search icon
என் மலர்tooltip icon

    கள்ளக்குறிச்சி

    • லாரியை சோதனை செய்தபோது பெட்டி பெட்டியாக மதுபாட்டில்கள் இருந்தன.
    • 4 பேர் போலீசாரின் பிடியில் சிக்கினர்.

    உளுந்தூர்பேட்டை:

    புதுவையில் இருந்து மினிலாரி மற்றும் காரில் மதுபாட்டில்கள் கடத்தி வருவதாக கள்ளக்குறிச்சி போலீஸ் சூப்பிரண்டு சமய்சிங் மீனாவுக்கு ரகசிய தகவல் வந்தது.

    இதையடுத்து அவரது உத்தரவின் பேரில், மதுவிலக்கு அமலாக்க பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு தமிழ்வாணன் மேற்பார்வையில் உளுந்தூர்பேட்டை மதுவிலக்கு பிரிவு இன்ஸ்பெக்டர் ஜெயலட்சுமி, சப்-இன்ஸ்பெக்டர் அலெக்ஸ் மற்றும் போலீசார் இன்று காலை உளுந்தூர்பேட்டை அருகே செங்குறிச்சி சுங்கசாவடியில் வாகன சோதனையில் ஈடுப்பட்டனர்.

    அப்போது அந்த வழியாக வந்த லாரியை போலீசார் தடுத்த நிறுத்த முயன்றனர். ஆனால் லாரி நிற்காமல் அதிவேகமாக சென்றது. இதனால் சந்தேகமடைந்த போலீசார் அந்த லாரியை பின்னால் ஜீப்பில் விரட்டி சென்றனர். சிறிது தூரத்தில் அந்த மினிலாரி மற்றும் காரை மடக்கி பிடித்தனர்.

    அப்போது லாரி மற்றும் காரில் வந்த 2 பேர் தப்பி ஓடிவிட்டனர். 4 பேர் போலீசாரின் பிடியில் சிக்கினர். பின்னர் லாரியில் சோதனை நடத்திய போது அதில் பெட்டி பெட்டியாக மதுபாட்டில்கள் இருந்தன.

    அந்த மதுபாட்டில்கள் புதுவையில் இருந்து தமிழக பகுதிக்கு கடத்தி செல்வது விசாரணையில் தெரியவந்தது. மதுபாட்டில்களின் மொத்த மதிப்பு ரூ. 30 லட்சமாகும். மதுபாட்டில்கள் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய லாரியை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    மதுபாட்டில்களை கடத்தி வந்த புதுவை அரும்பார்த்தபுரம் பகுதியை சேர்ந்த சக்திவேல்(வயது42), புதுவை ஆண்டியார்பாளையம் பகுதியை சேர்ந்த அண்ணாதுரை(46),சதீஷ் (31) மற்றும் பண்ருட்டி தட்டாம்பாளையத்தை சேர்ந்த ரங்கா(29) ஆகிய 4 பேரை கைது செய்தனர். தப்பியோடிய 2 பேரை போலீசார் தொடர்ந்து தேடி வருகின்றனர்.

    • உளுந்தூர்பேட்டை அருகேயுள்ள கெடிலம் மேம்பாலம் அருகேயுள்ள கிராசிங் ரோட்டை வேன் கடந்த போது, தடுப்பு கட்டையில் மோதி கவிழ்ந்தது.
    • சாலை அருகே கவிழ்ந்த வேனை அப்புறப்படுத்திய போலீசார், போக்குவரத்தை சீர்செய்து, விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    உளுந்தூர்பேட்டை:

    திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியை சேர்ந்த 15 பேர் கடந்த சில தினங்களுக்கு முன்பாக ஊட்டிக்கு ஒரு வேனில் சுற்றுலா சென்றனர். இந்த வேனை கும்மிடிப்பூண்டியை சேர்ந்த மோகன் (வயது 45) என்பவர் ஓட்டிச் சென்றார்.

    ஊட்டியில் பல்வேறு சுற்றுலா தளங்களை கண்டு மகிழ்ந்த அவர்கள் பல்வேறு கோவில்களுக்கு சென்று சாமி தரிசனம் செய்துவிட்டு சுற்றுலாவை முடித்து கொண்டு நேற்று இரவு வீட்டிற்கு புறப்பட்டனர்.

