நகங்களை சுத்தமாக வைத்திருக்க வேண்டியது உடல் ஆரோக்கியத்திற்கு முக்கியம்.
வெதுவெதுப்பான நீரில் சிறிதளவு உப்பைக் கலந்து அதில் நகங்களை 5 நிமிடம் மூழ்க வைத்தபின், பிரஷ் வைத்து மென்மையாகத் தேய்த்தால், நகங்களில் உள்ள அழுக்கு நீங்கி பளபளப்பாக இருக்கும்.
ஆலிவ் எண்ணெய் கொண்டு நகங்களை மசாஜ் செய்து, 20 நிமிடம் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவினால், நகங்களின் வேர்களுக்கு ரத்த ஓட்டம் அதிகரிக்கும். இதனால் நகங்கள் சீராக வளரும்.
நகங்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் எலுமிச்சை முக்கிய பங்கு வகிக்கிறது. நகக்கண்களில் ஏற்படும் 'நகச்சுற்று' போன்ற பிரச்சனைகளையும் இது குணப்படுத்தும். எலுமிச்சையை சிறு துண்டுகளாக நறுக்கி அதைக் கொண்டு நகங்களை மசாஜ் செய்து, 10 நிமிடங்கள் கழித்து நீரில் கழுவவும்.
சமையலில் பயன்படுத்தும் பூண்டு, நகங்களை வலிமைப்படுத்தும் தன்மை கொண்டது. ஒரு பூண்டுப் பல்லை எடுத்து மேல் தோலை நீக்கி, முனையை சிறிதாக நறுக்கி பிசுபிசுப்பாக இருக்கும் அந்தப் பக்கத்தைக் கொண்டு நகங்களின் மேல் நன்றாக தேய்த்து மசாஜ் செய்து 20 நிமிடம் கழித்து கைகளைக் கழுவவும். இதனைத் தொடர்ந்து செய்து வந்தால் நகங்கள் உடையாமல் உறுதியாக இருக்கும்.