ஃபோர்த் ஃப்ளோர்- திரைவிமர்சனம்

பின்னணி இசை திகில் காட்சிகளில் தேவையான பதட்டத்தை உருவாக்குகிறது.
ஃபோர்த் ஃப்ளோர்- திரைவிமர்சனம்
Published on

கணினி துறையில் பணியாற்றும் ஆரி அர்ஜுனன், பணி மாறுதலால் மும்பையிலிருந்து சென்னைக்கு வந்து, புறநகர் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் நான்காவது மாடியில் யாரும் வசிக்காத வீட்டில் தங்குகிறார். வேலை வாழ்க்கையுடன், தன்னை காப்பாற்றுமாறு உதவி கேட்ட முன்னாள் காதலியை தேடும் முயற்சியிலும் ஈடுபடுகிறார்.

அந்த வீட்டில் காதலியின் புகைப்படத்தை காணும் அதிர்ச்சியுடன், இரவு நேரங்களில் தொடரும் அமானுஷ்ய கனவுகள் அவரை குழப்பத்தில் ஆழ்த்துகிறது. கனவா, நிஜமா என்ற சந்தேகத்துடன் தொடங்கும் இந்த மர்ம பயணம், பல அதிர்ச்சியான உண்மைகளை வெளிப்படுத்துகிறது.

இறுதியில் காணாமல் போன காதலி கிடைத்தாரா? கனவுகளுக்கும் அவளுக்கும் என்ன தொடர்பு? என்பது படத்தின் மீதிக்கதை..

நடிகர்கள்

நாயகனாக நடித்திருக்கும் ஆரி, சாதாரண ஐடி இளைஞராக தொடங்கி, மர்மங்களை அவிழ்க்கும் மனிதராக மாறும் பயணத்தை நம்பகமாக வெளிப்படுத்தியிருக்கிறார். காதல் இழப்பு, குற்ற உணர்வு, மன அழுத்தம், அமானுஷ்ய அச்சம் என பல்வேறு உணர்வுகளை அளவாக வெளிப்படுத்தி கதையை தாங்கிச் செல்கிறார்.

நாயகிகளாக நடித்திருக்கும் பவித்ரா மற்றும் தீப்ஷிகா இருவரும் கதைக்கு தேவையான அளவில் நடிப்பை வழங்கி இருக்கிறார்கள். வில்லனாக வரும் சுப்பிரமணிய சிவா, முதல் பாதியில் முகபாவனைகளால் கவனம் ஈர்த்தாலும், அமானுஷ்ய அம்சங்கள் அதிகமாக இருப்பதால் அவரது வில்லத்தனம் முழுமையாக வெளிப்படவில்லை. தலைவாசல் விஜய் உள்ளிட்ட துணை கதாபாத்திரங்கள் திரைக்கதை நகர்வுக்கு உதவியாக இருக்கின்றன.

இயக்கம்

திகில், கிரைம் திரில்லர், குடும்ப உணர்வு, சமூக கருத்து என பல அடுக்குகளுடன் கதையை வடிவமைத்துள்ள இயக்குநர் எல்.ஆர்.சுந்தரபாண்டியன், ஆரம்பத்தில் பரபரப்பாக நகரும் திரைக்கதையை இடைப்பட்ட பகுதிகளில் சற்று மெதுவாக்கினாலும், தொடர்ச்சியான திருப்பங்கள் மூலம் மீண்டும் சுவாரஸ்யத்தை கூட்டுகிறார். குறிப்பாக கிளைமாக்ஸ் நோக்கி செல்லும் போது மர்மங்கள் அவிழும் விதம் படத்தை கவனத்துடன் பார்க்க வைக்கிறது.

இசை

தரண்குமார் இசையில் பாடல்கள் சாதாரணமாக இருந்தாலும், பின்னணி இசை திகில் காட்சிகளில் தேவையான பதட்டத்தை உருவாக்குகிறது.

ஒளிப்பதிவு

ஒளிப்பதிவாளர் ஜெ.லக்ஷ்மண், அடுக்குமாடி குடியிருப்பின் தனிமையும் நான்காவது தளத்தின் மர்மமான சூழலையும் சரியாக பதிவு செய்து இருக்கிறார்.

ரேட்டிங்-2.5/5

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com