search icon
என் மலர்tooltip icon

    செங்கல்பட்டு

    • கேளம்பாக்கம் போலீசாருக்கு பீலா வெங்கடேசன் புகார் மனு அனுப்பினார்.
    • ராஜேஷ் தாஸ் மற்றும் 10 பேர் மீது கேளம்பாக்கம் போலீசார் 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    கேளம்பாக்கம்:

    தமிழக போலீஸ் துறையில் சிறப்பு டி.ஜி.பி.யாக பணியாற்றியவர் ராஜேஷ் தாஸ். பெண் போலீஸ் சூப்பிரண்டு ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தொடரப்பட்ட வழக்கில், இவருக்கு விழுப்புரம் மாவட்ட நீதிமன்றம் 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கடந்த ஆண்டு உத்தரவிட்டது.

    இந்த தீர்ப்பை சென்னை ஐகோர்ட்டும் உறுதி செய்தது. இதைத்தொடர்ந்து ராஜேஷ் தாஸ் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தார். இந்த மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு ராஜேஷ் தாசை கைது செய்வதற்கு இடைக்கால தடை விதித்தது.

    பாலியல் புகாரில் ராஜேஷ் தாஸ் சிக்கியவுடன் அவரது மனைவியும், தற்போதைய தமிழக அரசின் எரிசக்தித்துறை செயலாளருமான பீலா பிரிந்தார். பீலா ராஜேஷ் என்ற பெயரை பீலா வெங்கடேசன் என்று தனது தந்தை பெயருடன் இணைத்து மாற்றிக்கொண்டார். ராஜேஷ் தாசும், பீலாவும் கணவன்-மனைவியாக வாழ்ந்தபோது செங்கல்பட்டு மாவட்டம் தையூரில் பங்களா வீடு வாங்கினார்கள். தற்போது இருவரும் பிரிந்ததால் இந்த பங்களா வீடு பீலா வெங்கடேசன் நியமித்த காவலாளி கட்டுப்பாட்டில் இருந்து வந்தது.

    இதற்கிடையே சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு மூலம் கைது நடவடிக்கையில் இருந்து தப்பிய ராஜேஷ் தாஸ் கடந்த 18-ந்தேதி தையூர் பங்களா வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது அவர் அங்கு பாதுகாப்புக்கு நியமிக்கப்பட்டிருந்த காவலாளியை தாக்கி வெளியேற்றியதாக தெரிகிறது. இந்த சம்பவம் குறித்து கேளம்பாக்கம் போலீசாருக்கு பீலா வெங்கடேசன் புகார் மனு அனுப்பினார்.

    அதில் ராஜேஷ் தாஸ் மற்றும் அடையாளம் தெரியாத 10 நபர்கள் தனக்கு சொந்தமான தையூர் வீட்டின் உள்ளே அத்துமீறி நுழைந்து காவலாளியை தாக்கி செல்போனை பறித்து விட்டு உள்ளே தங்கி உள்ளனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுத்து, அவர்களை வெளியேற்ற வேண்டும் என்று கூறியிருந்தார். அதன்பேரில் ராஜேஷ் தாஸ் மற்றும் 10 பேர் மீது கேளம்பாக்கம் போலீசார் 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    இந்நிலையில், முன்னாள் டி.ஜி.பி. ராஜேஸ் தாஸை இன்று கேளம்பாக்கம் போலீசார் கைது செய்துள்ளனர். இதையடுத்து காவல்நிலையத்தில் வைத்து ராஜேஸ் தாசிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • 20 ஆண்டுகளாக மூடியுள்ள குடியிருப்பில் சுத்தம் செய்தபோது இந்த விபத்து ஏற்பட்டது.
    • குடியிருப்பில் இருந்த 4 நாட்டு வெடிகுண்டுகளில், 2 நாட்டு வெடிகுண்டுகள் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது.

    செங்கல்பட்டு:

    செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரியில் உள்ள பழைய காவலர் குடியிருப்பில் 2 நாட்டு வெடிகுண்டுகள் வெடித்து விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த வெடிகுண்டு வெடித்து காவலர் ஒருவர் படுகாயம் அடைந்தார்.

