search icon
என் மலர்tooltip icon

    விருதுநகர்

    • பெண்கள் தங்களின் பிரச்சனைகளை பேசுகிறார்கள்.
    • வெற்றி பெறுவோம் என்ற முழு நம்பிக்கை உள்ளது.

    விருதுநகர் மக்களவை தொகுதியில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் போட்டியிடும் ராதிகா சரத்குமார் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அவரிடம் கேட்கப்பட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதிலும் வருமாறு:-

    கேள்வி: முதன்முறையாக வேட்பாளராக இருக்கும் அனுபவம் எவ்வாறு இருக்கிறது?

    பதில்: எல்லா இடங்களிலும் மக்கள் தங்களின் அன்பை உணர்த்துகிறார்கள். பெண்கள் தங்களின் பிரச்சனைகளை பேசுகிறார்கள். வெற்றி பெறுவோம் என்ற முழு நம்பிக்கை உள்ளது.

    கேள்வி: நீங்கள் பாரதிய ஜனதாவில் சேர்ந்தது ஏன்?

    பதில்: ஏன் சேரக்கூடாதா? பிரதமர் நரேந்திர மோடியின் ஆட்சியில் நாட்டில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் உங்களுக்கு தெரியவில்லையா?

    கேள்வி: தொகுதியில் உங்களுக்கு முக்கிய போட்டியாளர் யார்?

    பதில்: விஜய பிரபாகரோ அல்லது மாணிக்கம் தாகுரோ. போட்டியாளர்களை பற்றி சிந்திக்கவில்லை. நாங்கள் எங்களின் போசனைகளை ஊக்குவிக்கவும், அதை மக்களிடையே பரப்பவும் முயற்சிக்கிறோம்.

    கேள்வி: எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டால் தொடரந்து செயல்படுவீர்களா?

    பதில்: அதையெல்லாம் முடிவு செய்ய இன்னும் நேரம் இருக்கிறது. இப்போது தேர்தல்வெற்றியே ஒரே இலக்கு என்றார்.

    • பினாமி பெயர்களில் பல இடங்களில் சொத்துக்களையும் வாங்கி குவித்ததாகவும் புகார்கள் எழுந்தது.
    • சார்பதிவாளர் கட்டியுள்ள சொகுசு பங்களாவில் நடைபெற்ற சோதனையால் அப்பகுதியில் பரபரப்பை ஏற்பட்டது.

    ஸ்ரீவில்லிபுத்தூர்:

    ஸ்ரீவில்லிபுத்தூர் வன்னியம்பட்டி தாய்நகர் பகுதியை சேர்ந்தவர் முத்துசாமி (வயது 55). இவர் கடந்த 2023 ஜனவரி முதல் அக்டோர் வரை 10 மாதங்கள் ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள சார்பதிவாளர் அலுவலகத்தில் சார்பதிவாளராக பணி புரிந்தார்.

    அவர் பணிபுரிந்த காலங்களில் பத்திரப்பதிவு செய்யவருபவர்களிடம் லஞ்சம் வாங்கிக் கொண்டு பத்திரம் பதிவு செய்து வந்ததாக புகார் எழுந்தது. அதனை தொடர்ந்து அவர் செங்கல்பட்டுக்கு பணி மாறுதல் செய்யப்பட்டு அங்கு பணிபுரிந்து வருகிறார்.

    ஸ்ரீவில்லிபுத்தூரில் பணி புரிந்த காலகட்டங்களில் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாகவும், பினாமி பெயர்களில் பல இடங்களில் சொத்துக்களையும் வாங்கி குவித்ததாகவும் புகார்கள் எழுந்தது.

    இந்த நிலையில் நேற்று விருதுநகர் லஞ்ச ஒழிப்பு போலீசார் தாய் நகரில் கட்டப்பட்டுள்ள அவரது பிரமாண்டமான சொகுசு பங்களாவில் காலை 11 மணி முதல் மாலை 4 வரை சோதனை நடத்தினர்.

    மேலும் பொதுப் பணித்துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு பொறியாளர் பரமசிவம் தலைமையிலான குழுவினர் சார்பதிவாளர் கட்டியுள்ள சொகுசு பங்களாவை மதிப்பீடு செய்ததாக கூறப்படுகிறது.

    5 மணி நேரம் சார்பதிவாளர் கட்டியுள்ள சொகுசு பங்களாவில் நடைபெற்ற சோதனையால் அப்பகுதியில் பரபரப்பை ஏற்பட்டது.

    • மகளும், மனைவியும் தூக்கு போட்டு தற்கொலை செய்திருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
    • ஒரே நாளில் மகளும், தாயும் அடுத்தடுத்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    விருதுநகர்:

    விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள மாரனேரி போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட அம்மாபட்டியைச் சேர்ந்தவர் பாலமுருகன், கட்டிட தொழிலாளி. இவரது மனைவி பாப்புக்குட்டி (வயது 41), பட்டாசு ஆலையில் வேலை பார்த்து வருகிறார்.

