நான் உள்பட அரசியல்வாதிகள் மொழியை பற்றி பேச தகுதி இல்லை- கமல்ஹாசன்

கன்னடம் தமிழில் இருந்து பிறந்தது என்று கூறியதால் கமல் மீது கன்னட அமைப்புகள் கடுங்கோபத்தில் உள்ளன.கர்நாடக மாநில காங்கிரஸ் மற்றும் பாஜக கைகோர்த்து கமலை விமர்சித்து வருகின்றன.
நான் உள்பட அரசியல்வாதிகள் மொழியை பற்றி பேச  தகுதி இல்லை- கமல்ஹாசன்
Published on

மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்துள்ள 'தக் லைப்' திரைப்படம் வரும் ஜூன் 5-ந்தேதி வெளியாக உள்ளது.

அந்தவகையில் சென்னையில் நடந்த தக் லைஃப் பட புரொமோஷன் விழாவில் கன்னட நடிகர் சிவராஜ் குமார் கலந்துகொண்டார்.

இதில் பேசிய கமல், "உயிரின் உறவே தமிழே! எனது வாழ்க்கையும், குடும்பமும் தமிழ் மொழிதான். எனது குடும்பம் இங்கு இருக்கிறது. அதனால்தான் சிவராஜ்குமார் இங்கு வந்துள்ளார். அவரது மொழி (கன்னடம்) தமிழ் மொழியில் இருந்து பிறந்தது. அவரும் நமது குடும்பத்தில் ஒரு அங்கமாவார்" என்று தெரிவித்தார்.

கன்னடம் தமிழில் இருந்து பிறந்தது என்று கூறியதால் கமல் மீது கன்னட அமைப்புகள் கடுங்கோபத்தில் உள்ளன. இந்த விஷயத்தில் அம்மாநில காங்கிரஸ் மற்றும் பாஜக கைகோர்த்து கமலை விமர்சித்து வருகின்றன.

கர்நாடக முதல்வர் சித்தராமையா செய்தியாளர்களிடம் பேசுகையில், "கன்னட மொழிக்கு நீண்ட வரலாறு உண்டு. பாவம் கமல்ஹாசன், அவருக்கு அது தெரியாது" என்று தெரிவித்தார்.

இந்த விஷயம் பூதாகரமாக வெடித்த நிலையில், கமல்ஹாசன் இதுகுறித்து விளக்கம் அளித்துள்ளார்.

கேரளாவில் நடக்கும் தக் லைஃப் படத்தின் ப்ரொமோஷன் நிகழ்ச்சியில் கமல்ஹாசன் பேசியதாவது:-

தமிழ்நாடு அனைவருக்குமானது. இது பிற மாநிலங்களிலும் இருக்கலாம், நான் இல்லையென சொல்லவில்லை. ஆனால் எங்களுக்கு மேனனும், ரெட்டியும், கன்னட ஐயங்காரும் பலரும் முதல்வராக இருந்திருக்கிறார்கள்.

கர்நாடகாவை பூர்வீகமாக கொண்ட ஒரு முதலமைச்சரால் எனக்கு ஒருமுறை சென்னையில் பிரச்னை வந்தபோதுகூட, 'எங்கும் செல்லாதீர்கள், இங்கே வாருங்கள்' என்று கன்னடர்கள் என்னிடம் சொன்னார்கள்.

வடக்கிலிருந்து பார்த்தால், அவர்கள் சொல்வது சரியாக இருக்கலாம். ஆனால் தென் குமரியிலிருந்து பார்த்தால், நான் சொல்வதே சரி. இதற்கு இன்னொரு கோணமும் இருக்கும். அதை வல்லுநர்களே சொல்ல வேண்டும்.

குடும்பத்தோடு இருக்கும் முடிவை எடுக்க வேண்டுமா, அல்லது வடக்கிலிருந்து வந்த மொழியை ஏற்க வேண்டுமா என்பதை அவர்கள் சொல்லட்டும்.

இந்த விவகாரத்தில், எனக்கு சொல்லிக் கொடுக்கப்பட்ட வரலாற்றையே நான் சொன்னேன். இந்த பிரச்னையையும் தக் லைஃப்பையும் மக்கள் பார்த்துக் கொள்வார்கள்.

அரசியல்வாதிகள் மொழியை பற்றி பேச தகுதியற்றவர்கள். ஏனெனில் அவர்களுக்கு இதுபற்றிய போதிய படிப்பினை இல்லை. இது எனக்கும் பொருந்தும்.

எனவே இப்பிரச்னை பற்றிய ஆழமான கருத்துகளை வரலாற்று ஆய்வாளர்கள், மொழியாளர்கள், தொல்லியல் நிபுணர்களிடம் விட்டுவிடுவோம். இது என் பதில் அல்ல, விளக்கம். அன்பு என்றும் மன்னிப்பு கேட்காது. மொழி குறித்த பேச்சை அரசியலாக்க வேண்டாம்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com