search icon
என் மலர்tooltip icon

    கடலூர்

    • 40 தொகுதியும் வென்ற தி.மு.க. கூட்டணி இனிமேலாவது மக்களுக்கு பயனுள்ளவாறு செயல்பட வேண்டும்.
    • கடந்த 5 ஆண்டு வெளிநடப்பு மட்டுமே செய்தது தி.மு.க .கூட்டணி.

    நெய்வேலி:

    தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பா.ம.க. சார்பில் கடலூர் பாராளுமன்ற தொகுதியில் இயக்குனர் தங்கர் பச்சான் போட்டியிட்டார். ஆனால் அவர் வெற்றி வாய்ப்பை இழந்தார். எனினும் இயக்குனர் தங்கர் பச்சான் கடலூர் பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து வருகிறார்.

    அதன்படி, அவர் நெய்வேலி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட சமட்டிக்குப்பம் புலியூர் சத்திரம் ஆயிப்பேட்டை, வெங்கடாம்பேட்டை, பாச்சாரப்பாளையம், வடக்குத்து, வடக்குமேலூர், இந்திராநகர், 30 வட்டம் அடங்கிய நெய்வேலி நகரம் உள்ளிட்ட 50 மேற்பட்ட கிராமங்களில் மக்களை சந்தித்து நன்றி கூறினார். அப்போது நிருபரிடம் அவர் கூறியதாவது,

    மக்களை சந்தித்து நான் நன்றி சொன்னால் மக்கள் எனக்கு ஆறுதல் கூறுகிறார்கள். என்னை பார்த்து கண்ணீர் விடுகிறார்கள். நான் தோற்றாலும் என் மக்களுக்கு செய்ய வேண்டிய சேவையை தொடர்ந்து செய்து கொண்டே இருப்பேன்.

    40 தொகுதியும் வென்ற தி.மு.க. கூட்டணி இனிமேலாவது மக்களுக்கு பயனுள்ளவாறு செயல்பட வேண்டும். கடந்த 5 ஆண்டு வெளிநடப்பு மட்டுமே செய்தது தி.மு.க .கூட்டணி.

    பாஜக மீதான விரோத போக்கை கைவிடப்பட்டால் மட்டுமே தமிழகத்திற்கு நல்லது நடக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. அரசு 85 சதவீதம் வாக்குறுதிகளை நிறைவேற்றி உள்ளது.
    • மாதந்தோறும் 200 புதிய பஸ்கள் பயன்பாட்டிற்கு வருவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் நெய்வாசல் கிராம வெள்ளாற்றில், கடந்த 2015-ம் ஆண்டு அ.தி.மு.க. ஆட்சியில் அரசு மணல் குவாரி செயல்பட்டு வந்தது. இதனால் தங்கள் பகுதியின் நீர் ஆதாரம் பாதிப்பதாக குவாரியை மூடக்கோரி, ஆற்றின் மறுகரையில் உள்ள அரியலூர் மாவட்டம், சன்னாசிநல்லூர் கிராம மக்களுடன் அப்போதைய குன்னம் தி.மு.க. எம்.எல்.ஏ.வாக இருந்து வந்த சிவசங்கர் தலைமையில், அனைத்துக் கட்சி சார்பில் முற்றுகைப் போராட்டம் அறிவிக்கப்பட்டு கிராம மக்கள் தடையை மீறி குவாரிக்குள் நுழைந்து அங்கிருந்த வாகனங்களைத் சேதப்படுத்தியதால் போலீசார் தடியடி நடத்தினர். இச்சம்பவத்தில் தற்போதைய போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் உட்பட 37 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணை கடலூர் கோர்ட்டில் நடந்து வருகிறது.

    இந்த நிலையில் அமைச்சர் சிவசங்கர் கடலூர் முதன்மை நீதிமன்ற நடுவர் ஜவகர் முன்னிலையில் ஆஜராகினர். இதனை தொடர்ந்து இவ்வழக்கின் விசாரணையை வருகின்ற ஜூன் மாதம் 25-ந் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார். இதனைத் தொடர்ந்து அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் அளித்த பேட்டியின் விபரம் பின்வருமாறு:-

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. அரசு 85 சதவீதம் வாக்குறுதிகளை நிறைவேற்றி உள்ளது. வெளிமாநில பதிவு எண் கொண்ட ஆம்னி பஸ்கள் இயங்கக்கூடாது என போக்குவரத்து துறை அறிவித்துள்ளது. தற்போது 3 நாட்கள் தொடர் விடுமுறை என்பதால் திங்கட்கிழமை வரை வெளி மாநில பதிவு எண் கொண்ட ஆம்னி பஸ்கள் இயங்குவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு ஆம்னி பஸ்கள் இயக்க முடியாது. இதனை மீறி இயக்கினால் அரசு கையகப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபடும்.

