில்லாமல் இந்தியாவை விற்க மாட்டார் என்பது எனக்குத் தெரியும். அவர் ஏன் இந்தியாவை விற்றார் என்பது உங்களுக்குத் தெரியுமா? ஏனென்றால் அவர்கள் அவரது கழுத்தைப் பிடித்திருக்கிறார்கள். பிரதமரின் கண்களில் பயத்தைக் காணலாம். 

ஒன்று அதானி மீதான அமெரிக்க வழக்கு, மற்றொன்று இன்னும் ரகசியமாக வைக்கப்பட்டுள்ள 'எப்ஸ்டீன் கோப்புகள்'. 30 லட்சம் கோப்புகள் இன்னும் வெளியாகவில்லை, அதுவே பிரதமரின் பயத்திற்கு காரணம்.

அனில் அம்பானி என்ற ஒரு தொழிலதிபர் இருக்கிறார், அவர் ஏன் இன்னும் சிறையில் அடைக்கப்படவில்லை? காரணம், எப்ஸ்டீன் கோப்புகளில் அவரது பெயர் உள்ளது.

அவரை எப்ஸ்டீனுக்கு அறிமுகப்படுத்திய ஹர்தீப் புரியிடமும் நான் கேட்க விரும்புகிறேன். அவரை யார் அறிமுகப்படுத்தினார்கள் என்பது எனக்குத் தெரியும், ஹர்தீப் புரியிடமும் அவரை யார் அறிமுகப்படுத்தினார்கள் என்பது எனக்குத் தெரியும். 

மத்திய அரசு அமெரிக்காவுடன் மேற்கொண்டுள்ள ஒப்பந்தத்தின் டிஜிட்டல் வர்த்தக விதிகள் இந்தியாவின் 21-ஆம் நூற்றாண்டு எதிர்காலத்தை அடகு வைக்கிறது. இதன்மூலம் டிஜிட்டல் வர்த்தக விதிகளின் மீதான கட்டுப்பாட்டை இந்தியா இழந்துவிட்டது.

இந்தியர்களின் தரவுகளை இந்தியாவிலேயே சேமிக்க வேண்டிய அவசியமில்லை என்ற நிலை உருவாகியுள்ளது. ஒப்பந்தம் மூலம் இந்தியர்களின் தரவுகள் தடையின்றி அமெரிக்காவிற்குச் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளது.

21-ஆம் நூற்றாண்டில் இந்தியாவின் மிகப்பெரிய சொத்து அதன் மக்களின் தரவுகள் தான். அமெரிக்காவின் டாலரை பாதுகாக்க வேண்டுமானால், அவர்களுக்கு இந்தியர்களின் தரவு தேவை. அந்த வலிமையை இந்தியா பயன்படுத்தத் தவறிவிட்டது.

ஒரு வேலை இந்தியா கூட்டணி அமெரிக்காவுடன் டிரம்ப் உடன் பேச்சுவார்த்தை நடத்தியிருந்தால், பின்வரும் நிபந்தனைகளை முன்வைத்திருப்போம்:

டிரம்ப் அவர்களே, உங்கள் டாலரைப் பாதுகாக்க நீங்கள் விரும்புகிறீர்கள் என்பதை நாங்கள் அறிவோம். உங்கள் டாலரைப் பாதுகாப்பதற்கான மிகப்பெரிய சொத்து இந்திய மக்களிடம் உள்ள தரவுகள்.

எங்கள் மக்களின் தரவுகளை நீங்கள் பெற விரும்பினால், எங்களைச் சமமானவர்களாகக் கருதிப் பேசுங்கள். எங்களை உங்களது வேலையாட்களைப் போல நடத்தாதீர்கள்.

எங்கள் நாட்டின் எரிசக்தி பாதுகாப்பு எங்களுக்கு மிக முக்கியமானது. எந்தச் சூழ்நிலையிலும் அதை நாங்கள் விட்டுக்கொடுக்க மாட்டோம்.

உங்களுக்கு உங்கள் நாட்டு விவசயிகளின் வாக்குகள் வேண்டும் என்பதை நாங்கள் புரிந்துகொள்கிறோம். உங்கள் விவசாயிகளைப் பாதுகாக்க வேண்டிய தேவை உங்களுக்கு இருப்பதைப் போலவே, எங்கள் விவசாயிகளைப் பாதுகாக்க வேண்டிய கடமை எங்களுக்கும் உண்டு.

இந்தியாவுடனான பேச்சுவார்த்தையில் எங்களை ஒருபோதும் பாகிஸ்தானுடன் சமமாக வைத்துப் பார்க்காதீர்கள். நாங்கள் ஒரு தன்னாட்சி கொண்ட வல்லரசு என்பதை அங்கீகரித்து சமமாகப் பேசுங்கள் என்று கூறியிருப்போம். 

ஆனால் மத்திய அரசு அமெரிக்காவுடன் மேற்கொண்டுள்ள புதிய டிஜிட்டல் வர்த்தக ஒப்பந்தம், இந்தியர்களின் தரவுகளைப் பாதுகாப்பதில் தோல்வியடைந்துவிட்டது. 

சீனாவுடனான போட்டியில் இந்தியாவின் மிகப்பெரிய ஆயுதம் நமது மக்களின் தரவுகள் தான். அதை அமெரிக்காவிடம் ஒப்படைப்பதன் மூலம் பிரதமர் மோடி இந்தியாவின் எதிர்காலத்தைச் சரணடையச் செய்துள்ளார்" என்று தெரிவித்தார். 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com