தண்டவாளத்தில் படுத்து ரெயில்களை முடக்கிய 'மீனவர்கள்..' மறியலால் காரைக்காலில் பரபரப்பு

இதில் 3 மீனவர்களுக்கு காயம் ஏற்பட்டு இலங்கையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். நாளை காரைக்கால் மாவட்டத்தில் கடையடைப்பு போராட்டம் நடத்தப் போவதாக மீனவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
தண்டவாளத்தில் படுத்து ரெயில்களை முடக்கிய 'மீனவர்கள்..' மறியலால் காரைக்காலில் பரபரப்பு
Published on

புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டத்தில், கடந்த ஜனவரி 27-ந் தேதி, காரைக்கால் மீன் பிடி துறைமுகத்திலிருந்து, காரைக்கால் கிளிஞ்சல் மேட்டை சேர்ந்த 13 மீனவர்களை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி, மீனவர்கள் மீது இலங்கை கடற்படை அராஜக முறையில் துப்பாக்கி சூடு நடத்தி கைது செய்தனர்.

இதில் 3 மீனவர்களுக்கு காயம் ஏற்பட்டு இலங்கையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதில் மீனவர் செந்தமிழ் காலில் பயங்கர அடிபட்டு காலை அகற்றும் நிலைக்கும், மணிகண்டன் கண் பறிபோகும் நிலைக்கும், மற்றொருவர் லேசான காயத்துடனும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் காரைக்கால் மீனவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்திய இலங்கை கடற்படையை கண்டித்தும், காயப்பட்டு இலங்கை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் 3 மீனவர்களை மேல் சிகிச்சை செய்ய விடுவிக்க வலியுறுத்தியும், இலங்கையில் உள்ள தங்களது படகுகளை விடுதலை செய்ய வலியுறுத்தியும், காரைக்கால் மாவட்டத்தில் உள்ள 11 மீனவ கிராமத்தை சேர்ந்த மீனவர்கள், கடந்த 11-ந் தேதி முதல் முதல் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

4-வது நாள் போரட்டமாக, கடற்கரை சாலையில் கண்டன ஆர்ப்பாட்டம் மற்றும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

காரைக்கால் மீனவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்திய இலங்கை கடற்படையை கண்டித்து, காரைக்கால் மாவட்ட 11 மீனவ கிராமத்தை சேர்ந்த மீனவர்கள், இன்று 7-வது நாள் போராட்டமாக, காரைக்கால் ரெயில் நிலையத்தில், வேளாங்கண்ணி ரெயில் முன்பு மீனவர்கள் குடும்பத்தோடு தண்டவாளத்தில் படுத்து போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

இதனை தொடர்ந்து ரெயில்வே போலீசார் மற்றும் காரைக்கால் மாவட்ட போலீசார் மீனவர்களிடம் சமாதானம் பேசி ஒவ்வொருவரையும் தனித்தனியாக தண்டவாளத்தை விட்டு அகற்றி ரெயில் செல்ல அனுமதித்தனர்.

இதனால் ரெயில் 30 நிமிடம் தாமதமாக சென்றது. மேலும் ரெயில் நிலையத்தை ஒட்டிய தோமாஸ் அருள் வீதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

தங்களது கோரிக்கைகளுக்கு மத்திய, மாநில மற்றும் இலங்கை அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், நாளை காரைக்கால் மாவட்டத்தில் கடையடைப்பு போராட்டம் நடத்தப் போவதாக மீனவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

மீனவர்களின் தொடர் போராட்டம் காரணமாக காரைக்காலில் 400-க்கு மேற்பட்ட விசைப்படகுகள் காரைக்கால் மீன்பிடி துறைமுகத்தில் பாதுகாப்பாக நிறுத்தப்பட்டுள்ளது. மீன் விற்பனை இல்லாததால் மீன்பிடி துறைமுகம் வெறிச்சோடி காணப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com