    தமிழகத்திற்கு ஏற்கனவே 2000 புதிய பஸ்கள் வாங்குவதற்கு நிதி ஒதுக்கப்பட்டு, தற்போது 850 புதிய பஸ்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ளது. மேலும் மாதந்தோறும் 200 புதிய பஸ்கள் பயன்பாட்டிற்கு வருவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. இதற்கிடையில் 2200 புதிய பஸ்கள் வாங்குவதற்கு டெண்டர் விடப்பட்டுள்ளது. மேலும் இந்த ஆண்டு புதிதாக 3000 புதிய பஸ்கள் வாங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது. ஆக மொத்தம் தமிழகத்திற்கு புதிதாக 7200 புதிய பஸ்கள் வாங்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு வர நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார். அப்போது மாநகர தி.மு.க. மாநகர செயலாளர் ராஜா, வக்கில்கள், தி.மு.க. நிர்வாகிகள் உடனிருந்தனர். 

    • கோடை வெயில் மற்றும் விவசாய பயன்பாடு காரணமாக வீராணம் ஏரி தண்ணீரின்றி வறண்டது.
    • வீராணம் ஏரியில் இருந்து சென்னைக்கு வினாடிக்கு 62 கன அடி தண்ணீர் அனுப்பப்பட்டு வருகிறது.

    காட்டுமன்னார் கோவில்:

    கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோவில் அருகே லால்பேட்டையில் வீராணம் ஏரி உள்ளது. இந்த ஏரி கடலூர் மாவட்ட மக்களுக்கு மிகப்பெரிய நீர் ஆதாரமாக விளங்கி வருகிறது.

    இந்த ஏரிக்கு சாதாரண காலங்களில் தஞ்சை மாவட்டம் கீழணையில் இருந்து வடவாறு வழியாகவும், மழைக்காலங்களில் வீராணம் ஏரியின் நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்கின்ற மழை நீர் செங்கால் ஓடை, கருவாட்டு ஓடை, வெண்ணங்குழி ஓடை வழியாகவும் தண்ணீர் வரும்.

    இந்த ஏரியின் மொத்த நீர்மட்டம் 47.50 கன அடி ஆகும். ஏரியின் மூலம் சுமார் 44 ஆயிரத்து 856 ஏக்கர் விளை நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

    மேலும் வீராண ஏரியின் நீர்மட்டத்திற்கு ஏற்ப இங்கிருந்து சென்னைக்கு குழாய் மூலம் குடிநீர் அனுப்பப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கோடை வெயில் மற்றும் விவசாய பயன்பாடு காரணமாக வீராணம் ஏரி தண்ணீரின்றி வறண்டது.

    இந்த நிலையில் கீழணையில் இருந்து கடந்த 25-ந்தேதி முதல் வீராணம் ஏரிக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதனால் வறண்டு கிடந்த வீராணம் ஏரியின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர தொடங்கியது.

    இன்று காலை வீராணம் ஏரியின் நீர்மட்டம் 46 அடியாக உயர்ந்தது. ஏரிக்கு வினாடிக்கு 110 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. மேலும் வீராணம் ஏரியில் இருந்து சென்னைக்கு வினாடிக்கு 62 கன அடி தண்ணீர் அனுப்பப்பட்டு வருகிறது.

    தண்ணீர் வரத்து அதிகமாக உள்ளதால் 4 நாளில் ஏரி முழு கொள்ளளவை எட்டும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    • கடந்தாண்டு போதிய அளவு பருவமழை பெய்யாததால், இந்தாண்டு கோடை தொடங்கும் முன்பே, பிப்ரவரி மாதத்தில் வீராணம் வறண்டது.
    • சென்னைக்கு குடிநீர் அனுப்பவது முன்கூட்டியே நிறுத்தப்பட்டது.