    இன்று அதிகாலை 5.30 மணிக்கு இந்த வேன், உளுந்தூர்பேட்டை அருகேயுள்ள கெடிலம் மேம்பாலம் அருகேயுள்ள கிராசிங் ரோட்டை கடந்த போது, தடுப்பு கட்டையில் மோதி கவிழ்ந்தது. இதில் வேனுக்குள் சிக்கியிருந்தவர்கள் அலறல் சத்தம் போட்டனர். இதனை கேட்டு அவ்வழியே சென்றவர்கள் வேனில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

    மேலும், தகவல் அறிந்த திருநாவலூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரபாகரன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் அஷ்டலட்சுமி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். விபத்தில் படுகாயமடைந்த வேன் டிரைவர் மோகன், அதில் பயணம் செய்த கவிதா (35), பிரபாகரன் (40), லட்சுமி (35), புகழேந்தி (50), ஆன்டிரியா (40) ஆகியோர் படுகாயமடைந்தனர். மற்றவர்களுக்கு லேசான காயம் ஏற்பட்டது.

    இவர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். மாற்று வாகனம் மூலம் கும்மிடிப்பூண்டிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். தொடர்ந்து சாலை அருகே கவிழ்ந்த வேனை அப்புறப்படுத்திய போலீசார், போக்குவரத்தை சீர்செய்து, விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஏற்பாடுகளை இந்து சமய அறநிலைத்துறை அதிகாரிகள் செய்து வரும் நிலையில் பந்தக்கால் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.
    • கோவில் பட்டாச்சாரியார் முன்னிலையில்சிறப்பு அபிஷேகம் மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது.

    கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ளது பரிக்கல் லட்சுமி நரசிம்மர் கோவில். பிரசித்தி பெற்ற இக்கோவில் புனரமைக்கப்பட்டு மகாகும்பாபிஷேகம் ஜூன் மாதம் 9-ந் தேதி நடைபெற உள்ளது.

    இதற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலைத்துறை அதிகாரிகள் செய்து வரும் நிலையில் பந்தக்கால் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் உளுந்தூர்பேட்டை தொகுதி எம்.எல்.ஏ. மணிக்கண்ணன் கலந்து கொண்டு பந்தக்கால் நட்டு வைத்து நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். கோவில் பட்டாச்சாரியார் முன்னிலையில்சிறப்பு அபிஷேகம் மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கோவில் செயலர் மதனா, ஊராட்சி மன்ற தலைவர் தண்டபாணி, முன்னாள் மாவட்ட கவுன்சிலர் பத்மநாபன் மற்றும் கிராம மக்கள், கோவில் பணியாளர்கள், விழா குழுவினர் கலந்து கொண்டனர்.

    • நாகர்கோவிலில் இருந்து சென்னை நோக்கி வந்த ஆம்னி பேருந்து விபத்து.
    • விபத்தில் சிக்கியவர்களை மீட்பு குழுவினர் விரைந்து வந்து மீட்டனர்.

    கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகே ஆம்னி பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

    நாகர்கோவிலில் இருந்து சென்னை நோக்கி வந்த ஆம்னி பேருந்து சாலையில் தலைகீழாகக் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

    இந்த விபத்தில் சிக்கி 15 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்பு குழுவினர் படுகாயமடைந்தவர்களை மீட்டனர்.

    அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கொடைக்கானலில் இருந்து திருவண்ணாமலை நோக்கி வந்து கொண்டிருந்த வேன், கார் மீது நேருக்கு நேர் மோதியது.
    • இந்துஜா, அம்பிகாபதி, அனிதா ஆகியோர் படுகாயமடைந்தனர்.