    இவர்களுக்கு ஐஸ்வர்யா (19), இந்துமதி (13) என்ற 2 மகள்களும், அருண்குமார் (10) என்ற மகனும் உள்ளனர். இதில் இந்துமதி அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தார்.

    கடந்த சில நாட்களாக அவர் பள்ளிக்கு செல்லவில்லை என கூறப்படுகிறது. இந்தநிலையில் நேற்று பாலமுருகன் வேலைக்கு சென்று விட ஐஸ்வர்யா, அருண் குமாரும் வழக்கம்போல் பள்ளிக்கு புறப்பட்டனர்.

    பள்ளிக்கு செல்லாமல் இந்துமதி மட்டும் வீட்டில் இருந்ததாக கூறப்படுகிறது. இதனை பாப்புக்குட்டி கண்டித்துள்ளார். இதனால் இந்துமதி விரக்தி அடைந்துள்ளார்.

    சிறிது நேரத்திற்கு பின் பாப்புக்குட்டி வெளியே சென்று விட்டார். அப்போது வாழ்க்கையில் வெறுப்படைந்த இந்துமதி வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். வெளியே சென்று விட்டு வீட்டுக்கு வந்த பாப்பு குட்டி மகள் தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    தான் கண்டித்ததால் மகள் விபரீத முடிவை எடுத்து விட்டதாக நினைத்து பாப்புக்குட்டி கலங்கினார். மகள் சாவுக்கு காரணமாகி விட்டோமே என நினைத்து மனம் வருந்திய பாப்புக்குட்டி தனது கணவருக்கு செல்போன் மூலம் தகவல் தெரிவித்தார். அப்போது நான் இனிமேல் உயிருடன் இருக்க மாட்டேன் என்று கூறிவிட்டு செல்போன் இணைப்பை துண்டித்தார்.

    பின்னர் மகள் அருகிலேயே பாப்புக்குட்டியும் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதற்கிடையே மனைவி கூறியதை கேட்டு பதட்டம் அடைந்தார். மேலும் அக்கம்பக்கத்தில் வசிப்பவர்களுக்கு செல்போன் மூலம் தகவல் தெரிவித்து மனைவியை காப்பாற்ற முயன்றார். ஆனால் அவர்கள் யாரும் செல்போனை எடுக்காததால் பாலமுருகன் அவசரம், அவசரமாக வீட்டிற்கு வந்தார்.

    அப்போது மகளும், மனைவியும் தூக்கு போட்டு தற்கொலை செய்திருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து மாரனேரி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து தாய், மகளின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சிவகாசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரே நாளில் மகளும், தாயும் அடுத்தடுத்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • அரசின் திட்டங்களால், ஒவ்வொரு குடும்பமும் பயன் அடைந்து வருகிறது.
    • தேர்தலுக்குத் தேர்தல் பிரதமர் மோடி வாயால் வடை சுடுகிறார் என மக்களுக்குத் தெரிந்துவிட்டது.

    தென்காசி, விருதுநகர் தொகுதி திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் விருதுநகர் ஸ்ரீவில்லிபுத்தூரில் தேர்தல் பரப்புரை தொடங்கியது.

    இதில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

    வீரத்தின் அடையாளமான விருதுநகருக்கும், தென்றல் வீசும் தென்காசிக்கும் வந்துள்ளேன். பிரசாரத்தில் இன்றோடு 10 தொகுதிகளை கடக்கிறேன்.

    செல்லும் இடமெல்லாம் மக்கள் திரண்டு வந்து ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

    வேட்பாளர்களை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும். பிரசாரம் மேற்கொள்ளும் இடங்களில் மக்களின் எழுச்சியை பார்க்கிறேன்.

    அரசின் திட்டங்களால், ஒவ்வொரு குடும்பமும் பயன் அடைந்து வருகிறது.

    மாநிலம் முழுவதும் 16 லட்சம் பள்ளிக் குழந்தைகள் காலை உணவுத் திட்டத்தில் பசியாறுகிறார்கள்

    தாய்வீட்டுச் சீர் போல எங்கள் அண்ணன் ஸ்டாலின் மாதம் ரூ.1000 தருகிறார் என 1.06 கோடி பெண்கள் இன்று கூறுகின்றனர்.

    புதுமைப்பெண் திட்டம் மூலம் கல்லூரி மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கப்படுகிறது. அவர்கள் படித்து வேலைக்குச் சென்றால் அவர்கள் தங்க தோழி விடுதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

    இதனால்தான் உங்கள் குடும்பத்தில் ஒருவனாக வாக்கு கேட்டு வந்துள்ளேன்.