    காட்டுமன்னார்கோவில்:

    கடலுார் மாவட்டம், காட்டுமன்னார்கோவில் பகுதியில் வீராணம் ஏரி உள்ளது. இந்த ஏரி மூலம் 45 ஆயிரம் ஏக்கர் விளை நிலங்கள் பாசனம் பெறுவதோடு, சென்னை மக்களின் தாகத்தை தீர்த்து வருகிறது.

    கடந்தாண்டு போதிய அளவு பருவமழை பெய்யாததால், இந்தாண்டு கோடை தொடங்கும் முன்பே, பிப்ரவரி மாதத்தில் வீராணம் வறண்டது. இதனால் சென்னைக்கு குடிநீர் அனுப்பவது முன்கூட்டியே நிறுத்தப்பட்டது. சென்னையில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டதையடுத்து, மேட்டூரில், குறைந்த அளவு நீர் இருப்பு இருந்த நிலையிலும், கல்லணைக்கு தண்ணீர் பெறப்பட்டது. அங்கிருந்து கொள்ளிடம், கீழணை, வடவாறு வழியாக வீராணம் ஏரிக்கு கடந்த 26-ந்தேதி தண்ணீர் கொண்டு வரப்பட்டது. அதையடுத்து, கடந்த 29-ந்தேதி காலை முதல் வினாடிக்கு 18 கன அடி குடிநீர் சென்னைக்கு அனுப்பும் பணி தொடங்கியது.

    இந்நிலையில் தொடர்மழை காரணமாக வீராணம் ஏரிக்கு நீர் வரத்து அதிகரித்து உள்ளது. தற்போது ஏரியின் கொள்ளளவான மொத்த 1,465 மில்லியன் கன அடியில், 640 மில்லியன் கன அடி தண்ணீர் நிரம்பியுள்ளது. இதையடுத்து, சென்னைக்கு அனுப்பும் குடிநீர் அளவும் படிப்படியாக அதிகரிக்கப்பட்டு 54 கனஅடியாக உயர்த்தப்பட்டுள்ளது.

    • நேற்று காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் இருந்தது.
    • இரவு பலத்த இடி மின்னலுடன் கனமழை பெய்தது.

    கடலூர்:

    கடலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் முதல் இடி மின்னலுடன் பலத்த காற்று வீசி மழை பெய்து வந்தது. நேற்று காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் இருந்தது.

    இந்த நிலையில் நேற்று மாலை முதல் லேசான மழை தொடங்கிய நிலையில் இரவு பலத்த இடி மின்னலுடன் கனமழை பெய்தது. இந்த மழை இன்று அதிகாலை வரை விடிய, விடிய பெய்தது.

    மேலும், மழை பெய்ய தொடங்கிய போது பலத்த காற்று வீசியதால் கடலூர் அடுத்த வழிசோதனை பாளையம், ராமாபுரம், புதுக்கு குப்பம், சின்னதானாங்குப்பம் புலியூர், சமிட்டிக்குப்பம் உள்ளிட்ட பல்வேறு கிராமத்தில் சுமார் 1500 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த வாழை மரங்கள் முறிந்து சாய்ந்தன.

    இது குறித்து விவசாயி ஒருவர் கூறுகையில், திடீர் காற்றுடன் கூடிய மழையால் வாழைமரங்கள் முறிந்து சாய்ந்தன. இதனால் அறுவடைக்கு தயாராக இருந்து வந்த வாழைத்தார்கள் வீணாகிப்போனது.

    இதன் காரணமாக ஒரு ஏக்கருக்கு குறைந்தபட்சம் ஒரு லட்சம் முதல் 1.50 லட்சம் வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளது. தமிழக அரசு உரிய முறையில் ஆய்வு செய்து விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என கூறினார்.