    20 ஆண்டுகளாக மூடியுள்ள குடியிருப்பில் பூட்டை உடைத்து சுத்தம் செய்தபோது இந்த விபத்து ஏற்பட்டது.

    குடியிருப்பில் இருந்த 4 நாட்டு வெடிகுண்டுகளில், 2 நாட்டு வெடிகுண்டுகள் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது.

    படுகாயம் அடைந்த போக்குவரத்து காவலர் சரவணன் பொத்தேரியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    • எச்சரிக்கையை மீறி மோட்டார் சைக்கிள் ரேசில் ஈடுபட்டு வருகிறார்கள்.
    • போக்குவரத்து போலீசார் அதிரடி வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    திருப்போரூர்:

    சென்னையில் மெரினா மற்றும் கிழக்குகடற்கரை சாலைகளில் போலீசாரின் எச்சரிக்கையை மீறி வாலிபர்கள் சிலர் மோட்டார் சைக்கிள் ரேசில் ஈடுபட்டு வருகிறார்கள். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டாலும் பைக்ரேஸ் தொடர்ந்து நடந்து வருகிறது.

    இந்தநிலையில் பழைய மாமல்லபுரம் சாலை மற்றும் கிழக்கு கடற்கரை சாலையில் விடுமுறை தினமான இன்று அதிகாலை முதல் பைக் ரேஸ் நடைபெற்று வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    இதைத்தொடர்ந்து பள்ளிக்கரணை போக்குவரத்து உதவி கமிஷனர் ஸ்ரீதர் தலைமையில், இன்ஸ்பெக்டர் கருணாகரன் மற்றும் போக்குவரத்து போலீசார் அதிரடி வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது 50-க்கும் மேற்பட்ட விலை உயர்ந்த மோட்டார் சைக்கிள்களில் ரேசில் ஈடுபட்ட வாலிபர்களை மடக்கி பிடித்தனர்.

    பாதுகாப்பு உடை அணிந்து இருந்த அவர்களை உதவி கமிஷனர் ஸ்ரீதர் மற்றும் போலீசார் கடுமையாக எச்சரித்தனர்.

    பின்னர் அவர்களுக்கு அறிவுரைகள் வழங்கி எச்சரித்து அனுப்பினர். இதனால் கோவளம் அடுத்த குன்னுக்காடு கிழக்கு கடற்கரை சாலையில் இன்று காலை பரபரப்பு ஏற்பட்டது.

    • உயர் அதிகாரிகள் ஏ.கே.47 ரக துப்பாக்கியை ஆய்வு செய்தனர்.
    • கண்காணிப்பு காமிரா காட்சிகளையும் ஆய்வு செய்து வருகிறார்கள்.

    மாமல்லபுரம்:

    கல்பாக்கத்தில் அணுமின் நிலையம் உள்ளது. மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த அணுமின் நிலையத்தில் மத்திய தொழல் பாதுகாப்பு படையினர் ஷிப்டு முறையில் ஏ.கே.47 ரக துப்பாக்கியுடன் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    இங்கு கர்நாடக மாநிலத்தை சேர்ந்த பாதுகாப்பு படைவீரர் ரவி கிரண் (வயது37) பணியாற்றி வந்தார். நேற்று இரவு வழக்கம் போல் ரவிகிரண் அணுமின்நிலையத்திற்கு பாதுகாப்பு பணிக்கு வந்தார்.

    இந்த நிலையில் இன்று அதிகாலை பணி முடிந்து அணுமின் நிலைய ஊழியர்கள் குடியிருக்கும் நகரியத்திற்கு செல்ல உடன் பணியாற்றும் மற்ற வீரர்களுடன் பஸ்சில் பயணம் செய்தார். அப்போது அனைவரும் தங்களது துப்பாக்கியை வைத்து இருந்தனர்.

    சதுரங்கபட்டினம் "டச்சு கோட்டை" அருகில் உள்ள வேகத்தடையில் ஏறி இறங்கிய போது பஸ் குலுங்கியது.