    திருக்கோவிலூர்:

    ஈரோடு மாவட்டத்தை சேர்ந்தவர்கள் வடிவேல், மோகன்ராஜ், ஜோதி, இந்துஜா, அம்பிகாபதி, அனிதா. இவர்கள் 6 பேரும் திருவண்ணாமலைக்கு சென்று கிரிவலம் முடித்து இன்று அதிகாலை காரில் புறப்பட்டனர். இந்த கார் தியாகதுருகம் சாலையில் உள்ள பொன்னியந்தல் அருகே அதிகாலை 6 மணிக்கு சென்று கொண்டிருந்தது.

    அப்போது கொடைக்கானலில் இருந்து திருவண்ணாமலை நோக்கி வந்து கொண்டிருந்த வேன், கார் மீது நேருக்கு நேர் மோதியது. இதில் காரின் முன்புறம் அப்பளம் போல் நொறுங்கி, அதில் பயணம் செய்த வடிவேல், மோகன்ராஜ், ஜோதி ஆகியோர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். மேலும், இந்துஜா, அம்பிகாபதி, அனிதா ஆகியோர் படுகாயமடைந்தனர். அவ்வழியே சென்றவர்கள் காயமடைந்தவர்களை மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    தகவல் அறிந்த திருக்கோவிலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். விபத்தில் பலியான 3 பேரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், வேன் ஓட்டுனர் திருவண்ணாமலை கோரிமேட்டு தெருவை சேர்ந்த ஜலாலுதீனிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஆத்திரமடைந்த கிராம மக்கள், உளுந்தூர்பேட்டை-சேந்தநாடு நெடுஞ்சாலையில் காலிக் குடங்களுடன் இன்று சாலைமறியலில் ஈடுபட்டனர்.
    • 2 நாட்களுக்குள் குடிநீர் பிரச்சனையை தீர்ப்பதாகவும், ஊராட்சி தலைவர் மீது நடவடிக்கை எடுக்க உயரதிகாரிகளுக்கு பரிந்துரைப்பதாகவும் போலீசார் உறுதி கூறினர்.

    திருநாவலூர்:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை தாலுக்கா திருநாவலூர் அருகே கூ.கள்ளக்குறிச்சியில் கடந்த சில நாட்களாக குடிநீர் வரவில்லை. இதனால் இப்பகுதியை சேர்ந்த கிராம மக்கள் அருகேயுள்ள பகுதிகளுக்கு சென்று குடிநீர் பிடித்து பயன்படுத்தி வருகின்றனர். இது தொடர்பாக கிராம பஞ்சாயத்து தலைவர் கொளஞ்சியிடம் பொதுமக்கள் புகார் அளித்தனர். தேர்தல் முடிந்தவுடன் சரி செய்வதாக பொதுமக்களிடம் அவர் கூறியுள்ளார்.

    இந்த நிலையில் பாராளுமன்ற தேர்தல் முடிந்து 2 நாட்கள் ஆகியும், குடிநீர் கிடைக்க தேவையான நடவடிக்கையை ஊராட்சி தலைவர் எடுக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள், உளுந்தூர்பேட்டை-சேந்தநாடு நெடுஞ்சாலையில் காலிக் குடங்களுடன் இன்று காலை 7 மணிக்கு சாலைமறியலில் ஈடுபட்டனர்.

    இத்தகவல் அறிந்து ஆத்திரமடைந்த ஊராட்சி தலைவர் கொளஞ்சி, சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றார். அங்கு சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் தகராறில் ஈடுபட்டு, ஆபாசமாக திட்டியதாகவும், சாலையில் இருந்த காலிக்குடங்களை எட்டி உதைத்ததாகவும் கூறப்படுகிறது. இருந்த போதும் பொதுமக்கள் தொடர்ந்து சாலைமறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு ஒரு மணி நேரத்திற்கும் மேல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    தகவல் அறிந்து விரைந்து சென்ற திருநாவலூர் இன்ஸ்பெக்டர் குமார், சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்தராஜ், பிரபு மற்றும் போலீசார் மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும், ஊராட்சி செயலாளரையும் அங்கு வரவழைத்தனர். 2 நாட்களுக்குள் குடிநீர் பிரச்சனையை தீர்ப்பதாகவும், ஊராட்சி தலைவர் மீது நடவடிக்கை எடுக்க உயரதிகாரிகளுக்கு பரிந்துரைப்பதாகவும் போலீசார் உறுதி கூறினர். இதனையேற்ற பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