    சிவகாசி பட்டாசு தொழிலாளர்கள் நலனுக்கு மத்திய பாஜக அரசு என்ன செய்தது..?

    சீனப்பட்டாசுகளை இந்தியாவில் இறக்குமதி செய்வதை முழுமையாக தடை செய்வோம் என கூறினார்கள். ஆனால் இன்று வரை சட்ட விரோதமாக சீனப்பட்டாசுகள் இங்கு விற்பனை செய்யப்படுகிறது.

    டெல்லி, மும்பையில் கோடிக்கணக்கான சீனப் பட்டாசுகள் கைப்பற்றபட்டது.

    இதனால் சிவகாசியில் பட்டாசு தொழிற்சாலைகள் ரூ.1000 கோடி அளவுக்கு சரிவை சந்தித்தது.

    இப்படி தொழில் நலிவடைந்துள்ள நேரத்தில், ஆடம்பரப் பட்டியலில் பட்டாசை சேர்ந்து 28% ஜிஎஸ்டி வரி போட்ட கட்சிதான் பாஜக.

    புதிய வாக்குறுதிகளைக் கொடுத்தால், நிறைவேறாத பழைய வாக்குறுதிகளை எல்லாம் மக்கள் மறந்துவிடுவார்கள் என பிரதமர் மோடி தப்புக்கணக்கு போடுகிறார்.

    தேர்தலுக்குத் தேர்தல் பிரதமர் மோடி வாயால் வடை சுடுகிறார் என மக்களுக்குத் தெரிந்துவிட்டது.

    செய்யும் அரசு, செய்யப் போகும் அரசு தான் திராவிட மாடல் அரசு. திராவிட இயக்கம் உருவானதே சமூக உரிமைக்காக தான். நம் உரிமைகளை பறிக்கும் கூட்டம் தான் பாஜக.

    சமூக நீதியை நிலைநாட்ட இந்தியா கூட்டணி ஆட்சியமைக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தேர் திருவிழாவில் பிரம்மாண்டமாக மாட்டுச்சந்தை நடைபெறும்.
    • மாட்டு சந்தைக்கு நாட்டு மாடுகள் விற்பனைக்காக வந்தன.

    தருமபுரி:

    தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அடுத்த அதியமான் கோட்டையில் பல நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த மேல் காளியம்மன் மற்றும் கீழ்காளியம்மன் கோவில் உள்ளது. இங்கு ஒவ்வொரு ஆண்டும் பங்குனி மாதம் இறுதியில் திருவிழா தொடங்கி சித்திரை மாதம் முதல் வாரம் வரை தேர்த்திருவிழா நடப்பது வழக்கம்.

    அதேபோல், இந்த ஆண்டு தேர் திருவிழா நேற்று தொடங்கியது. இந்த தேர் திருவிழாவில் பிரம்மாண்டமாக மாட்டுச்சந்தை நடைபெறும்.

    அந்த சந்தையில் தருமபுரி மற்றும் அந்தியூர், காங்கேயம்,மேச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும், ஆந்திரா கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும் மாடுகள் விற்பனைக்கு வருவது வழக்கம்.

    இந்த வருடம் பாராளுமன்ற தேர்தல் நடைபெறுவதால் மாடுகள் வரத்து குறைந்துள்ளது. மேலும் கொண்டு வரப்பட்ட கால்நடைகளுக்கு தீவனம் பற்றாக்குறை ஏற்பட்டு உள்ளது.

    மேலும் மாட்டு சந்தைக்கு நாட்டு மாடுகள் விற்பனைக்காக வந்தன.

    தற்போது பாராளுமன்ற தேர்தல் நடைமுறைகள் அமலில் உள்ளதால் விவசாயிகள் கால்நடைகளை விற்பனை செய்து எடுத்துச் செல்லும் பணத்திற்கு போதிய ஆவணங்கள் இல்லாததால் கொண்டு வரப்படும் பணங்கள் கைப்பற்றப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் மாடுகளை வாங்கவும், விற்கவும் விவசாயிகள் ஆர்வம் காட்டவில்லை. அதனால் அதியமான்கோட்டையில் கூடியுள்ள மாட்டுச்சந்தை களையிழந்து காணப்பட்டது.

    • நாளை காலை சிவகாசி பகுதியில் உள்ள தீப்பெட்டி, பட்டாசு, அச்சகம் உள்ளிட்ட தொழில்களை சார்ந்த அதிபர்களையும், அ.தி.மு.க., தே.மு.தி.க. கூட்டணி கட்சி நிர்வாகிகளையும் சந்தித்து பேசுகிறார்.
    • விருதுநகர் பாராளுமன்ற தொகுதி அ.தி.மு.க. கூட்டணியில் போட்டியிடும் தே.மு.தி.க. வேட்பாளரான விஜயகாந்த் மகனை ஆதரித்து பொதுமக்களிடம் வாக்கு சேகரிக்கிறார்.

