அறிவான்- திரைவிமர்சனம்

கார்த்திக்.ஈ.ஆர்.ஏ இசை கதைக்கு ஏற்ற அளவில் அமைந்துள்ளது.
அறிவான்- திரைவிமர்சனம்
Published on

நேர்மையான போலீஸ் இன்ஸ்பெக்டரான ஆனந்த் நாக், சர்ச்சை காரணமாக புதிய காவல் நிலையத்திற்கு இடமாற்றம் செய்யப்படுகிறார். பொறுப்பேற்ற சில நாட்களிலேயே அப்பகுதியில் ஒரு சந்தேக மரணம், அதனைத் தொடர்ந்து கழுத்து அறுபட்ட நிலையில் ஒரு கொலை – இரண்டு சம்பவங்களிலும் ஒரே கார் தொடர்பு இருப்பது விசாரணையை தீவிரப்படுத்துகிறது.

இந்த வழியில் ஒரு பாலியல் தொழிலாளி முக்கிய இணைப்பாக மாறுகிறார். ஆனால், காவல் நிலையத்திலேயே அவர் கொலை செய்யப்படுவதால் வழக்கு மேலும் சிக்கலாகிறது. குற்றவியல் நிருபரான ஜனனியின் உதவியுடன், தொடர் கொலைகளின் பின்னணியையும் கொலையாளியையும் ஆனந்த் நாக் கண்டுபிடித்தாரா? இல்லையா? என்பதே படத்தின் மீதிக்கதை.

நடிகர்கள்

போலீஸ் வேடத்தில் ஆனந்த் நாக் தோற்றத்தில் பொருந்தினாலும், நடிப்பில் கம்பீரம் முழுமையாக வெளிப்படவில்லை. விசாரணையின் தீவிரத்தை விட இடைக்கிடை நகைச்சுவைத் தொனி மேலோங்குவது, கதையின் எடையை சற்றே குறைக்கிறது. நாயகி ஜனனி நிருபர் கதாபாத்திரம் முக்கியமாக அமையும் போல தோன்றினாலும், திரைக்கதையில் தொடர்ந்து வலுவாக பயன்படுத்தப்படவில்லை. குறைந்த பரப்பில் அவர் அளவான நடிப்பை வழங்குகிறார்.

பாய்ஸ் ராஜன், பிர்லா போஸ், கெளரி சங்கர், குருமூர்த்தி உள்ளிட்டவர்கள் தங்களுக்கு கிடைத்த இடத்தில் இயல்பாக தோன்றினாலும், கதையின் ஓட்டத்தில் பெரும் தாக்கம் ஏற்படுத்தவில்லை.

இயக்கம்

தொடர் கொலை – விசாரணை என்ற அடிப்படையில் படத்தை இயக்கியிருக்கிறார் இயக்குனர். "எப்படி? எதற்காக? யார்?" என்ற மூன்று கேள்விகளை மையமாக வைத்து திரைக்கதை அமைத்துள்ள இயக்குநர் எஸ். அருண் பிரசாதின் முயற்சி கவனிக்கத்தக்கது. ஆரம்ப கட்டத்தில் பரபரப்பை உருவாக்கும் காட்சிகள் எதிர்பார்ப்பை ஏற்படுத்துகின்றன.

கொலையாளியின் அடையாளம் வெளிப்படும் பின்னர், சமூக பின்னணியுடன் நகரும் காட்சிகள் மற்றும் கிளைமாக்ஸுக்கு முந்தைய பகுதிகள் சுவாரஸ்யத்தை உயர்த்துகின்றன. அந்த கட்டத்தில் படம் எதிர்பார்த்த விறுவிறுப்பை தருகிறது. மொத்தத்தில், நல்ல கருவுடன் தொடங்கும் 'அறிவான்', நடிப்பு மற்றும் திரைக்கதை சீர்மையில் கூடுதல் கவனம் பெற்றிருந்தால் மேலும் தாக்கம் ஏற்படுத்தியிருக்கும். இறுதிக்கட்ட சஸ்பென்ஸ் மற்றும் பின்னணி கருத்து படத்திற்கு பலம் சேர்க்கின்றன.

ஒளிப்பதிவு

ஒளிப்பதிவாளர் யஷ்வந்த் பாலாஜியின் காட்சியமைப்புகள் தரமாக இருந்தாலும், நினைவில் நிற்கும் தனித்துவம் குறைவு.

இசை

கார்த்திக்.ஈ.ஆர்.ஏ இசை கதைக்கு ஏற்ற அளவில் அமைந்துள்ளது.

ரேட்டிங்-2/5

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com