    அந்த நேரத்தில் ரவிகிரண் கையில் இருந்த ஏ.கே.47 துப்பாக்கி திடீரென வெடித்தது. இதில் துப்பாக்கி குண்டுகள் ரவிகிரணின் கழுத்தில் பாய்ந்து தலைவழியாக வெளியே வந்தது. இதில் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் ரவி கிரண் உயிரிழந்தார். இதனை கண்டு உடன் பயணம் செய்த மற்ற பாதுகாப்பு படை வீரர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

    இதுகுறித்து கல்பாக்கம் போலீசுக்கு தகவல் தெரி விக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து ரவிகிரணின் உடலை கைப்பற்றி கல்பாக்கம் அணுசக்தி துறை ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    இதுபற்றி அறிந்ததும் அணுமின் நிலைய மத்திய தொழில் பாதுகாப்பு படை உயர் அதிகாரிகள் ரவிகிரண் வைத்து இருந்த ஏ.கே.47 ரக துப்பாக்கியை ஆய்வு செய்தனர். அப்போது அதில் இருந்த குண்டுகள் அகற்றப்படாமல் இருந்தது தெரிந்தது.

    வழக்கமாக பாதுகாப்பு பணியின் போது மட்டுமே துப்பாக்கியில் குண்டுகள் லோடு செய்து தயார் நிலையில் வைக்கப்படும். பணி முடிந்ததும் பாதுகாப்பு வீரர்கள் துப்பாக்கியில் இருந்த குண்டுகளை அகற்றி அதனை தங்களது பாதுகாப்பு இடுப்பு பெல்ட்டில் உள்ள சிறிய பையில் வைத்து விடுவார்கள்.

    ஆனால் ரவி கிரணிடம் இருந்த துப்பாக்கியில் குண்டுகள் அகற்றப்படாமல் அப்படியே இருந்து உள்ளது அதிகாரிகளுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. அவர் துப்பாக்கியில் இருந்த குண்டுகளை எதற்காக எடுக்காமல் இருந்தார்? மறந்து விட்டாரா? என்று தெரியவில்லை.

    எனவே வேகத்தடையில் பஸ் ஏறி இறங்கிய போது ரவிகிரணிடம் இருந்து துப்பாக்கி தவறுதலாக வெடித்து குண்டு பாய்ந்து இறந்தாரா? அல்லது தற்கொலை செய்வதற்கு திட்டமிட்டு துப்பாக்கியில் இருந்த குண்டை அகற்றாமல் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டாரா? என்று பல்வேறு கோணங்களில் பாதுகாப்பு படை உயர் அதிகாரிகள் மற்றும் சதுரங்கபட்டினம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

     இது தொடர்பாக அவருடன் பணியில் இருந்த மற்றும் பஸ்சில் பயணம் செய்த வீரர்களிடமும் விசாரணை நடந்து வருகிறது. மேலும் ரவிகிரணின் நடவடிக்கைகள் எப்படி இருந்தது என்பது தொடர்பாக அங்குள்ள கண்காணிப்பு காமிரா காட்சிகளையும் ஆய்வு செய்து வருகிறார்கள்.

    இறந்து போன ரவிகிரண் கடந்த ஒரு ஆண்டுக்கு முன்புதான் கர்நாடகாவில் இருந்து கல்பாக்கத்திற்கு பணிமாறுதல் ஆகி வந்து உள்ளார். அவருக்கு அனுசா என்ற மனைவியும், ஷாஸ்வினி, ரித்திகா என்ற 2 மகள்களும் உள்ளனர்.

    அணுமின் நிலைய மத்திய பாதுகாப்பு படை வீரர் துப்பாக்கி குண்டுகள் பாய்ந்து பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை விபத்து ஏற்பட்டது.
    • இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே 4 பேர் பரிதாபமாக பலியாகினர்.

    சென்னை:

    செங்கல்பட்டு அருகே மதுராந்தகத்தில் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை பயங்கர விபத்து ஏற்பட்டது.

    விழுப்புரத்தில் இருந்து சென்னை பூந்தமல்லிக்கு கிரானைட் கற்களை ஏற்றிக்கொண்டு வந்த லாரி ஒன்று பழுதாகி நின்று கொண்டிருந்தது. அப்போது திருச்சியில் இருந்து சென்னை நோக்கி தனியார் ஆம்னி பஸ் ஒன்று வந்தது.

    அதிவேகத்தில் வந்து கொண்டிருந்த ஆம்னி பஸ் பழுதாகி நின்ற லாரி மீது மோதியது. இதில் ஆம்னி பஸ்சின் முன்பக்கம் நொறுங்கியது.

