உலகநாயகன் உள்ளிட்ட பட்டங்களை குறிப்பிட்டு தன்னை யாரும் அழைக்க வேண்டாம் என்று திடீர் அறிவிப்பு ஒன்றை நடிகர் கமல்ஹாசன் வெளியிட்டுள்ளார்.
அதில், என் மீது கொண்ட அன்பினால் 'உலக நாயகன்' உட்பட பல பிரியம் ததும்பும் பட்டங்களால் என்னை அழைக்கிறீர்கள்
உங்கள் இந்த அன்பால் நெகிழ்ந்துமிருக்கிறேன். உங்களின் பிரியத்தின் மீது எனக்கு மாறாத நன்றியுணர்வும் உண்டு. கலையை விடக் கலைஞன் பெரியவன் இல்லை என்பது என் ஆழமான நம்பிக்கை.
சினிமாக் கலை, எந்த ஒரு தனி மனிதனையும் விட பெரியது. அந்தக் கலையில் மேலும் மேலும் கற்றுக்கொண்டு பரிணாமம் அடைய விரும்பும் ஒரு மாணவன் தான் நான்
நிறைய யோசனைக்குப் பிறகு ஒரு முடிவுக்கு வர நேர்ந்தது. மேலே குறிப்பிட்டது போன்ற பட்டங்களையும் அடைமொழிகளையும் வழங்கியவர்களுக்கு எந்த மரியாதைக் குறைவும் வந்து விடாத வண்ணம் அவற்றைத் துறப்பது என்பதே அது.
எனவே, என் மீது பிரியம் கொண்ட அனைவருக்குமாக ஒரு வேண்டுகோள் இனிவரும் காலத்தில் என்னை கமல்ஹாசன் என்றோ கமல் என்றோ குறிப்பிட்டால் போதுமானது என்று கேட்டுக்கொள்கிறேன். என தெரிவித்துள்ளார்.