    மேலும், கடலூர் அண்ணா விளையாட்டு மைதானத்தில் மழை நீர் தேங்கி தற்போது குலம் போல் காட்சியளிக்கிறது. இதன் காரணமாக நடைபயிற்சி மேற்கொள்ள வந்தவர்கள் திரும்பி சென்றனர். மேலும், மாணவர்களும் விளையாட்டு பயிற்சி மேற்கொள்ளவில்லை. இது மட்டுமின்றி கடலூர் சாலைகளில் மழை நீர் தேங்கி நிற்கிறது. தொடர் மழை காரணமாக வெயிலின் தாக்கம் குறைந்து குளிர்ந்த காற்று வீசி வருவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    கடலூர் மாவட்டத்தில் மழை அளவு மில்லி மீட்டர் அளவில் பின்வருமாறு:-

    கடலூர்-79.2

    வானமாதேவி-72.8

    கலெக்டர் அலுவலகம்-62.6

    வேப்பூர்-53.0

    பண்ருட்டி-49.0

    எஸ்.ஆர்.சி. குடிதாங்கி-46.0

    குப்பநத்தம்-32.8

    விருத்தாசலம்-32.0

    கீழச்செருவாய்-30.0

    காட்டுமயிலூர்-20.0

    வடக்குத்து-16.0

    குறிஞ்சிப்பாடி-15.0

    தொழுதூர்-13.0

    ஸ்ரீமுஷ்ணம்-10.0

    மீ-மாத்தூர்-10.0

    பெல்லாந்துறை-8.4

    சேத்தியாதோப்பு-7.4

    லக்கூர்-6.4

    கொத்தவாச்சேரி-6.0

    பரங்கிப்பேட்டை-5.9

    லால்பேட்டை-4.0

    காட்டுமன்னார்கோயில்-2.4

    சிதம்பரம்-2.0

    அண்ணாமலைநகர்-1.6

    புவனகிரி-1.0

    என கடலூர் மாவட்டத்தில் 586.50 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. 

    • நாளோடை பலாதோப்பில் பலாபழ திருவிழா நேற்று நடந்தது.
    • வருமானத்தை பன்மடங்காகப் பெருக்குவது விளக்கப்பட்டது.

    பண்ருட்டி:

    பண்ருட்டியை அடுத்த கீழ் மாம்பட்டு கிராமத்தில் நாளோடை பலாதோப்பில் பலாபழ திருவிழா நேற்று நடந்தது.

    விழாவில் வேளாண், தோட்டக்கலை திட்டங்கள், பயிர் சாகுபடி, பலா ரகங்கள் குறித்தும், பயன்கள் குறித்தும், மத்திய, மாநில அரசின் பங்களிப்புகள் குறித்து வேளாண் அதிகாரிகள் பேசினர்.

    நிகழ்ச்சியில், பண்ருட்டி பலாவின் சிறப்புகளை அறிந்து கொள்ளவும். பலாவினுடைய இலை, பிஞ்சு, காய், பழம், பழத்தின் ஈக்கு, சுளை, கொட்டை, தொப்புள். மரம் இவைகளை மதிப்புக்கூட்டுதல் செய்து சந்தைப்படுத்துவது, வருமானத்தை பன்மடங்காகப் பெருக்குவது விளக்கப்பட்டது.

    பலாவின் பல்வேறு மதிப்புக் கூட்டப்பட்ட பொருட்கள், கண்காட்சியில் பலாச்சுளை சாறு, பலாவத்தல், பலாச்சுளை, பலாகொட்டை அவியல், பலாச்சுளை அல்வா, பலா பிரியாணி, பலாச்சுளை பனிக்கூழ் (ஐஸ்கிரீம்)ஆகியவை இடம் பெற்றது.

    நாட்டு பலா கன்றுகள், பலா சாக்லேட், பலா பிஸ்கட், பலா பஜ்ஜி இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட மரபு அரிசி, அவல் வகைகள், நாட்டுச் சர்க்கரை, மரசெக்கில் ஆட்டிய எண்ணெய் வகைகள், தின்பண்டங்கள், நாட்டு காய்கறி, கீரை விதைகள், கண்காட்சியில் இடம் பெற்றது. இது பொதுமக்களை மிகவும் கவர்ந்தது. மேலும் மரபு நெல் ரகங்களின் கண்காட்சி மற்றும் மரபு மரங்களின் விதைகள் கண்காட்சி இடம்பெற்றது.

    முடிவில் அதிக சுவையுடைய பலா மற்றும் அதிக எடையுடைய பலாவின் உரிமையாளர் தேர்வு செய்யப்பட்டு பரிசு பொருட்கள் வழங்கி கவுரவிக்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை பண்ருட்டி பலா மேம்பாட்டுக் குழுவினர் செய்திருந்தனர். 