    இந்த கோர விபத்தில் ஆம்னி பஸ்சில் பயணம் செய்த 4 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகினர்.

    இதற்கிடையே, விபத்தில் சிக்கிய ஆம்னி பஸ் மீது முசிறியில் இருந்து சென்னைக்கு வந்த அரசு விரைவு பஸ் ஒன்று மோதியது. இந்த விபத்துக்களில் 20 க்கும் மேற்பட்ட பயணிகள் காயம் அடைந்தனர்.

    தகவலறிந்த போலீசார் விபத்தில் சிக்கிய பயணிகளை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். விபத்து காரணமாக திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

    திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் அடுத்தடுத்து வாகனங்கள் மோதி விபத்து ஏற்பட்டது பயணிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    • மாடு மீது மோதாமல் இருக்க டிரைவர் காரை இடதுபுறமாக திருப்பியபோது சாலையோரம் இருந்த மரத்தின் மீது கார் அதிவேகமாக மோதியது.
    • விபத்தில் காரில் பயணம் செய்த ராஜேஷ், ஏழுமலை, விக்னேஷ் ஆகிய 3 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

    கல்பாக்கம்:

    சென்னை வடபழனி அழகிரி நகர் பகுதியை சேர்ந்தவர் விக்னேஷ். இவரது நண்பர்களான சூளைப்பள்ளம் எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்த ராஜேஷ் (வயது 22), ஏழுமலை (30), மேற்கு மாம்பலத்தை சேர்ந்த யுவராஜ் (20) உள்ளிட்ட 5 பேர் சென்னையில் இருந்து புதுச்சேரிக்கு சென்றுவிட்டு நேற்று காரில் சென்னை திரும்பி வந்து கொண்டிருந்தனர்.

    அப்போது செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் அருகே வாயலூர் பகுதியில் உள்ள கிழக்கு கடற்கரை சாலையில் கார் அதிவேகமாக வந்து கொண்டிருந்தது. அந்த நேரத்தில் திடீரென பசுமாடு ஒன்று சாலையின் குறுக்கே ஓடியது. மாடு மீது மோதாமல் இருக்க டிரைவர் காரை இடதுபுறமாக திருப்பிய போது சாலையோரம் இருந்த மரத்தின் மீது கார் அதிவேகமாக மோதியது. இதில் கார் அப்பளம் போல் நொறுங்கியது.

    இந்த கோர விபத்தில் காரில் பயணம் செய்த ராஜேஷ், ஏழுமலை, விக்னேஷ் ஆகிய 3 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 2 பேர் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடினர். இந்த விபத்தைக் கண்ட வாயலூர் பகுதி மக்கள் அப்பளம் போல் நொறுங்கிய காரில் சிக்கிக்கொண்டிருந்தவர்களை மீட்க இரும்பை அறுக்கும் எந்திரம் மூலம் காரை அறுத்து படுகாயம் அடைந்தவர்களை செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே யுவராஜ் (20) மற்றும் மற்றொரு வாலிபர் என 2 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற சதுரங்கப்பட்டினம் போலீசார் உயிரிழந்த 3 பேரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். இந்த விபத்து கிழக்கு கடற்கரை சாலையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • காஞ்சிபுரம் மாவட்டம் 86.98 சதவீதம் தேர்ச்சி பெற்று உள்ளது.
    • திருவள்ளூர் மாவட்டத்தில் தேர்வு எழுதிய 28 ஆயிரத்து 249 மாணவ-மாணவிகளில் 24 ஆயிரத்து 165 பேர் தேர்ச்சி பெற்று இருக்கிறார்கள்.

    செங்கல்பட்டு:

    பிளஸ்-1 தேர்வு முடிவு இன்று வெளியானது. இதில் செங்கல்பட்டு மாவட்டம் 90.85 சதவீதம் தேர்ச்சி பெற்றது. தேர்வு எழுதிய 28 ஆயிரத்து 106 மாணவ-மாணவிகளில் 25 ஆயிரத்து 535 பேர் தேர்ச்சி பெற்றனர். மாணவர்கள் 87.14 சதவீதம் பேரும், மாணவிகள் 94.14 சதவீதம் பேரும் தேர்ச்சி பெற்று இருக்கிறார்கள்.