    குடிநீர் கேட்டு சாலைமறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் ஊராட்சி தலைவர் தகராறில் ஈடுபட்டது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • தந்தை இன்னும் 2 நாட்களுக்கு வீட்டை அடமானம் வைத்து பணத்தை கொடுப்பதாக தெரிவித்துள்ளார்.
    • ஆன்லைன் சூதாட்டத்தால் வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது

    திருவெண்ணைநல்லூர்:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள ஏரி வண்டி பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவரது மகன் ஜெயராமன் (வயது29). இவர் டிப்ளமோ படிப்பை முடித்துவிட்டு ஐதராபாத்தில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார்.

    அங்கு ஆன்லைன் சூதாட்டம் விளையாடி 18 லட்சம் இழந்துள்ளார். பணம் கொடுத்தவர்கள் பல்வேறு கோணத்தில் ஜெயராமனை நெருக்கடி செய்யவே கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஐதராபாத்திலிருந்து வீட்டிற்கு வந்துள்ளார். வீட்டுக்கு வந்து தனது தந்தையிடம் நான் ஆன்லைன் சூதாட்டத்தில் 18 லட்சத்தை இழந்து உள்ளேன் பணத்தை கட்டாவிட்டால் என்னை போலீசில் சிக்க வைத்து விடுவார்கள். என்னை கைது செய்து விடுவதாக மிரட்டுகிறார்கள் என கூறியுள்ளார். அவரது தந்தை இன்னும் 2 நாட்களுக்கு வீட்டை அடமானம் வைத்து பணத்தை கொடுப்பதாக தெரிவித்துள்ளார்.

    இந்நிலையில் நேற்று இரவு 9 மணியிலிருந்து ஜெயராமன் தனியாக யாரிடமோ போனில் பேசிக் கொண்டிருந்தார் கடைசியாக அவரது அண்ணனிடம். நான் ரெயிலில் அடிபட்டு சாகப் போகிறேன் என கூறிவிட்டு சரியாக 9.50 மணியில் திருச்சியில் இருந்து சென்னை நோக்கி வந்த வந்தே பாரத் ரெயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். இதனால் வந்தே பாரத் ரெயில் 15 நிமிடம் நின்றது. வந்தே பாரத் ரெயில் டிரைவர் ரெயில்வே அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்துவிட்டு மீண்டும் ரெயில் கிளப்பி சென்னை நோக்கி சென்றார்.

    தகவல் அறிந்த விருத்தாசலம் ரெயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து ஜெயராமன் உடலை மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். ஆன்லைன் சூதாட்டத்தால் வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • எங்கு தேடினாலும் இதுபோன்ற உண்மையான பாசமான தொண்டர்களை பார்க்க முடியாது.
    • முன்னதாக அ.தி.மு.க. வேட்பாளர் குமரகுரு விஜயகாந்த் குறித்து பேசிய போது அவரும் கண் கலங்கினார்.

    ரிஷிவந்தியம்:

    கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் குமரகுருவை ஆதரித்து தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் நேற்று ரிஷிவந்தியம் சட்டமன்ற தொகுதி வாணாபுரத்தில் நடந்த தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பேசினார்.

    ரிஷிவந்தியம் வந்த எனக்கு தலைவர் விஜயகாந்த் வாழ்ந்த நாட்கள் தான் ஞாபகம் வருகிறது. கேப்டன் விஜயகாந்த் மக்களை சந்தித்து எண்ணற்ற திட்டங்களை நிறைவேற்றி இருக்கிறார். விஜயகாந்த் மறைவிற்கு பிறகு பொதுச்செயலாளராக பதவி ஏற்ற பிறகு ரிஷிவந்தியம் மக்களை சந்திக்க வந்துள்ளேன்.

