உணவுப்பொருட்கள் மீந்துவிட்டால் வீட்டில் பெண்கள் கவலைப்படுவார்கள். ஆனால் சில உணவுப்பொருட்கள் மீதமாகிவிட்டால் கவலைப்படத் தேவையில்லை. அவற்றை வேறு மாதிரி தயாரித்து பயன்படுத்தலாம்.
மீதமான தேங்காய் சட்னியை கெட்டியான புளிப்பு மோரில் சேர்த்து ஒரு கொதி விட்டால், சுவையான மோர்க்குழம்பு தயார்.
ஊறுகாய் பாட்டிலில் காய் எல்லாம் தீர்ந்த பிறகு மிளகாய் வண்டல் மீந்திருந்தால், பாகற்காய், வெண்டைக்காய் போன்றவற்றுக்குள் அடைத்து 'ஸ்டப்டு' வெஜிடபிள் கறி செய்யலாம்.
பிரட் மீந்து விட்டதா? அதை மிக்சியில் போட்டு பொடியாக்கி, உப்பு, கரம் மசாலா, கொத்தமல்லித் தழை, வெங்காயம் சேர்த்துப் பிசைந்து 'கட்லெட்டாக பொரித்து எடுக்கலாம். சுவையாக இருக்கும்.
மீதமான குழம்பு, சாம்பாரை பயன்படுத்தி சுவையான டிபன் சுலபமாக செய்யலாம். தேவையான அளவு தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து கொதிக்க விடவும். அதனுடன் வறுத்த ரவையைக் கொட்டிக் கிளறவும். வித்தியாசமான சுவையில் உடனடி கிச்சடி ரெடி.
மீந்துவிட்ட தேங்காய் சட்னியை ரவா தோசை மாவில் கலந்து தோசை வார்த்தால் சுவையாக இருக்கும்.
பருப்புவடை மீந்து விட்டால், மறுநாள் வடைகறி செய்யலாம். அல்லது மிக்சியில் ஒரு சுற்று சுற்றி எடுத்து, வெந்த காய்களுடன் தேங்காய் எண்ணெய் சேர்த்துக் கிளறி இறக்க, உசிலி சுவையாக இருக்கும்.