    காஞ்சிபுரம் மாவட்டம் 86.98 சதவீதம் தேர்ச்சி பெற்று உள்ளது. மாவட்டத்தில் தேர்வு எழுதிய 14 ஆயிரத்து 22 மாணவ-மாணவிகளில் 12 ஆயிரத்து 196 பேர் தேர்ச்சி பெற்றனர்.

    இதேபோல் திருவள்ளூர் மாவட்டத்தில் தேர்வு எழுதிய 28 ஆயிரத்து 249 மாணவ-மாணவிகளில் 24 ஆயிரத்து 165 பேர் தேர்ச்சி பெற்று இருக்கிறார்கள்.

    இது 85.54 சதவீதம் தேர்ச்சி ஆகும். அரசு பள்ளிகள் அளவில் செங்கல்பட்டு மாவட்டத்தில் தேர்வு எழுதிய 11 ஆயிரத்து 487 பேரில் 9 ஆயிரத்து 529 பேரும், (82.95 சதவீதம்), காஞ்சிபுரம் மாவட்டத்தில் 7 ஆயிரத்து 816 பேரில் 6 ஆயிரத்து 372 பேர் தேர்ச்சி (81.59 சதவீதம்) பெற்றனர். திருவள்ளூர் மாவட்டத்தில் அரசு பள்ளி அளவில் தேர்வு எழுதிய 13 ஆயிரத்து 809 மாணவ-மாணவிகளில் 10 ஆயிரத்து 427 பேர் தேர்ச்சி பெற்றனர். இது 75.51 சதவீதம் தேர்ச்சி ஆகும்.

    • 18-ந்தேதி காலை சூர்ணா பிஷேகம், மாலையில் யானை வாகனத்திலும் நரசிம்ம பெருமாள் அருள்பாலிக்கிறார்.
    • 20-ந்தேதி பல்லக்கு, குதிரை வாகனத்தில் எழுந்தருளல்,21-ந்தேதி தீர்த்தவாரி விமரிசையாக நடைபெற உள்ளது.

    சிங்கப்பெருமாள் கோவிலில் உள்ள நரசிம்ம பெருமாள் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய பல்லவர் கால குடைவரை கோவிலான இங்கு நரசிம்ம பெருமாள் முக்கண்ணோடு அமர்ந்து அருள்பாலிக்கிறார். ஆண்டுதோறும் இந்த கோவிலில் வைகாசி பெருவிழா விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.

    இந்த ஆண்டுக்கான வைகாசி விழா வருகிற 13-ந்தேதி தொடங்குகிறது. விழா தொடர்ந்து 27-ந்தேதி வரை 15 நாட்கள் கோலாகலமாக நடைபெற உள்ளது. விழாவை முன்னிட்டு 14-ந்தேதி காலை சூரியபிரபை வாகனம், மாலை ஹம்ச வாகனத்தில் வீதி உலா வந்து நரசிம்மர் அருள்பாலிக்கிறார்.

    15-ந்தேதி கருடசேவை விமரிசையாக நடைபெற உள்ளது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தொடர்ந்து மாலை ஹனுமந்த வாகனத்திலும், 16-ந் தேதி காலை சேஷவா கனத்திலும் எழுந்தருள்கிறார்.

    பின்னர் ஏகாந்த சேவை, திருமஞ்சனமும், மாலையில் சந்திரபிரபை வாகன வீதி உலா நடக்கிறது. 17-ந்தேதி நாச்சியார் திருக்கோலமும், மாலை யாளி வாகனமும், 18-ந்தேதி காலை சூர்ணா பிஷேகம், மாலையில் யானை வாகனத்திலும் நரசிம்ம பெருமாள் அருள்பாலிக்கிறார்.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் 19-ந்தேதி காலை நடக்கிறது. சிறப்பு அலங்காரம் மற்றும் வாண வேடிக்கையுடன் திருத்தேர் உற்சவம் நடைபெற உள்ளது. பின்னர் அன்று மாலை விசேஷ திருமஞ்சனம், தேர்முட்டி மண்டகப்படி, இரவு அனுமார் சன்னதி வரை பெருமாள் எழுந்தருளல் நடைபெறுகிறது.