    சிவகாசி:

    பாராளுமன்ற தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில் தமிழ்நாட்டில் அ.தி.மு.க. தலைமையில் அமைந்துள்ள கூட்டணியில் தே.மு.தி.க., புதிய தமிழகம், எஸ்.டி.பி.ஐ., புரட்சி பாரதம் ஆகிய கட்சிகள் இணைந்துள்ளன. புதுச்சேரி உள்பட 40 தொகுதிகளிலும் போட்டியிடும் அ.தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து எடப்பாடி பழனிசாமி திருச்சியில் தனது பிரசாரத்தை தொடங்கினார்.

    அங்கு ஒரே மேடையில் 40 வேட்பாளர்களையும் அறிமுகப்படுத்தி பேசினார். இதில் தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா, புதிய தமிழகம் கட்சி நிறுவனர் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் கலந்து கொண்டனர். இதையடுத்து நேற்று தூத்துக்குடியில் பிரசாரம் செய்த அவர் இன்று மாலை தென்காசி தொகுதிக்கு உட்பட்ட சங்கரன்கோவில் வருகிறார்.

    அங்கு நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு தென்காசி பாராளுமன்ற தொகுதி வேட்பாளரை ஆதரித்து வாக்கு சேகரித்து விட்டு அங்கிருந்து கார் மூலம் சிவகாசிக்கு வருகிறார். சிவகாசியில் உள்ள பிரபல ஓட்டலில் இரவு அவர் தங்குகிறார். நாளை காலை சிவகாசி பகுதியில் உள்ள தீப்பெட்டி, பட்டாசு, அச்சகம் உள்ளிட்ட தொழில்களை சார்ந்த அதிபர்களையும், அ.தி.மு.க., தே.மு.தி.க. கூட்டணி கட்சி நிர்வாகிகளையும் சந்தித்து பேசுகிறார்.

    மாலை 5 மணிக்கு சிவகாசி பாவடி தோப்பில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு விருதுநகர் பாராளுமன்ற தொகுதி அ.தி.மு.க. கூட்டணியில் போட்டியிடும் தே.மு.தி.க. வேட்பாளரான விஜயகாந்த் மகனை ஆதரித்து பொதுமக்களிடம் வாக்கு சேகரிக்கிறார். அதனைத் தொடர்ந்து கார் மூலம் மதுரை செல்கிறார்.

    எடப்பாடி பழனிசாமி சிவகாசிக்கு பிரசாரம் செய்ய வருவதையொட்டி பொதுக்கூட்ட ஏற்பாடுகளை முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி தலைமையில் அ.தி.மு.க.வினரும் கூட்டணி கட்சி நிர்வாகிகளும் செய்து வருகிறார்கள்.

    • தென்காசி தொகுதி தி.மு.க.வுக்கும், விருதுநகர் தொகுதி காங்கிரசுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது.
    • மு.க.ஸ்டாலின் வருகையை முன்னிட்டு ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் இன்று போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

    ஸ்ரீவில்லிபுத்தூர்:

    இந்தியாவின் 18-வது பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடத்த திட்டமிடப்பட்டு பணிகள் தொடங்கியுள்ளன. இதில் தமிழகம் மற்றும் புதுச்சேரியை சேர்த்து மொத்தமுள்ள 40 தொகுதிகளுக்கும் ஏப்ரல் 19-ந்தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது.

    4 முனைப்போட்டி ஏற்பட்டுள்ள தமிழ்நாட்டில் தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜ.க. தலைமையிலான கூட்டணியும், நாம் தமிழர் கட்சி தனித்தும் களம் காண்கிறது. இதில் தி.மு.க. தலைமையிலான இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் கடந்த 22-ந்தேதி திருச்சியில் தேர்தல் பிரசார பயணத்தை தொடங்கினார்.

    23-ந்தேதி தஞ்சை, நாகையிலும், 25-ந்தேதி நெல்லை, கன்னியாகுமரியிலும், நேற்று (26-ந்தேதி) தூத்துக்குடியிலும் தீவிர பிரசாரம் மேற்கொண்டார். அப்போது ஒவ்வொரு தொகுதியின் வேட்பாளரையும் அறிமுகம் செய்துவைத்து பேசினார். தூத்துக்குடியில் பிரசாரத்தை முடித்துக் கொண்டு நேற்று இரவு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் விருதுநகர் வருகை தந்தார்.

    மாவட்ட எல்லையில் அவருக்கு அமைச்சர்கள் சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு மற்றும் நிர்வாகிகள் வரவேற்பு அளித்தனர். இதையடுத்து விருதுநகரை அடுத்த ஆர்.ஆர்.நகர் பகுதியில் உள்ள ராம்கோ விருந்தினர் மாளிகையில் இரவு தங்கினார். இன்று தென்காசி, விருதுநகர் தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து அவர் பிரசாரம் செய்கிறார்.


