தமிழில் 'அழகிய அசுரா, கேடி பில்லா கில்லாடி ரங்கா, சரவணன் இருக்க பயமேன், உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள ரெஜினா கசாண்ட்ரா தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார்.
தற்போது 2 இந்தி படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் இந்தியில் நடிக்க செல்லும் தென்னிந்திய நடிகைகள் நிறைய பிரச்சினைகளை எதிர்கொள்வதாக ரெஜினா தெரிவித்துள்ளார்.
"தென்னிந்தியாவில் இருந்து இந்தி திரையுலகுக்கு செல்லும் நடிகர், நடிகைகளும், தொழில்நுட்ப கலைஞர்களும் நிறைய பிரச்சினைகளை எதிர்கொள்கிறார்கள்.
இந்தி தெரியாத தென்னிந்திய கலைஞர்களுக்கு வாய்ப்புகள் அளிக்கவும் இந்தி திரையுலகினர் ஆர்வம் காட்டுவது இல்லை. இந்தி படங்களில் நடிக்க முடிவு செய்துவிட்டால் மும்பையில்தான் தங்க வேண்டும்.
பிடித்தாலும், பிடிக்காவிட்டாலும் நிகழ்ச்சிகளில் பங்கேற்க வேண்டும். ஆனால் தென்னிந்திய திரையுலகில் அப்படி இல்லை. மற்ற மொழி திரையுலகை ஒப்பிடும்போது, இந்தி சினிமா துறையில் போட்டிகளும் அதிகம்'' என்றார்.