    20-ந்தேதி பல்லக்கு, குதிரை வாகனத்தில் எழுந்தருளல்,21-ந்தேதி தீர்த்தவாரி விமரிசையாக நடைபெற உள்ளது. 22-ந்தேதி காலை துவாத சாராதனம் திருமஞ்சனம், மாலையில் தங்க தோளுக்கினியான் உற்சவம் நடக்கிறது. இதைத்தொடர்ந்து வருகிற 23-ந்தேதி முதல் 27-ந்தேதி வரை தொடர்ந்து மாலையில் விடையாற்றி உற்சவம் நடைபெறுகிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர். 

    • கல் குவாரி குட்டையில் குளிக்க சென்ற விஜய் சாரதி, தீபக் சாரதி, முகமது இஸ்மாயில் ஆகிய 3 பேரும் தண்ணீரில் மூழ்கினர்.
    • 200 அடி ஆழ கல்குவாரி குட்டை என்பதால் அவர்களை தேடுவதில் சிரமம் ஏற்பட்டது.

    வண்டலூர்:

    தருமபுரி மாவட்டம் கோபிநாத் பட்டியை சேர்ந்தவர் விஜய் சாரதி(வயது19). இவர் பொத்தேரியில் தங்கி அங்குள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார். நேற்றுமாலை விஜய்சாரதி மற்றும் உடன் படிக்கும் நண்பர்களான உடுமலைப் பேட்டையை சேர்ந்த தீபக் சாரதி(20), தஞ்சாவூர் மாவட்டம் மன்னார்குடி பகுதியை சேர்ந்த முகமது இஸ்மாயில்(19) உள்பட 5 பேருடன் வண்டலூர் அருகே உள்ள கீரப்பாக்கம் ஊராட்சியில் சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பு மூடப்பட்ட கல் குவாரிகுட்டையில் குளிக்க சென்றனர். அப்போது விஜய் சாரதி, தீபக் சாரதி, முகமது இஸ்மாயில் ஆகிய 3 பேரும் தண்ணீரில் மூழ்கினர். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த நண்பர்கள் அவர்களை காப்பாற்ற முயன்றும் முடியவில்லை.

    இதுகுறித்து காயார் போலீசார் மற்றும் மறைமலைநகர் தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு அலுவலர் கார்த்திகேயன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் நேற்று இரவு வரை தேடியும் 3 மாணவர்க ளையும் கண்டு பிடிக்க முடியவில்லை. 200 அடி ஆழ கல்குவாரி குட்டை என்பதால் அவர்களை தேடுவதில் சிரமம் ஏற்பட்டது.

    இந்த நிலையில் இன்று 2-வது நாளாக கல்குவாரி குட்டையில் மாணவர்களை தேடும் பணி நடைபெற்றது. அப்போது விஜய் சாரதி உடலை தீயணைப்பு வீரர்கள் மீட்டனர். மேலும் தண்ணீரில் மூழ்கிய தீபக் சாரதி, முகமது இஸ்மாயில் ஆகிய 2 பேரையும் தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. அவர்களும் தண்ணீரில் மூழ்கி இறந்து இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. 

    • இவான் ஜோஸ்வா மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார்.
    • மாணவர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    தாம்பரம்:

    சென்னை தாம்பரம் சேலையூரை அடுத்த திருவஞ்சேரி பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் பென்னிவர்ட். அவருடைய மகன் இவான் ஜோஸ்வா (வயது 17). சேலையூர் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். இவர் தற்போது பிளஸ்-2 பொதுத்தேர்வு எழுதி தேர்வு முடிவுக்காக காத்திருந்தார். ஐ.ஐ.டி., என்.ஐ.டி. போன்ற மத்திய உயர்கல்வி நிறுவனங்களில் இளநிலை படிப்புகளில் சேர்வதற்காக கட்டாயமாக்கப்பட்டுள்ள ஜே.இ.இ. நுழைவுத்தேர்வும் எழுதி இருந்தார்.

    இந்த நிலையில் நேற்று காலை வழக்கம்போல் தந்தை பென்வர்ட் வேலைக்கு சென்று விட்ட நிலையில், அவருடைய மனைவி தோழியை பார்ப்பதாக சென்று விட்டார். மகன் இவான் ஜோஸ்வா மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார்.