    இதில் தென்காசி தொகுதி தி.மு.க.வுக்கும், விருதுநகர் தொகுதி காங்கிரசுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது. இங்கு களம் காணும் வேட்பாளர்களை ஆதரித்து ஸ்ரீவில்லிபுத்தூரை அடுத்த கிருஷ்ணன்கோவிலில் நடைபெறும் பிரசார கூட்டத்தில் வேட்பாளர்களை அறிமுகப்படுத்தி ஆதரவு திரட்டி பேச உள்ளார்.

    ஸ்ரீவில்லிபுத்தூரில் இன்று மாலை மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பேசும் மேடையின் முகப்பு பகுதி பாராளுமன்ற கட்டிடம் வடிவில் பிரமாண்டமாக அமைக்கப்பட்டுள்ளது. மதுரை-தென்காசி சாலையில் இருபுறமும் 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சியினரின் கொடிகள் நட்டு, தோரணங்கள் வைக்கப்பட்டுள்ளன.

    பிரசார கூட்டம் முடிந்ததும் முதலமைச்சர் அங்கிருந்து சாலை மார்க்கமாக மதுரை சென்று பின்னர் விமானத்தில் சென்னை புறப்படுகிறார். முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வருகையை முன்னிட்டு தி.மு.க. தொண்டர்கள் மற்றும் கூட்டணி கட்சியினர் உற்சாகம் அடைந்துள்ளனர்.

    மு.க.ஸ்டாலின் வருகையை முன்னிட்டு ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் இன்று போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ராஜபாளையத்தில் இருந்து மதுரை செல்லும் பேருந்துகள் ஸ்ரீவில்லிபுத்தூர் சர்ச் பேருந்து நிறுத்தத்தில் இருந்து சிவகாசி, விருதுநகர் வழியாக மதுரை சென்றடையும். அதே போல் மதுரையில் இருந்து ராஜபாளையம் செல்லும் பேருந்துகளும் திருமங்கலத்தில் இருந்து விருதுநகர், சிவகாசி வழியாக இயக்கப்படும். அத்துடன் இன்று முழுவதும் ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து கனரக வாகனங்கள் இயக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

    சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    • உரிய ஆவணமின்றி கொண்டுவரப்பட்ட ரூ.1 லட்சத்து 20 ஆயிரம் பணத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.
    • தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

    சாத்தூர்:

    தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டு நடத்தை விதிகள் அமலில் உள்ள நிலையில் தேர்தல் பறக்கும் படையினர் பல்வேறு பகுதிகளில் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். சாத்தூர் அரசினர் தொழிழ் பயிற்சி மைய உதவி பயிற்சி அலுவலர் சஞ்சய்காந்தி தலைமையிலான தேர்தல் பறக்கும் படையினர் சாத்தூர்-தாயில்பட்டி சாலையில் உள்ள ஊஞ்சம்பட்டி விளக்கில் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

    அப்போது அந்த வழியாக வந்த இருசக்கர வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது அவர் தனியார் நிதி நிறுவனத்தில் பணியாற்றும் பிச்சைமணி (வயது 25) என்பதும், இவர் திருமங்கலத்தில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் கடன் வசூல் ஏஜெண்டாக வேலை செய்து வருவதும் தெரியவந்தது.

    இதையைடுத்து இவரிடம் இருந்து உரிய ஆவணமின்றி கொண்டுவரப்பட்ட ரூ.1 லட்சத்து 20 ஆயிரம் பணத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். மேலும் இதே போன்று கோபாலபுரம் பகுதியில் வெம்பக்கோட்டை துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சங்கரலிங்கம் தலைமையிலான தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டபோது அவ்வழியாக வந்த இரு சக்கர வாகனத்தை நிறுத்தி சோதனை செய்ததில் கோதைநாச்சியார்புரத்தை சேர்ந்த விஷ்ணுசங்கர் (35) என்பவரிடமிருந்து உரிய ஆவணம் இன்றி கொண்டு வரப்பட்ட ரூ.2 லட்சத்து 35 ஆயிரம் பணத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.

    பின்னர் உரிய ஆவணம் இன்றி இந்த பணம் கொண்டு செல்லப்பட்டதாக தேர்தல் அதிகாரிகள் பணத்தை பறிமுதல் செய்தனர். இந்த இரண்டு இடங்களிலும் பறிமுதல் செய்யப்பட்ட ரூ.3 லட்சத்து 55 ஆயிரம் பணத்தை தேர்தல் பறக்கும் படையினர் சாத்தூர் வருவாய் கோட்டாட்சியர் சிவக்குமாரிடம் ஒப்படைத்தனர்.

