போலி மருத்துவர் இதய அறுவை சிகிச்சை செய்ததில் 7 பேர் உயிரிழப்பு.. பகீர் மோசடி

பிரட்டன் நாட்டைச் சேர்ந்த பிரபல இதயவியல் நிபுணரான என்.ஜான் கெம் எனக் கூறி ஒருவர் போலி ஆவணங்கள் மூலம் மருத்துவராக சேர்ந்துள்ளார்.சம்பந்தப்பட்ட மருத்துவமனைக்கு ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் நிதி கிடைத்து வருகிறது
போலி மருத்துவர் இதய அறுவை சிகிச்சை செய்ததில் 7 பேர் உயிரிழப்பு.. பகீர் மோசடி
Published on

மத்தியப் பிரதேசத்தில் ஒரு போலி மருத்துவர் நோயாளிகளுக்கு இதய அறுவை சிகிச்சை செய்ததில் 7 பேர் உயிரிழந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

மத்தியப் பிரதேசத்தின் டாமோ நகரில் உள்ள ஒரு தனியார் மிஷனரி மருத்துவமனையில், பிரட்டன் நாட்டைச் சேர்ந்த பிரபல இதயவியல் நிபுணரான என்.ஜான் கெம் எனக் கூறி ஒருவர் போலி ஆவணங்கள் மூலம் மருத்துவராக சேர்ந்துள்ளார். பொறுப்பேற்ற பின் ஒரு மாதத்திலேயே இவர் இதய அறுவை சிகிச்சை செய்த 7 பேர் குறுகிய காலத்தில் உயிரிழந்தனர்.

மாவட்ட அதிகாரிகள் நடத்திய விசாரணையில் இவர் போலி மருத்துவர் என்பதும், இவரின் உண்மை பெயர் நரேந்திர விக்ரமாதித்ய யாதவ் என்பது தெரியவந்தது.

அந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிலர் அவர் மீதுள்ள சந்தேகத்தினால் ஜபால்பூரிலுள்ள மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்றதும், அவர் மீது ஐதராபாத்தில் ஏற்கனவே ஒரு வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதும் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தமோ மாவட்டத்தின் குழந்தைகள் நல ஆணையத்தின் தலைவர் தீபக் திவாரி கூறுகையில், அவர் மேற்கொண்ட அறுவைச் சிகிச்சையினால் பலியானவர்களின் அதிகாரப்பூர்வ எண்ணிக்கைதான் 7 எனவும் உண்மையான எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் எனக் கூறியுள்ளார்.

தேசிய மனித உரிமைகள் ஆணைய உறுப்பினர் பிரியங்க் கனுங்கோ கூறுகையில், சம்பந்தப்பட்ட மருத்துவமனைக்கு ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் நிதி கிடைத்து வருகிறது. இது மிகவும் தீவிரமான விஷயம் என்றும், இது தீவிரமாக விசாரிக்கப்பட்டு வருவதாகவும் கூறினார்.

குற்றம் சாட்டப்பட்டவர் இன்னும் கைது செய்யப்படவில்லை, தப்பியோடிய அவரை மாவட்ட நிர்வாகமும் காவல்துறையும் அவரைத் தேடி வருகின்றனர். இதற்கிடையே அவருக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் வலியுறுத்தி வருகின்றனர். 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com