    மாலையில் வீடு திரும்பிய அவரது பெற்றோர் கதவு உள்பக்கம் பூட்டப்பட்டதால், கதவை தட்டியுள்ளனர். நீண்ட நேரம் கதவை தட்டியும் திறக்காததால் சந்தேகமடைந்த அவர்கள், அக்கம்பக்கத்தினர் உதவியுடன் வீட்டின் பின்பக்கம் உள்ள கதவின் பூட்டை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது படுக்கை அறையில் உள்ள மின்விசிறியில் இவான்ஜோஸ்வா தூக்குப்போட்டு தொங்கியதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    இதுகுறித்து உடனடியாக சேலையூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மாணவர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மாணவரின் சாவு குறித்து பெற்றோரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அதில், ஜே.இ.இ. நுழைவுத் தேர்வு முடிவுகள் கடந்த 24-ந்தேதி வெளியான நிலையில் இவான் ஜோஸ்வா அதில் மதிப்பெண் குறைவாக பெற்றிருந்ததாக கூறப்படுகிறது. இதனால் ஏற்பட்ட மனஉளைச்சலில் அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதும் விசாரணையில் தெரியவந்தது.

    • சிங்கம், புலிகளுக்கு நீந்தி குளிக்கும் தொட்டி வைக்கப்பட்டுள்ளது.
    • யானைக்கு ஷவர் குளியல் மற்றும் சேற்று குளியல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    சென்னை வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் 2 ஆயிரத்திற்கும் அதிகமான விலங்குகள் மற்றும் பறவைகள் உள்ளன. இந்த பூங்காவில் வெள்ளைப் புலிகள், வங்கப் புலிகள், சிங்கங்கள், சிறுத்தைகள், யானைகள், மனித குரங்குகள், காண்டாமிருகம், நீர்நாய், முதலைகள் உள்ளிட்ட ஏராளமான விலங்குகள் உள்ளன.

    மேலும் வண்ணத்துப்பூச்சி, பூங்கா மீன் கண்காட்சியகம், குழந்தைகள் பூங்கா, இரவு நேர விலங்குகள் பூங்கா, பாம்புகள் இருப்பிடம் ஆகியவையும் தனித்தனியாக அமைக்கப்பட்டுள்ளது. 

    வண்டலூர் உயிரியல் பூங்காவில் கோடை காலத்தை சமாளிக்கும் வகையில் விலங்குகள் மற்றும் பறவைகளுக்கு பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மேலும் பார்வையாளர்களை கவரும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    வண்டலூர் உயிரியல் பூங்காவை சுற்றிப்பார்க்க உலகின் பல்வேறு பகுதியிலிருந்து ஏராளமானோர் வருகின்றனர். பூங்காவிற்கு வரும் பார்வையாளர்கள் எண்ணிக்கை தற்போது அதிகரித்து வருகிறது.

    இந்த நிலையில் கோடை காலத்தையொட்டி வெயிலின் தாக்கத்திலிருந்து வண்டலூர் உயிரியல் பூங்காவில் விலங்குகளை பாதுகாக்க தேவையான பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. 

    மனித குரங்கு வசிக்கும் பகுதியில் திறந்தவெளி தண்ணீர் குளியல் அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் அவைகள் தண்ணீர் குடிப்பதற்கு ஏதுவாக குழாய்கள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் சூட்டைத் தணிக்கக்கூடிய பழங்களான தர்பூசணி, கிர்ணிப்பழம் மற்றும் இளநீர் அனைத்தும் சேர்க்கப்பட்டு அவைகளை குளிர்சாதன பெட்டியில் வைத்து பழங்கள் உறைந்த நிலையில் விலங்குகளுக்கு கொடுக்கிறார்கள்.