    • பறக்கும் படையினர் மற்றும் தேர்தல் கண்காணிப்பு குழுவினர்கள் 24 மணி நேரமும் கண்காணித்து வருகின்றனர்.
    • வாகனத்தில் உரிய ஆவணங்கள் இன்றி ரூ.84 ஆயிரம் பணம் இருந்தது தெரியவந்தது.

    திருச்சுழி:

    பாராளுமன்ற தேர்தல் நடைபெறுவதையொட்டி தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்தது. இதனையடுத்து வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக பணம் மற்றும் பரிசுப்பொருட்கள் எதுவும் வாகனங்களில் கொண்டு செல்லப்படுகிறதா? என பறக்கும் படையினர் மற்றும் தேர்தல் கண்காணிப்பு குழுவினர்கள் 24 மணி நேரமும் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

    குறிப்பாக திருச்சுழி, நரிக்குடி பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் இரவு, பகலாக தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே தமிழ்பாடி பகுதியில் தேர்தல் பறக்கும்படை அதிகாரி ராஜராம் தலைமையிலான தேர்தல் பறக்கும் படையினர் இன்று காலை வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது அருப்புக்கோட்டை-திருச்சுழி சாலையில் வந்த இருசக்கர வாகனத்தில் வந்தவர்களை நிறுத்தி பறக்கும் படை அதிகாரிகள் சோதனை செய்ததில் உரிய ஆவணங்கள் இன்றி ரூ.2 லட்சத்து 4 ஆயிரம் ரொக்கப்பணம் இருந்தது தெரிய வந்தது. மேலும் அதிகாரிகளின் விசாரணையில், இரு வாகனத்தில் வந்த நபர் ஆத்திப்பட்டி பகுதியை சேர்ந்த ஆட்டு வியாபாரி கதிர்வேல் (38) என்பதும், இவர் திருச்சுழி அருகேயுள்ள முத்தனேரி பகுதியில் ஆடு வாங்குவதற்காக அந்தப் பணத்தை கொண்டு சென்றதும் தெரியவந்தது.

    இந்நிலையில் உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டு சென்ற ரூ.2 லட்சத்து 4 ஆயிரத்தை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்து அதனை திருச்சுழி வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.

    இதேபோல், நரிக்குடி முக்கு ரோடு பகுதியில் வள்ளிநாயகம் தலைமையிலான தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது நரிக்குடி-திருப்புவனம் சாலை சந்திப்பில் வந்த மினி லாரியை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் நிறுத்தி சோதனை மேற்கொண்டனர். அப்போது வாகனத்தில் உரிய ஆவணங்கள் இன்றி ரூ.84 ஆயிரம் பணம் இருந்தது தெரியவந்தது.

    மேலும் மினி லாரியில் வந்தவர் கேரளா மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டம் நெய்யாற்றங்கரை தாலுகா நரியூர் மேலபுத்தான் வீடு பகுதியை சேர்ந்த சுபாஷ் (25) என்பதும், இவர் வைக்கோல் வியாபாரி என்பதும் தெரியவந்தது. மேலும் இவர் சம்பவத்தன்று காலை பரமக்குடி, பார்த்தி பனூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் வைக்கோல் கட்டுக்களை கொள்முதல் செய்வதற்காக ரொக்கப்பணத்தை கொண்டு சென்றதும் விசாரணையில் தெரிய வந்தது.

    தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதாலும், ரூ.50 ஆயிரத்திற்கு மேல் பணமாக கொண்டு சென்றால் அதற்கான உரிய ஆவணங்கள் இருக்க வேண்டுமென தேர்தல் விதி உள்ள நிலையில் உரிய ஆவணங்கள் இன்றி வைக்கோல் வியாபாரி சுபாஷ் கொண்டு சென்ற ரூ.84 ஆயிரம் ரூபாய் ரொக்கப்பணத்தை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் அதிரடியாக பறிமுதல் செய்து அதனை திருச்சுழி வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.

    • மழை வெள்ளத்தில் தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டமே மூழ்கிவிட்டது.
    • தமிழகத்திற்கு விடியல் வழங்கியது போல இந்தியாவிற்கும் விடியல் வழங்க வேண்டும்.

    விருதுநகர் பாராளுமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து அருப்புக்கோட்டை அமுதலிங்கேஸ்வரர் கோவில் அருகே தி.மு.க. இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:-

    பாராளுமன்ற தேர்தலில் நம்முடைய கூட்டணி கட்சியான காங்கிரஸ் வேட்பாளரை மிகப்பெரிய வாக்கு வித்தியாசத்தில் நீங்கள் ஜெயிக்க வைப்பீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. குறைந்தது 2 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் நீங்க ஜெயிக்க வைப்பீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது, உங்களுக்கு இருக்கிறதா, நிச்சயம் செய்வீர்களா?