    • தரைப்பாலத்தின் வழியே சென்ற போது விபத்து ஏற்பட்டது தெரியவந்தது.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கடலூர்:

    கடலூர் கலெக்டர் அலுவலகம் எதிரில் தென்பெண்ணையாற்றின் குறுக்கே தரைப்பாலம் உள்ளது. இந்த தரைப்பாலத்தில் கார் ஒன்று நேற்று இரவு சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென இடி, மின்னலுடன் மழை பெய்ததால், டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார், நிலை தடுமாறி, தென்பெண்ணையாற்றில் கவிழ்ந்து தண்ணீரில் மூழ்கியது. இதில் பயணித்த 5 பேர், காரை விட்டு வெளியேறி, தரை பாலத்தில் ஏறி உயிர் தப்பினர்.

    தகவல் அறிந்த ரெட்டிச்சாவடி போலீசார் விரைவாக வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் காரில் பயணம் செய்தவர்கள் கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்த சிவபாலன், சுந்தர் உள்பட 5 பேர் என்பது தெரியவந்தது.

    கடலூரில் நடந்த திருமண விழாவில் கலந்து கொள்வதற்காக வந்துள்ளனர். பின்னர் புதுவை மாநிலம் வில்லியனூருக்கு செல்ல, இந்த தரைப்பாலத்தின் வழியே சென்ற போது விபத்து ஏற்பட்டது தெரியவந்தது. இது குறித்து ரெட்டிச்சாவடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • இந்த ஆண்டு கோடை காலம் தொடங்குவதற்கு முன்பே வீராணம் ஏரி வறண்டு போனது.
    • வீராணம் ஏரியில் உள்ள நீர்வாங்கி நெடுமடத்தில் இருந்து நீர் உறிஞ்சப்பட்டு நெய்வேலிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    சேத்தியாத்தோப்பு:

    கடலூர் மாவட்டத்தின் மிகப்பெரிய நீர் ஆதாரமாக வீராணம் ஏரி விளங்கி வருகிறது. லால்பேட்டையில் அமைந்துள்ள இந்த ஏரி 14 கிலோ மீட்டர் பரப்பளவில் பரந்து விரிந்து 5 கிலோ மீட்டர் அகலம் உடையது. வீராணம் ஏரியின் மொத்த நீர்மட்ட அளவு 47.50 அடி. அதாவது 1461 மில்லியன் கன அடி தண்ணீரை சேமிக்க முடியும். இந்த ஏரி தனது முழுக்கொள்ளவை எட்டினால், இந்த ஏரி கடல் போல் ரம்மியமாக காட்சியளிக்கும்.

    உலகிலேயே மனிதர்களால் வெட்டப்பட்ட மிகப்பெரிய ஏரியான வீராணம் ஏரிக்கு, மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் கல்லணை, கீழணை வந்து வடவாறு வழியாக நீர் வருகிறது. இதுதவிர இந்த ஏரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான அரியலூர், பெரம்பலூர், செந்துறை, ஆண்டிமடம், ஸ்ரீமுஷ்ணம் ஆகிய பகுதிகளில் பெய்யும் மழைநீரும் கருவாட்டு ஓடை, வெண்ணங்குழி ஓடை வழியாக வருகிறது.

    வீராணம் ஏரியின் மூலம் சுமார் 44 ஆயிரத்து 856 ஏக்கர் நிலங்கள் நேரடியாகவும், 40 ஆயிரத்து 526 ஏக்கர் நிலங்கள் மறைமுகமாகவும் பாசன வசதி பெறுகிறது. கோடைகாலத்தில் பெரும்பாலும் இந்த ஏரியில் தண்ணீர் இருக்காது. ஆனால் சென்னைக்கு குடிநீர் கொண்டு செல்வதற்காக, சென்ற ஆண்டுவரை இந்த ஏரியில் கோடை காலத்திலும் தண்ணீர் சேமித்து வைக்கப்பட்டது.

    இவ்வாறு சேமிக்கப்படும் ஏரி நீர், ராட்சத பம்புகள் மூலம் நெய்வேலிக்கு கொண்டு செல்லப்பட்டு சேமிக்கப்படுகிறது. அங்கு ஏரி நீர் சுத்திகரிக்கப்பட்டு சென்னைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. இது தவிர மருவாய், பின்னலூர், வடலூர், சேராக்குப்பம், கரைமேடு போன்ற இடங்களில் ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டு, அதன் மூலமும் சென்னைக்கு குடிநீர் கொண்டு அனுப்பி வைக்கப்பட்டது.

