மறக்க முடியாத முதல் காதல்.. '96' பாணியில் ஒரு படம் - 'With love' விமர்சனம்

இருவரும் முதல் காதலை தேடி செல்கிறார்கள்.
மறக்க முடியாத முதல் காதல்.. '96' பாணியில் ஒரு படம்  - 'With love' விமர்சனம்
Published on

குடும்ப சூழ்நிலை காரணமாக திருச்சியில் இருந்து சென்னைக்கு வந்த நாயகன் அபிஷன் ஜீவிந்த் மேட்ரிமோனி மூலம் ஒரு பெண்ணை ரெஸ்டாரண்டில் பார்க்க செல்கிறார். அங்கு சென்று பார்க்கும் போது தேடி வந்த பெண் தனது பள்ளி தோழி அனஸ்வரா ராஜன் என தெரிய வருகிறது. தொடர்ந்து திருமணம் குறித்து அபிஷனும், அனஸ்வரா ராஜனும் பேசிக் கொண்டிருக்கும் போது அனஸ்வரா ராஜன் திருமணத்துக்கு அபிஷனிடம் ஒரு நிபந்தனை விதிக்கிறார்.

திருச்சியில் இருவரும் ஒரே பள்ளியில் படித்த போது அபிஷனுக்கு- காவ்யா அனிலுடனும், அனஸ்வராவுக்கு வேறு ஒரு மாணவருடனும் ஒருதலைக் காதலாக மலர்ந்து காதல் கைகூடாமலேயே பள்ளி வாழ்க்கை முடிந்து விடுகிறது. தங்களது பழைய காதலனையும், காதலியையும் தேடி சென்று சந்திப்போம். அப்புறம் நம் திருமணத்தை பற்றி பேசலாம் என்று சொல்லி, இருவரும் முதல் காதலை தேடி செல்கிறார்கள்.

இறுதியில் அபிஷன், அனஸ்வரா ராஜன் இருவரும் முதல் காதலர்களை சந்தித்தார்களா? இருவருக்கும் திருமணம் நடைபெற்றதா? என்பதே படத்தின் மீதிக்கதை.

படத்தில் நாயகனாக நடித்து இருக்கும் அபிஷன் ஜீவிந்த் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். ஒரு இளம் இளைஞனின் குழப்பம், கோபம், பொறாமை, தவிப்பு ஆகியவற்றை மிக எளிமையாக வெளிப்படுத்துகிறார். முன்னாள் காதலி காவ்யா குழந்தையுடன் அபிஷனை சந்திக்கும் போது அபிஷன் அவரிடம் காதலை சொல்லும் போது ரசிக்க வைக்கிறது.

நாயகியாக நடித்து இருக்கும் அனஸ்வரா ராஜன் அழகான முகபாவனைகளை வெளிப்படுத்தி இருக்கிறார். சின்ன சின்ன குறும்பு, சேட்டைகள், கோபம் என கண்களாலேயே அதிகம் பேசி ரசிக்க வைத்து இருக்கிறார்.

பள்ளி வாழ்க்கையில் நடந்த முதல் காதலை மையமாக வைத்து படத்தை இயக்கியிருக்கிறார் இயக்குனர் மதன். உணர்வோடு மட்டுமின்றி கலகலப்போடும், ரசனையோடும் சொல்லி இருக்கிறார். பள்ளிப்பருவ காதலை இளம் தலைமுறையினரை மட்டுமின்றி அனைவரையும் பள்ளி பருவத்திற்கு அழைத்து செல்லும் விதமாக படத்தை கொடுத்து இருக்கிறார்.

சான்ரோல்டன் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம். 'அவள் வருவாளா' பாடல் மீண்டும் திரையில் ஒலித்தது இனிமை. ஷ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு ரசிக்க வைக்கிறது.   

மாலைமலர் ரேட்டிங்: 3.5 / 5

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com