    இந்த தேர்தல் மூலம் மாநில உரிமைகளை மீட்க வேண்டும். ஏனென்றால் கடந்த 10 ஆண்டுகளுக்கு நம்முடைய மாநில உரிமைகள் அத்தனையையும் மத்திய பா.ஜ.க. அரசிடம் அ.தி.மு.க. அடிமைகள் அடகு வைத்து விட்டார்கள். மத்திய அரசு கடந்த 5 வருடத்தில் தமிழ் வளர்ச்சிக்கு எந்த நிதியும் வழங்கியது இல்லை.

    இந்த 5 வருஷத்தில் வரியாக 6.30 லட்சம் கோடி ரூபாய் மத்திய அரசுக்கு கட்டி இருக்கிறோம். மத்திய அரசுக்கு கொடுக்கக்கூடிய ஒரு ரூபாய் வரி கட்டினோம் என்றால் மத்திய அரசு நமக்கு 28 பைசா மட்டுமே திருப்பி தருகிறது. ஒவ்வொருவருக்கும் வெறும் 28 பைசா தரும் பிரதமர் நரேந்திர மோடியை 28 பைசா மோடி என தான் அழைக்க வேண்டும்

    மழை வெள்ளத்தில் தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டமே மூழ்கிவிட்டது. ஆனால் பிரதமர் வர வில்லை. நான் உங்க அப்பன் வீட்டு காசையா கேக்குறேன் என கேட்டேன், நிர்மலா சீதாராமன் என்னை கூப்பிட்டு மிரட்டினார். மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு குடும்பத்திற்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் 6 ஆயிரம் ரூபாய் வழங்கினார்.

    மத்திய பா.ஜ.க. அரசு பல கோடி ரூபாய் ஊழல் செய்துள்ளது. பாராளுமன்ற தேர்தலுக்குப் பின் மகளிர் உரிமைத் தொகையில் உள்ள குறைகள் நீக்கப்பட்டு அனைவருக்கும் ரூபாய் ஆயிரம் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். ஐ.பி.எல். அணிகளை போல அ.தி.மு.க.வில் எடப்பாடி அணி, ஓ.பி.எஸ். அணி, ஜெ.தீபா அணி, ஜெ.தீபா டிரைவர் அணி என பல அணிகள் உள்ளது. நமது இந்தியாவை காப்பாற்ற வேண்டும். தமிழகத்திற்கு விடியல் வழங்கியது போல இந்தியாவிற்கும் விடியல் வழங்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசி னார்.

    இதையடுத்து அவர் திருமங்கலத்தில் பிரசாரத்தின் போது எய்ம்ஸ் கட்டுமான பணிகள் தொடங்காததை சுட்டிக்காட்டி கையில் மீண்டும் செங்கல்லை தூக்கி காண்பித்து பேசினார்.

    • கட்சிகளின் வண்ணங்களின் அச்சிட்டு தயாரிக்கும் பணி தீவிரமடைந்துள்ளது.
    • சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் துணிகளை வைத்து தயாரிப்பதுதான் சிறப்பம்சமாகும்.

    சிவகாசி:

    ஜனநாயக திருவிழாவாக கருதப்படும் தேர்தல் வந்து விட்டாலே கட்சியினர் முதல் கடைக்கோடி தொண்டன் வரை கரைவேட்டி, கட்சிக்கொடி, தொப்பி, சின்னம் என எல்லாம் அதகளப்படும். அந்த வகையில் பிரசாரத்திற்கு தேவையான துண்டு பிரசுரம் முதல் சுவரொட்டிகள், பேனர்கள் அச்சிடும் பணிகளும் சூடு பிடிப்பது வழக்கம்.

    பாராளுமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில் குட்டி ஜப்பான் என்று அழைக்கப்படும் சிவகாசியில் தற்போது அரசியல் கட்சிகளின் பிளக்ஸ், தொப்பி மற்றும் சின்னங்கள் பொறித்த அட்டை மற்றும் பிளாடிக் மாஸ்க் உள்ளிட்ட வைகளை அச்சடிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

    அதன்படி தேசிய கட்சிகளான பா.ஜ.க., காங்கிரஸ், மாநிலகட்சிகளான அ.தி.மு.க., தி.மு.க., பா.ம.க. உள்ளிட்ட கட்சி பாகுபாடு இல்லாமல் இல்லாமல் அனைத்து கட்சிகளின் வரவேற்பு பேனர்கள், கட்சி கொடிகள், சின்னம், தோரணங்கள், துண்டு, தொப்பி ஆகியவை என அந்தந்த கட்சிகளின் வண்ணங்களின் அச்சிட்டு தயாரிக்கும் பணி தீவிரமடைந்துள்ளது.