    பறவைகளுக்கு அவைகள் இருப்பிடத்தை சுற்றி சணல் கோணி மூலம் கட்டப்பட்டு அவைகளுக்கு ஷவர் குளியல் ஏற்பாடு செய்யப்பட்டு வெயில் தாக்கம் ஏற்படாமல் பாதுகாக்கப்படுகிறது. சிங்கம், புலிகளுக்கு நீந்தி குளிக்கும் தொட்டி வைக்கப்பட்டுள்ளது. காண்டா மிருகத்திற்கு ஷவர் குளியல் இருக்கும் இடத்தை சுற்றி சேற்று குளியல் ஏற்பாடு செய்து உள்ளனர். நீர்யானை இருக்கும் இடத்தையும் தண்ணீரால் நிரப்பி சேற்றுத் தன்மை மாறாதபடி ஈரப்பதத்தை ஏற்படுத்தி கொடுத்து அந்த விலங்குகளின் சூட்டை தணிக்கின்றனர். அதேபோல் யானைக்கு ஷவர் குளியல் மற்றும் சேற்று குளியல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

    நெருப்புக்கோழி, ஒட்டகச்சிவிங்கி வரிக்குதிரை போன்றவைகளுக்கு மதியம் 11 மணி 12 மணி என ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை தண்ணீரை சுழற்சி அடிக்கும் வகையில் குழாய்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இந்த கோடை வெயிலில் இருந்து வண்டலூர் உயிரியல் பூங்காவில் விலங்குகளையும், பறவைகளையும் பாதுகாக்கும் பணியில் வண்டலூர் பூங்கா நிர்வாகம் சிறப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

    • நெல்லை எக்ஸ்பிரஸ் ரெயிலில் நடத்திய சோதனையில் ரூ.4 கோடி ரொக்கப்பணம் பிடிபட்டது.
    • வழக்கு விசாரணைக்கு நயினார் நாகேந்திரன் ஆஜராக வேண்டி இருந்த நிலையில், 10 நாள் அவகாசம் கேட்டு கடிதம் அளிக்கப்பட்டது.

    தாம்பரம்:

    பாராளுமன்ற தேர்தலையொட்டி, கடந்த 6-ந் தேதி இரவு தேர்தல் பறக்கும் படையினர் சென்னை தாம்பரம் ரெயில் நிலையத்தில் வந்து நின்ற நெல்லை எக்ஸ்பிரஸ் ரெயிலில் நடத்திய சோதனையில் ரூ.4 கோடி ரொக்கப்பணம் பிடிபட்டது. பிடிபட்ட பணம் நெல்லை பா.ஜனதா வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு தேர்தல் செலவுக்காக வாக்காளர்களுக்கு கொடுக்க கொண்டு சென்றதாக விசாரணையில் தெரியவந்ததாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

    இது தொடர்பாக தாம்பரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து நயினார் நாகேந்திரன் ஓட்டலில் வேலை பார்த்த சதீஷ், பெருமாள் உள்பட3 பேரை கைது செய்து தாம்பரம் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். பின்னர் 3 பேரும் நிபந்தனை ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.

    இந்த வழக்கில் நயினார் நாகேந்திரன், ஆசைதம்பி, சென்னை அபிராமிபுரத்தை சேர்ந்த பா.ஜனதா மாநில தொழில் துறை பிரிவின் தலைவர் கோவர்தனன், பா.ஜனதா கட்சியை சேர்ந்த ஜெய்சங்கர், நவீன், பெருமாள் உள்ளிட்டோர் தாம்பரம் போலீஸ் நிலையத்தில் விசாரணைக்கு ஆஜராகும் படி சம்மன் அனுப்பப்பட்டது. வழக்கு விசாரணைக்கு நேற்று முன்தினம் நயினார் நாகேந்திரன் ஆஜராக வேண்டி இருந்த நிலையில், 10 நாள் அவகாசம் கேட்டு கடிதம் அளிக்கப்பட்டது.

    அதனை தொடர்ந்து நேற்று ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் மற்றும் நயினார் நாகேந்திரனின் உறவினரான முருகன் ஆகியோர் தாம்பரம் போலீஸ் நிலையத்திற்கு வந்து போலீஸ் உதவி கமிஷனர் நெல்சன், இன்ஸ்பெக்டர் பாலமுரளி சுந்தரம் ஆகியோர் முன்னிலையில் ஆஜரானார்கள்.

    அப்போது அவர்கள் அளித்த வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது. இது தொடர்பாக நயினார் நாகேந்திரன் நேரில் ஆஜராக 2-வது சம்மன் அனுப்ப ஆலோசனை நடைபெற்று வருவதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

    ×