

ஏ.எல். விஜய் இயக்கத்தில் உருவாகி உள்ள 'காதல் ரீசெட் ரிப்பீட்' படம் கடந்த வாரம் திரையரங்குகளில் வெளியானது.
கதை:
தூரத்தில் இருந்து பார்ப்பதையே தனது காதலின் மகிழ்ச்சியாகக் கருதும் இளைஞராக நாயகன் மதும்கேஷ் வாழ்கிறார். இவர் ஒருதலையாக நாயகி ஜியா சங்கரை காதலித்து வருகிறார். ஆனால் ஜியா சங்கர், தனது நண்பரான அர்ஜுன் அசோகனை காதலிக்கிறார். இந்த நிலையில் ஜியா சங்கர் ஒரு விபத்துக்குப் பிறகு மறதியால் பாதிக்கப்படுகிறார். தூங்கி எழுந்தவுடன் முந்தைய நாளில் நடந்த அனைத்தையும் மறந்து விடும் நிலை ஏற்படுகிறது.
தினமும் தனது வாழ்க்கையை புதிதாக தொடங்க வேண்டிய சூழ்நிலையில் தவிக்கும் அவரிடம், மதும்கேஷ் தன்னை அவரது காதலனாக அறிமுகப்படுத்தி நெருக்கமாக பழகத் தொடங்குகிறார்.
இறுதியில் மதும்கேஷ், ஜியா வாழ்க்கை என்ன ஆனது? மதும்கேஷ் பொய் சொல்லி பழகுவது ஜியாவிற்கு தெரிந்ததா? என்பதே படத்தின் மீதிக்கதை.
நடிகர்கள்:
ஒருதலையாக காதலித்து அதை வெளிப்படுத்த முடியாமல் மனதில் வைத்துக் கொண்டு வாழும் இளைஞராக மதும்கேஷ் இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.
நாயகியாக அறிமுகமாகும் ஜியா சங்கர், அழகு மற்றும் நடிப்பு இரண்டிலும் கவனம் ஈர்க்கிறார். கதையின் மையமாக இருக்கும் கதாபாத்திரம் என்பதால் அவருக்கு அதிகமான காட்சிகள் கிடைத்திருக்கிறது.
குழப்பம், காதலை உணரும் தருணங்களில் இயல்பான நடிப்பை கொடுத்து இருக்கிறார். அர்ஜுன் அசோகன் தனது வேலையை சரியாக செய்திருக்கிறார்.
விஜி சந்திரசேகர், ஜெயப்பிரகாஷ், எம்.எஸ்.பாஸ்கர் போன்ற அனுபவம் வாய்ந்த நடிகர்களின் சிறிய காட்சிகளும் படத்திற்கு ஒரு அளவு பலம் சேர்க்கின்றன.
இயக்கம்:
முக்கோண காதல் கதையை சற்று வித்தியாசமான கோணத்தில் சொல்ல முயற்சித்துள்ள இயக்குநர் விஜய், எளிமையான காட்சிகளின் மூலம் கதையை நகர்த்தியிருக்கிறார். அழகான இடங்கள், காதல் உணர்வுகள் மற்றும் கதாநாயகியின் நடிப்பு ஆகியவை படத்திற்கு பலமாக இருந்தாலும், திரைக்கதையில் எதிர்பார்த்த அளவுக்கு வலுவான தருணங்கள் இல்லாதது ஒரு குறையாகவே தெரிகிறது.
ஒளிப்பதிவு:
ஒளிப்பதிவாளர் அரவிந்த்கிருஷ்ணா வெளிநாட்டு அழகை அழகாக பதிவு செய்து காட்சிகளை கண்களுக்கு விருந்தாக மாற்றியிருக்கிறார்.
இசை:
ஹரிஷ் ஜெயராஜ் இசையில் பாடல்கள் மற்றும் பின்னணி இசை காதல் உணர்வுகளை வெளிப்படுத்த உதவுகிறது.
மாலைமலர் ரேட்டிங் : 2.5 / 5