    நான் எந்த தொகுதிக்கு சென்றாலும் தைரியமாக பேசுவேன். ஆனால் கேப்டன் விஜயகாந்த் வாழ்ந்த இந்த பூமியை நிச்சயமாக என்னால் மறக்க முடியவில்லை. எங்கு தேடினாலும் இதுபோன்ற உண்மையான பாசமான தொண்டர்களை பார்க்க முடியாது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    பொதுக்கூட்டத்தில் விஜயகாந்த் செய்த திட்டங்கள் குறித்து பேசிய போது திடீரென அவர் தேம்பி, தேம்பி அழ தொடங்கினார். இதைப்பார்த்த அங்கிருந்த தொண்டர்களின் கண்களிலும் கண்ணீர் வரத் தொடங்கியது. பின்னர் அவர் தனது அழுகையை அடக்கிக் கொண்டு மீண்டும் தனது பேச்சை தொடங்கினார். முன்னதாக அ.தி.மு.க. வேட்பாளர் குமரகுரு விஜயகாந்த் குறித்து பேசிய போது அவரும் கண் கலங்கினார்.

    • சங்கராபுரத்திலிருந்து திருக்கோவிலூர் நோக்கி வந்த லோடு வாகனம் ஒன்றை நிறுத்தி சோதனை மேற்கொண்டனர்.
    • உரிய ஆவணமின்றி பணத்தை எடுத்துச் சென்றதால் பறக்கும் படை அதிகாரிகள் பணத்தை பறிமுதல் செய்து வாணாபுரம் தாசில்தார் குமரனிடம் ஒப்படைத்தனர்.

    சங்கராபுரம்:

    பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு தேர்தல் நன்னடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்த நிலையில், உரிய ஆவணமின்றி ரூ.50 ஆயிரத்திற்கு மேல் யாரும் எடுத்துச் செல்லக்கூடாது என அறிவுறுத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து ரிஷிவந்தியம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மாடாம்பூண்டி கூட்டு ரோட்டில் வேளாண்மை உதவி இயக்குனர் புஷ்பராணி தலைமையிலான பறக்கும் படை அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது சங்கராபுரத்திலிருந்து திருக்கோவிலூர் நோக்கி வந்த லோடு வாகனம் ஒன்றை நிறுத்தி சோதனை மேற்கொண்டனர். அதில் உரிய ஆவணமின்றி 1 லட்சத்து 68 ஆயிரம் ரூபாய் இருந்தது தெரியவந்தது. மேலும் அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில், உளுந்தூர்பேட்டை தாலுக்கா எறையூர் கிராமத்தைச் சேர்ந்த செவத்தான்(51), மற்றும் அவரது உறவினரான டிரைவர் சின்னப்பன் (36) என்பதும், அவர்கள் இருவரும் ஆடு வியாபாரிகள் என்பதும் தெரியவந்தது.

    அவர்கள் 28 ஆடுகளை அத்தியூர் வார சந்தையில் விற்று அதன் மூலம் கிடைத்த பணத்தை கொண்டு சென்றது விசாரணையில் தெரியவந்தது. இருப்பினும் உரிய ஆவணமின்றி பணத்தை எடுத்துச் சென்றதால் பறக்கும் படை அதிகாரிகள் அப்பணத்தை பறிமுதல் செய்து வாணாபுரம் தாசில்தார் குமரனிடம் ஒப்படைத்தனர்.

    • கடந்த 2021-ம் ஆண்டு நடந்த தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் இவருக்கு போட்டியிட வாய்ப்பு வழங்கவில்லை.
    • பிரபுவின் நெருங்கிய உறவினர்கள் வீடு, அவரது தொழில் நிறுவனங்கள் என 9 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.

    உளுந்தூர்பேட்டை:

    கள்ளக்குறிச்சி தொகுதி அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. பிரபு வீடு மற்றும் தொழில் நிறுவனங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் இன்று அதிகாலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர்.

    கள்ளக்குறிச்சி தொகுதிய அ.தி.மு.க. எம்.எல்.ஏ.வாக பிரபு கடந்த 2016-21-ல் பதவி வகித்தார். இவரது தந்தை அய்யப்பா அ.தி.மு.க.வின் தியாகதுருகம் முன்னாள் ஒன்றிய செயலாளராக பதவி வகித்தார். இவரது தாயார் தையல்நாயகி அய்யப்பா தியாகதுருகம் ஒன்றியத்தின் முன்னாள் சேர்மனாக பதவி வகித்தார். இதில் பிரபு தமிழ்நாடு, கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் பல்வேறு பகுதியில் தொழில் நிறுவனங்கள் நடத்தி வருகிறார்.