    இந்த ஆண்டு கோடை காலம் தொடங்குவதற்கு முன்பே வீராணம் ஏரி வறண்டு போனது. இதனால் சென்னைக்கு குடிநீர் அனுப்புவதில் சிக்கல் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து கல்லணையில் இருந்து கடந்த சில தினங்களுக்கு முன்பாக விநாடிக்கு 1,200 கன அடி திறந்து விடப்பட்டது. இந்த நீர் கீழணைக்கு வந்தடைந்தது. தொடர்ந்து கீழணையில் இருந்து விநாடிக்கு 200 கன அடிநீர் வீராணம் ஏரிக்கு திறந்து விடப்பட்டது.

    மேலும், இந்த நீர் ஓரிரு நாட்களில் வீராணம் ஏரிக்கு வந்துவிடும் என்று எதிர்பார்த்த நிலையில், ஒரு வார காலம் கழித்து வந்தடைந்தது. அதன்படி வீராணம் ஏரிக்கு 100 கன அடிநீர் வருகிறது. அவ்வாறு வந்த நீரும் பச்சை நிறத்தில் இருந்தது.

    இந்த நீரானது வீராணம் ஏரியில் உள்ள நீர்வாங்கி நெடுமடத்தில் இருந்து நீர் உறிஞ்சப்பட்டு நெய்வேலிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதே போல ஏரியில் அமைக்கப்பட்ட ராட்சத ஆழ்துளை போர்வெல்லில் இருந்தும் நீரை உறிஞ்சி நெய்வேலிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சுத்திகரிக்கப்பட்ட நீரானது சென்னைக்கு அனுப்பும் பணி நேற்று முன்தினம் முதல் தொடங்கியது. அதன்படி முதல் நாள் விநாடிக்கு 10 கன அடிநீர் அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், அது படிப்படியாக உயர்த்தப்பட்டு விநாடிக்கு 30 கன அடி நீர் அனுப்பி வைக்கப்பட்டது. இந்த நிலையில் இன்று விநாடிக்கு 33 கன அடிநீர் சென்னைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

    விவசாய நிலங்களில் இருந்து வடியும் மழைநீரில், அங்கு பயன்படுத்தப்பட்ட பூச்சி கொல்லி மருந்துகளின் படிமங்கள் கலந்து, வீராணம் ஏரி நீரில் கலந்துள்ளதாக, கடந்த சில மாதங்களுக்கு முன்பாக செய்திகள் வெளியானது. இந்த நிலையில் வீராணம் ஏரியில் இருந்து சென்னைக்கு அனுப்பும் நீர் பச்சை நிறத்தில் உள்ளது என்ற செய்தி தற்போது பரவி வருகிறது.

    இதுகுறித்து வீராணம் ஏரியில் பணியில் உள்ள சென்னை மெட்ரோ குடிநீர் அதிகாரி கூறுகையில், வீராணம் ஏரி நீர் குடிப்பதற்கு உகந்ததா என்று தினமும் 3-க்கும் மேற்பட்ட முறை சோதனை செய்யப்பட்டு, ரசாயனம் ஏதும் கலக்கப்படவில்லை என்பதை உறுதி செய்த பின்னரே சென்னைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. ஆகவே இதனால் பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை என்று கூறினார்.

    • கடந்த 17-ந்தேதி மேட்டூர் அணையில் இருந்து வினாடிக்கு 2100 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது.
    • பூதங்குடி பகுதியில் இருந்து மெட்ரோ அதிகாரிகள் தண்ணீரை ஆய்வு செய்து தான் சென்னைக்கு அனுப்பி வருகின்றனர்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டத்தின் மிகப்பெரிய நீர் ஆதாரமாக விளங்குகிறது வீராணம் ஏரி. சென்னையின் முக்கிய குடிநீர் ஆதாரமாகவும் உள்ளது. வெயில் தாக்கம் காரணமாக ஏரி வறண்டதால் சென்னைக்கு குடிநீர் அனுப்புவது நிறுத்தப்பட்ட நிலையில், தொடர்ந்து தண்ணீர் அனுப்பி வைப்பதற்காக மேட்டூர் அணையில் இருந்து வீராணம் ஏரிக்கு தண்ணீர் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டது.

