

வனவிலங்கு புகைப்படக் கலைஞரான நாயகன் ஸ்ரீராம் கார்த்தி, பறவை ஒன்றை புகைப்படம் எடுப்பதற்காக ஊட்டிக்கு வருகிறார். அங்கு பறவைகள் பூங்கா ஒன்றை நடத்தி வரும் நாயகி கிரிஷா குரூப் உடனான நட்பு கிடைக்கிறது.
நட்பு காதலாக மாறுகிறது. தன் காதலை கிரிஷா குரூப்பிடம் சொல்ல நினைக்கும் போது, கிரிஷா குரூப் தான் ஒருவரை காதலிப்பதாகவும், அவர் எங்கு இருக்கிறார் என்று தெரியாது என்றும், காதலனுடன் சேர்த்து வைக்குமாறு ஸ்ரீராம் கார்த்திக்கிடம் கேட்கிறார்.
வருத்தம் அடையும் ஶ்ரீராம் கார்த்திக், கிரிஷா குரூப்பின் காதலை சேர்த்து வைப்பதாக சொல்லி ஏமாற்றுகிறார். ஒரு கட்டத்தில் அந்த காதலன் ஊட்டி வருகிறார். இறுதியில் கிரிஷா குரூப் காதலன் யார்? கிரிஷா குரூப் காதலை ஶ்ரீராம் கார்த்திக் சேர்த்து வைத்தாரா? ஶ்ரீராம் கார்த்திக் தன் காதலை கிரிஷா குரூப்பிடம் சொன்னாரா? என்பதே படத்தின் மீதிக்கதை.
நடிகர்கள்
நாயகனாக நடித்திருக்கும் ஸ்ரீராம் கார்த்திக், இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். தனது கதாபாத்திரத்திற்கு நியாயம் சேர்த்து நடித்து இருக்கிறார். நாயகியாக நடித்திருக்கும் கிரிஷா குரூப், வெகுளித்தனமான நடிப்பால் ரசிகர்களை கவர முயற்சி செய்திருக்கிறார். கிரிஷா குரூப்பின் ஒருதலை காதலனாக வருபவர் கொடுத்த வேலையை செய்து இருக்கிறார்.
முனிஷ்காந்த், சிங்கம்புலி இருவரும் அங்காங்கே சிரிக்க வைத்து இருக்கிறார்கள். மற்ற கதாபாத்திரங்களின் நடிப்பு திரைக்கதை ஓட்டத்திற்கு உதவி இருக்கிறது.
இயக்கம்
காதல் கதையை மையமாக வைத்து படத்தை இயக்கியிருக்கிறார் அஜயன் பாலா. காதல் காட்சிகள், வசனங்கள் உணர்வு பூர்வமாக இல்லாதது வருத்தம். காதலித்த பெண்ணின் காதலை சேர்த்து வைக்க முயற்சிக்கும் நாயகனின் காதல் கதையை ஏற்கனவே பல படங்களில் பார்த்து இருந்தாலும் இதில் கொஞ்சம் வித்தியாசம் காண்பித்து இருக்கிறார்.
இசை
இளையராஜாவின் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம். பின்னணி இசை சிறப்பு.
ஒளிப்பதிவு
செழியனின் ஒளிப்பதிவு படத்திற்கு மிகப்பெரிய பலம். ஊட்டி மலையின் பசுமையை அழகாக காண்பித்து இருக்கிறார்.
ரேட்டிங்-2/5