    கடந்த 2021-ம் ஆண்டு நடந்த தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் இவருக்கு போட்டியிட வாய்ப்பு வழங்கவில்லை. இதனைத் தொடர்ந்து இவர் தினகரன் தலைமையிலான அ.ம.மு.க.வில் இணைந்து போட்டியிட்டார். அ.தி.மு.க. வேட்பாளர் செந்தில்குமாரிடம் தோல்வி அடைந்தார். இதனைத் தொடர்ந்து அ.ம.மு.க.வில் இருந்து விலகி முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க.வில் மீண்டும் தன்னை இணைத்துக்கொண்டார். இந்த நிலையில் வருமானத்திற்கு அதிகமான சொத்துக்கள் உள்ளதாக முன்னாள் எம்.எல்.ஏ., பிரபு மீது பல்வேறு புகார்கள் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாருக்கு வந்தது.

    இதையடுத்து கள்ளக்குறிச்சி மாவட்ட துணை போலீஸ் சூப்பிரண்டு சத்தியராஜ் தலைமையிலான லஞ்ச ஒழிப்பு போலீசார் இன்று காலை 5.30 மணி முதல் தியாகதுருகத்தில் உள்ள முன்னாள் எம்.எல்.ஏ., பிரபு வீட்டில் சோதனை மேற்கொண்டனர்.

    தொடர்ந்து அவரது பெற்றோர் வசிக்கும் அய்யப்பா வீடு மற்றும் பிரபுவின் நெருங்கிய உறவினர்கள் வீடு, அவரது தொழில் நிறுவனங்கள் என 9 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். இதில் முன்னாள் எம்.எல்.ஏ., பிரபுவின் வீட்டிலிருந்து கணக்கில் காட்டப்படாத சொத்து ஆவணங்கள், நகை மற்றும் பணம் கைப்பற்றப்பட்டதாக தெரிகிறது.

    லஞ்ச ஒழிப்பு போலீசாரின் சோதனை தொடர்ந்து நடைபெறும் நிலையில், பெங்களூருவில் உள்ள முன்னாள் எம்.எல்.ஏ., பிரபுவின் தொழில் நிறுவனங்களிலும் சோதனை நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிகிறது.

    இந்த திடீர் சோதனையால் கள்ளக்குறிச்சி மாவட்ட அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு நிலவுகிறது. மேலும், கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் உள்ள அ.தி.மு.க. பிரமுகர் பன்னீர்செல்வம் வீட்டில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தியது குறிப்பிடத்தக்கது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தில் விவசாய சங்கப் பிரதிநிதிகள், விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மாவட்ட கலெக்டரிடம் மனு அளித்தனர்.
    • சேஷ நதியின் குறுக்கே உயர்மட்டப்பாலம், சாலைகள் அமைப்பது தொடர்பாக மாவட்ட கலெக்டர் ஆய்வு மேற்கொண்டார்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் கடந்த மாதம் 31-ந் தேதி நடைபெற்ற உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தில் விவசாய சங்கப் பிரதிநிதிகள், விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமாரிடம் மனு அளித்தனர்.

    அதன் அடிப்படையில் திருநாவலூர் ஒன்றியத்தின் மேற்குப் பகுதியான பாதூர் கிராம எல்லையில் சேஷ நதியின் குறுக்கே 2 தடுப்பணை கட்டுவது தொடர்பாகவும், உளுந்தூர்பேட்டை நகரப் பகுதியில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையிலும், கரும்பு விவசாயிகள் செங்கல்வராயன் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் கரும்பு சுமையை ஏற்றிச் செல்ல ஏதுவாகவும், குறிப்பாக செங்குறிச்சி, மதியனூர், நைனாகுப்பம், வண்டிப்பாளையம், பாதூர், டி.ஒரத்தூர், சின்னக்குப்பம் ஆகிய கிராமங்களின் விவசாயப் பொருட்கள் எடுத்துச் செல்வதற்கு ஏதுவாக சேஷ நதியின் குறுக்கே உயர்மட்டப்பாலம், சாலைகள் அமைப்பது தொடர்பாக மாவட்ட கலெக்டர் விவசாயிகள் மற்றும் விவசாய சங்கப் பிரதிநிகளுடன் பச்சை நிறத்துண்டு அணிந்து 3 கி.மீ. தொலைவிற்கு வயல்வெளியில் நடந்தே சென்று ஆய்வு மேற்கொண்டார்.