    அதன்படி கடந்த 17-ந்தேதி மேட்டூர் அணையில் இருந்து வினாடிக்கு 2100 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது.

    இந்த நீர் கல்லணை, கீழணை வழியாக வடவாறு மூலம் வீராணம் ஏரியை வந்தடைந்தது. இதன் மூலம் வறண்டு கிடந்த ஏரியில் நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்தது. இதையடுத்து சென்னைக்கு மீண்டும் குடிநீர் அனுப்பி வைக்கும் பணி தொடங்கியது. அதன்படி கடந்த 29-ந்தேதி முதல் சென்னைக்கு வினாடிக்கு 30 கன அடி தண்ணீர் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் வீராணம் ஏரியில் இருந்து சென்னைக்கு குடிநீர் அனுப்பும் இடமான பூதங்குடி மற்றும் வெய்யலூர் பகுதியில் தண்ணீர் பச்சை நிறத்தில் காட்சி அளித்து வருகிறது. இவை அகலம் குறைந்த பகுதிகள். மற்ற இடங்களில் தண்ணீர் வழக்கம் போல் உள்ளது. இதை பார்த்த அப்பகுதி மக்கள் அச்சமடைந்தனர். கால்நடைகள், பறவைகள் தண்ணீர் குடிப்பதால் ஏதேனும் ஆபத்து நேரிடுமோ என்று பீதி அடைந்தனர்.

    இதுபற்றி பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, பூதங்குடி பகுதியில் இருந்து மெட்ரோ அதிகாரிகள் தண்ணீரை ஆய்வு செய்து தான் சென்னைக்கு அனுப்பி வருகின்றனர்.

    தற்போது தண்ணீர் பச்சை நிறத்தில் இருப்பதாக தகவல் பரவியது. இதற்கு காரணம் தண்ணீரில் படர்ந்துள்ள பாசி தான். தண்ணீரில் உள்ள செடி, கொடிகள் எல்லாம் சேர்ந்து தெரியும் போது, அவை பச்சை நிறத்தில் தெரிகிறது. மற்றபடி எவ்வித ரசாயனமும் கலக்கவில்லை. தண்ணீரை மெட்ரோ அதிகாரிகள் மாதிரி எடுத்து ஆய்வு செய்து விட்டார்கள். தண்ணீரில் எதுவும் கலக்கவில்லை. ஆகவே பொதுமக்கள் இதுபற்றி அச்சப்பட தேவையில்லை என்றார்.

    • இருவரின் உடலையும் கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
    • வழக்கு பதிவு செய்த போலீசார் கணவன், மனைவி இருவரும் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பண்ருட்டி:

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள காட்டாண்டிக்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் ரமேஷ் என்கிற குமரவேல் (வயது 32). பால் வண்டி டிரைவர். இவரது மனைவி மீனா (20). இருவரும் வீட்டின் மாடியில் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு திருமணமாகி 2 ஆண்டுகள் ஆகிய நிலையில் குழந்தை இல்லை. வேலைக்கு சென்று நேற்று இரவு 10 மணிக்கு குமரவேல் வீடு திரும்பினார். பின்னர் குமரவேல் மற்றும் அவரது மனைவி இருவரும் உறங்க சென்றனர்.

    இன்று காலை வெகுநேரமாகியும் குமரவேலும், மீனாவும் வெளியில் வராததால், அவரது பெற்றோர் மாடிக்கு சென்று பார்த்தனர். வீடு உள்பக்கமாக பூட்டியிருந்தது. கதவை தட்டியும் அவர்கள் வெளியில் வரதாதால், ஜன்னல் வழியாக பார்த்தனர். அப்போது கணவன், மனைவி இருவரும் ஒரே சேலையில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

    பின்னர் இது குறித்து காடாம்புலியூர் போலீசாருக்கு தகவல் அளித்தனர். தகவலின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் பிரேம்குமார் தலைமையிலான போலீசார் விரைந்து வந்தனர். இருவரின் உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும், இதுகுறித்து வழக்கு பதிவு செய்து கணவன், மனைவி இருவரும் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். குழந்தை இல்லாத ஏக்கத்தால் இந்த துயர முடிவை கணவன், மனைவி இருவரும் எடுத்து கொண்டதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

    • வடகிழக்கு திசையில் நகர்ந்து, நாளை காலை மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் புயலாக வலுப்பெறக் கூடும்.
    • வங்கக்கடலில் தூரத்தில் புயல் உருவாகுவதற்கு வாய்ப்பு உள்ளது என அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

    கடலூர்:

    மத்திய மேற்கு மற்றும் தெற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, வடகிழக்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. தொடர்ந்து வடகிழக்கு திசையில் நகர்ந்து, நாளை காலை மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் புயலாக வலுப்பெறக் கூடும்.

