உடல் எடையை குறைப்பதிலும், உடல் ஆரோக்கியத்தை பேணும் விஷயத்திலும் காலை வேளையில் பின்பற்றும் உணவுப்பழக்கங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன.
அந்த வகையில் காலையில் பருகும் பானமும் முக்கியமானது. சீரக தண்ணீர் பருகுவது சிறந்ததா என்று பார்ப்போம்.
அதிக கலோரிகளை எரிக்கவும், வளர்சிதை மாற்றத்தை ஊக்குவிக்கவும் விரும்புபவர்கள் சீரக தண்ணீர் பருகலாம்.
ஒரு லிட்டர் சீரக தண்ணீரில் 7 கலோரிகளே உள்ளன. அதனால் கலோரி உட்கொள்ளலை குறைக்க சிறந்த வழிமுறையை நாடுபவர்களுக்கு ஏற்ற பானமாக விளங்குகிறது.
உடல் எடையை நிர்வகிப்பதற்கும் வழிவகை செய்கிறது. செரிமான நொதிகளை தூண்டி செரிமானம் எளிதாக நடைபெறவும், மலச்சிக்கலை போக்கவும் துணைபுரிகிறது.
சீரகத்தில் உள்ளடங்கி இருக்கும் பயோ ஆக்டிவ் சேர்மங்கள் வயிறு வீக்கத்தை குறைக்கவும், குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவுகின்றன.
சீரகத்தில் இருக்கும் பயோபிளவனாய்டுகள் வளர்சிதை மாற்ற விகிதத்தை அதிகரித்து உடல் எடையை குறைக்கவும், கொழுப்பை திறம்பட எரிக்கவும், உடல் ஆற்றலை ஊக்கப்படுத்தவும் உதவுகின்றன.
சீரக தண்ணீர் இன்சுலின் உணர்திறனை அதிகரிப்பதன் மூலம் ரத்த சர்க்கரை அளவையும் ஒழுங்குபடுத்துகிறது.
சர்க்கரை அதிகரிப்பதை தடுத்து நீரிழிவு நோயை நிர்வகிக்கவும் செய்யும். கணைய ஆரோக்கியத்தையும் பாதுகாக்கும்.
சீரக நீர் தயாரிக்க ஒரு டேபிள்ஸ்பூன் சீரகத்தை ஒரு லிட்டர் தண்ணீரில் போட்டு இரவு முழுவதும் ஊறவைக்கவும். காலையில் அதனை வடிகட்டி பருகிவிடலாம்.