தலையணை உபயோகிக்காமல் பக்கவாட்டு பகுதியில் படுத்து தூங்கும் பழக்கம் கொண்டவர்கள் தூக்கத்தில் சிரமங்களை எதிர்கொள்ள நேரிடும். ஏனெனில் அவர்களின் தலை பகுதிக்கும், முதுகெலும்பு பகுதிக்கும் ஆதரவு தேவைப்படும். அவை இரண்டும் சவுகரியமான தோரணையில் இருந்தால்தான் தூக்கம் சீராக நடைபெறும்.
அவ்வாறு ஆதரவு இல்லாமல் இருந்தால் கழுத்து, தோள்பட்டைகளில் வலி, தசைப்பிடிப்பு ஏற்படலாம். அப்படி நேர்ந்தால் காலையில் தூங்கி எழும்போது கழுத்து, தோள்பட்டை வலியால் அவதிப்பட வேண்டியிருக்கும்.
நிறைய பேர் முகத்தையும், வயிற்றையும் பாய், மெத்தையில் அழுத்திய நிலையில் குப்புறப்படுத்து தூங்கும் வழக்கத்தை பின்பற்றுவார்கள். சிலர் அன்னார்ந்து பார்த்தபடி தூங்கும் வழக்கத்தை கடைப்பிடிப்பார்கள்.
சிலர் கால்களை வளைத்து தலையணைக்குள் புதைத்தபடி தூங்குவார்கள். எந்த முறையில் தூங்கினாலும் முதுகெலும்பு, கழுத்து பகுதிகளுக்கு அழுத்தம் கொடுக்காமல் இருக்க வேண்டும்.
முதுகெலும்பு பகுதியை பராமரிக்க ஏதுவான மெத்தையை பயன்படுத்தவும்.
தலையணை பயன்படுத்தாமல் உறங்கும் வழக்கத்தை பின்பற்றும்போது கழுத்து பகுதி அசவுகரியமாக இருப்பதாக உணர்ந்தால், கழுத்துக்கு அடியில் துண்டை உருண்டை வடிவில் உருட்டிய நிலையில் வைக்கலாம்.
தொடர்ந்து தலையணை இல்லாமல் தூங்குவது அசவுகரியத்தையோ, வலியையோ ஏற்படுத்தினால் தலையையும், கழுத்தையும் தாங்கிப்பிடிக்கும் வகையில் வளைவுகளுடன் அமைந்திருக்கும் தலையணையை பயன்படுத்தலாம்.
கழுத்து வலி, முதுகு வலி, தோள்பட்டை வலி, தலைவலி, குறட்டை உள்ளிட்ட பிரச்சனை கொண்டவர்களுக்கு ஏதுவாக பல்வேறு விதமான தலையணைகள் புழக்கத்தில் இருக்கின்றன.
அவற்றுள் சவுகரியமான தலையணையை உபயோகப்படுத்துவது குறித்து அது சார்ந்த நிபுணர்களின் வழிகாட்டுதல்களை பின்பற்றுவது நல்லது.