    முன்னதாக, கள்ளக்குறிச்சி மாவட்ட வேளாண்மை உற்பத்திக்குழு தலைவரின் விவசாய நிலத்தில் சந்தனமரம், செம்மரம், ஈட்டி, வேங்கை உள்ளிட்ட மரக்கன்றுகளை மாவட்ட கலெக்டர் நட்டு தொடங்கி வைத்தார்.

    இந்நிகழ்வில் வேளாண்மை உற்பத்திக்குழு மாவட்ட தலைவர் ஜோதிராமன், விவசாயிகள் மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.

    • பிறந்த பச்சிளம் குழந்தைகள் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருவதற்காக இன்குபேட்டர் வசதி உள்ளது.
    • குழந்தைகளின் தீவிர சிகிச்சை பிரிவான இன்குபேட்டர் சிகிச்சையிலேயே இதுபோன்ற அவல நிலை ஏற்பட்டுள்ளதால் பெற்றோர்கள் பெரும் அதிர்ச்சிக்குள்ளாகினர்.

    கள்ளக்குறிச்சி:

    குறை பிரசவம் அல்லது உடல் எடை குறைவாக பிறந்த குழந்தைகளை வைத்து பாதுகாப்பதற்காக தற்போது அனைத்து ஆஸ்பத்திரிகளிலும் இன்குபேட்டர் வசதிகள் உள்ளன. அதாவது பிரிமெச்சூர் குழந்தைக்கு தேவையான உடல் வெப்பநிலையை பராமரிக்க இன்குபேட்டர் பயன்படுத்தப்படும். இதில் குழந்தையின் ரத்த அழுத்தம், இதயதுடிப்பு, சுவாசம் மற்றும் வெப்பநிலையை கண்காணிக்க சென்சார்கள் பயன்படுத்தப்படும். அந்த வகையில் கள்ளக்குறிச்சி மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியிலும், பிறந்த பச்சிளம் குழந்தைகள் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருவதற்காக இன்குபேட்டர் வசதி உள்ளது.

    ஆனால் அந்த இன்குபேட்டர் எந்திரத்தின் கருவியின் 4 புறத்திலும் இரும்பில் ஆன கால்கள் அமைக்கப்பட்டு, அதை தள்ளிக்கொண்டு செல்வதற்காக சக்கரம் பொருத்தப்பட்டிருக்க வேண்டும். ஆனால் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் உள்ள இன்கு பேட்டரில் 3 பகுதிகளில் மட்டும் சக்கரம் பொருத்தப்பட்டுள்ளது. மீதமுள்ள 1 இடத்தில் சக்கரம் இல்லாததால், அந்த எந்திரத்திற்கு 2 கல் வைத்து முட்டுக்கொடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. குழந்தைகளின் தீவிர சிகிச்சை பிரிவான இன்குபேட்டர் சிகிச்சையிலேயே இதுபோன்ற அவல நிலை ஏற்பட்டுள்ளதால் பெற்றோர்கள் பெரும் அதிர்ச்சிக்குள்ளாகினர். மேலும் மருத்துவக்கல்லூரி பெயர் அளவிற்கு மட்டுமே மருத்துவக் கல்லூரியாக செயல்படுவதாகவும், அங்கு முறையாக சிகிச்சை அளிப்பதில்லை எனவும் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

    இதற்கிடையே இன்குபேட்டரில் ஒரு குழந்தை வைத்திருக்கும் நிலையில், அதை தாங்கி நிற்கும் கம்பியில் ஒரு பகுதியில் மட்டும் கல் வைத்து முட்டுக்கொடுத்துள்ள வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

    ×