    குறிப்பாக இந்த தேர்தலுக்கான புதுவரவாக ஸ்டார் வடிவிலான கொடிகள் அனைத்து கட்சியினரிடையே வரவேற்பை பெற்று வருகிறது. இதுகுறித்து வியாபாரிகள் தெரிவிக்கையில், ஒரு ஸ்டார் கொடியின் விலை ரூ.2.50 பைசா தான். மேலும் 30 வகையான கொடிகள் அனைத்தும் பிளாஸ்டிக் பொருள்களை பயன்படுத்தாமல் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் துணிகளை வைத்து தயாரிப்பதுதான் சிறப்பம்சமாகும்.

    மேலும் தேர்தல் சமயத்தில் தான் விருதுநகர் மாவட் டம் சிவகாசியில் உள்ள அச்சக உரிமையாளருக்கும் விற்பனையாளர்களுக்கும் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, புதுச்சேரி உள்ளிட்ட அனைத்து மாநிலங்களில் இருந்து கட்சிக்கொடி தயார் செய்வதற்கு ஆர்டர் கொடுப்பார்கள். ஆனால் தற்பொழுது கட்சிக் கொடிகளின் ஆர்டர்கள் மந்தமாக உள்ளது.

    கூட்டணி பேச்சுவார்த்தையில் ஏற்பட்ட இழுபறியே இதற்கு காரணம் என்று வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். தற்போது முதல் கட்ட தேர்தலுக்கு இன்னும் 26 நாட்களே உள்ளதால் தமிழகம் மற்றும் ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் இருந்து அதிக அளவில் ஆர்டர்கள் குவியத்தொடங்கி உள்ளன.

    இந்த தேர்தலையெட்டி, மேற்கண்ட தொழிலை நம்பி உள்ளவர்களின் வாழ்வாதாரம் ஒரு படி முன்னேற்றம் அடையும் என்றும் உரிமையாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் தெரிவித்தனர்.

    • பணத்தை ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகா அலுவலகத்தில் உள்ள உதவி தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் ஒப்படைத்தனர்.
    • கார் அரசு மற்றும் தனியார் பேருந்து மோட்டார் சைக்கிள்கள் ஆகியவை தப்புவதில்லை அனைத்தையும் மடக்கி பிடித்து தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.

    ஸ்ரீவில்லிபுத்தூர்:

    விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் மதுரை மெயின் ரோட்டில் அழகாபுரி சோதனை சாவடியில் பறக்கும் படை உதவி தேர்தல் அதிகாரி தனலட்சுமி, சப்-இன்ஸ்பெக்டர் ரகுராமன் மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது சென்னை திருவொற்றியூர் குப்பம் பெட்டினத்தார் கோவில் தெருவில் வசிக்கும் செந்தில்குமார் (வயது 43) என்பவர் மினி லாரியில் மீன் லோடு ஏற்றி வந்தார்.

    அந்த லாரியை பறக்கும் படையினர் மறித்து விசாரித்ததில் கணக்கில் வராத பணம் ரூ.2 லட்சத்து 47 ஆயிரம் இருந்தது தெரிய வந்தது. உடனடியாக பறக்கும் படையினர் அந்த பணத்தை ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகா அலுவலகத்தில் உள்ள உதவி தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் ஒப்படைத்தனர்.

    பின்னர் அந்த பணம் ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள சார்நிலை கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் நாடாளுமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னர் பறக்கும் படையினர் சாலைகளில் செல்லும் வாகனங்களை நிறுத்தி தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். இதில் கார் அரசு மற்றும் தனியார் பேருந்து மோட்டார் சைக்கிள்கள் ஆகியவை தப்புவதில்லை அனைத்தையும் மடக்கி பிடித்து தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.

    ஆனால் ரெயில்களில் மட்டும் இந்த சோதனை நடைபெறுவதில்லை அதற்கு மட்டும் தேர்தல் அதிகாரிகள் பாராமுகமாக இருந்து கண்டு கொள்வதில்லை. இதனால் பணம் கடத்துவோர் ரெயில்கள் மூலம் எளிதாக பணத்தை கடத்தலாம் எனவும் பறக்கும் படையினர் ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் ரெயில்களிலும் சோதனை இட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வியாபாரிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    அருப்புக்கோட்டை காந்தி நகர் பகுதியில் முட்டை வியாபாரம் செய்து வருபவர் நாகராஜன்(44). இவர் அருப்புக்கோட்டை அருகே பாலவநத்தத்தில் இருந்து முட்டை வியாபாரம் செய்துவிட்டு அருப்புக் கோட்டைக்கு வரும் போது தேர்தல் நிலையான கண் காணிப்பு குழு தலைவர் மகாலட்சுமி தலைமையி லான குழுவினர் நாகராஜன் ஆவணமின்றி வைத்திருந்த ரூ.1 லட்சத்து 22 ஆயிரத்தை பறிமுதல் செய்து அருப்புக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் வள்ளிக் கண்ணு முன்பு அந்த பணத்தை சீல் வைக்கப்பட்டு சார்நிலை கருவூலத்தில் ஒப்படைத்தனர். 

    ×