    இது புயலாக மாறினால் ரீமேக் என புயலுக்கு பெயர் சூட்ட உள்ளனர். புயலாக வலுப்பெற்ற பின் வங்கதேசம் மற்றும் மேற்கு வங்கக் கடற்கரை நோக்கிச் செல்லும். வருகிற 26-ந் தேதி மேற்கு வங்கக் கடற்கரை பகுதியில் தீவிர புயலாக வலுப்பெறும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

    இந்த நிலையில் கடலூர் துறைமுகத்தில் இன்று காலை 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. இதில் வங்கக்கடலில் தூரத்தில் புயல் உருவாகுவதற்கு வாய்ப்பு உள்ளது என அறிவுறுத்தப்பட்டு உள்ளது. ஏற்கனவே கடலில் வானிலை மாற்றம் ஏற்பட்டுள்ளதால் மீனவர்கள் யாரும் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என அறிவுறுத்தியதின்பேரில் மீனவர்கள் யாரும் மீன்பிடிக்க செல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

    • காரணமாக தலைமை தபால் நிலையம் பஸ் நிறுத்தத்தில் 50 லட்சம் மதிப்பீட்டில் பஸ் நிறுத்தம் கட்டப்பட்டு உள்ளது.
    • சாலையில் பஸ்களை நிறுத்தி பயணிகளை ஏற்றுவதால் அடிக்கடி போக்குவரத்து பாதிப்பு மற்றும் விபத்து ஏற்படும் அபாயம் நிலவி வந்தது.

    கடலூர்:

    கடலூர் மஞ்சகு ப்பத்தில் தலைமை தபால் நிலையம் பஸ் நிறுத்தம் உள்ளது.

    இந்த பஸ் நிறுத்தம் வழியாக கடலூரில் இருந்து பண்ருட்டி, விழுப்புரம், புதுச்சேரி, சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு 24 மணி நேரமும் அரசு மற்றும் தனியார் பஸ்கள் சென்று வருகின்றன. இதன் காரணமாக தலைமை தபால் நிலையம் பஸ் நிறுத்தத்தில் 50 லட்சம் மதிப்பீட்டில் பஸ் நிறுத்தம் கட்டப்பட்டு உள்ளது.

    இந்நிலையில் தினந்தோறும் இவ்வழியாக செல்லக்கூடிய அரசு மற்றும் தனியார் பஸ்கள் இந்த பஸ் நிறுத்தத்தில் பஸ்களை நிறுத்தி பயணிகளை ஏற்றாமல், சாலையில் பஸ்களை நிறுத்தி பயணி களை ஏற்றுவதால் அடிக்கடி போக்குவரத்து பாதிப்பு மற்றும் விபத்து ஏற்படும் அபாயம் நிலவி வந்தது. இதன் காரணமாக பொதுமக்கள் தொடர்ந்து புகார் தெரிவித்து வந்தனர்.

    இந்நிலையில் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துக்குமரன் தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது பஸ் நிறுத்தத்திற்குள் அரசு மற்றும் தனியார் பஸ்கள் வழக்கம் போல் நிற்காமல் வெளியில் பஸ்சை நிறுத்தி பயணிகளை ஏற்றிக் கொண்டிருந்தனர். இதனை தொடர்ந்து போக்குவரத்து போலீசார் ஒரு அரசு பஸ், புதுச்சேரி அரசு பஸ் உள்பட 8 அரசு மற்றும் தனியார் பஸ்களுக்கு தலா 500 ரூபாய் அபராதம் விதித்து டிரைவர்களுக்கு கடும் எச்சரிக்கை விடுத்தனர். மேலும் பஸ் நிறுத்தத்திற்குள் பஸ்கள் செல்லாமல் சாலையில் நிறுத்தி பயணிகளை ஏற்றினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்து அனுப்பி வைத்தனர்.

    ×