search icon
என் மலர்tooltip icon

    திருவாரூர்

    • கடந்த சில நாட்களாக நகரின் முக்கிய வீதிகளில் மாடுகள் கூட்டம், கூட்டமாக சுற்றித்திரிகிறது.
    • சில சமயங்களில் விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளது.

    முத்துப்பேட்டை:

    முத்துப்பேட்டை பேரூராட்சி பகுதியில் பல்வேறு குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் தொழில் நிமித்தமாகவும், அன்றாட தேவைகளுக்காகவும் தினமும் வெளியே சென்று வருகின்றனர்.

    இந்நிலையில், கடந்த சில நாட்களாக நகரின் முக்கிய வீதிகளில் மாடுகள் கூட்டம், கூட்டமாக சுற்றித்திரிகிறது.

    இதனால் நடந்து செல்லும் பொதுமக்களுக்கும் பள்ளி மாணவர்கள், வயதானவர்கள் மற்றும் வாகன ஓட்டிகள் என அனைத்து தரப்பு மக்களும் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர். இதனால் சில சமயங்களில் விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளது.

    சாலையில் சுற்றித்திரியும் மாடுகளை பிடித்து அப்புறப்படுத்த வேண்டும் என பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்து வந்தனர். மேலும், முத்துப்பேட்டை பேரூராட்சி செயல் அலுவலர் முகமது இபுறாஹீமை சந்தித்து பொதுமக்கள் புகார் அளித்தனர்.

    இதன் எதிரொலியாக முகமது இபுறாஹீம் தலைமையில், கவுன்சிலர்கள், பணியாளர்கள் மற்றும் அலுவலர்களுடன் நேற்று முன்தினம் இரவு மன்னார்குடி சாலை ரெயில்வே கேட் தொடங்கி குமரன் பஜார், பழைய போஸ்ட் ஆபீஸ் தெரு, பழைய பஸ் ஸ்டாண்ட், பங்களா வாசல், பெரிய கடை தெரு, கருமாரியம்மன் கோவில் தெரு, புதிய பஸ் நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் சுற்றித்திரிந்த மாடுகளை துப்புரவு பணியாளர்களை கொண்டு விரட்டி, விரட்டி பிடித்தனர். இரவு 9 மணி தொடங்கி நள்ளிரவு 1 மணி வரை மாடுகளை பிடித்தனர். மொத்தமாக 46 மாடுகள் பிடிக்கப்பட்டு குடிநீர் வடிகால் வாரியத்தின் வாட்டர் டேங் அருகில் உள்ள வளாகத்தில் அடைக்கப்பட்டது.

    இதுகுறித்து செயல் அலுவலர் முகம்மது இபுராஹிம் கூறுகையில்:-

    பிடிபட்ட மாடுகளின் உரிமையாளர்களிடம் தலா ரூ.1000 அபராதம் வசூலிக்கப்பட்டு மாடுகள் ஒப்படைக்கப்படும். அவ்வாறு உரிமையாளர் பெற்றுக்கொள்ளாத மாடுகளை மயிலாடுதுறை அருகே உள்ள கோசாலையில் ஒப்படைக்கபடும் என்றார்.

    நள்ளிரவு வரை பேரூராட்சி நிர்வாகத்தினர் மாடுகளை விரட்டி, விரட்டி பிடித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதுடன் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் பெற்றுள்ளது.

    • மருத்துவ கழிவுகள் மற்றும் குப்பைகள் நிறைந்து வளாகம் காணப்படுகின்றன.
    • இதனால் நோயாளிகள் கடும் அவதிக்கு ஆளாகி வருகின்றனர்.

    திருத்துறைப்பூண்டி:

    திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் 100க்கும் மேற்பட்ட உள் நோயாளிகள் உள்ளார்கள். நாளொன்றுக்கு 1000க்கும் மேற்பட்ட பொதுமக்களும் நோயாளிகளும் வந்து செல்கிறார்கள்.

    திருத்துறைப்பூண்டி சுற்றியுள்ள ஏழை கிராம மக்கள் இந்த மருத்துவமனையை நம்பி தான் உள்ளார்கள்.

    திருத்துறைப்பூண்டி சுற்றியுள்ள 100க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு இந்த மருத்துவமனையை பிரதான மருத்துவமனையாக உள்ளது.

    இந்த மருத்துவமனையில் தற்போதைய இந்த நிலையால் நோயாளிகள் நோயாளிகளை பார்க்க செல்பவர்கள் அனைவரும் கடும் அவதிக்கு உள்ளாகி வருகிறார்கள்.

    நாள்தோறும் மழை நீர் சேற்றில் சிக்கி பலர் மற்றும் நோயாளிகள் வழுக்கி விழுவதாக அங்கு இருப்பவர்கள் வேதனையுடன் தெரிவிக்கிறார்கள்.

    மருத்துவமனை பிரதான கட்டிடம் பின்புறம் உள்நோயாளிகள் மற்றும் பிரசவித்த தாய்மார்கள் சிகிச்சை பெறும் கட்டிடம் அருகிலேயே உபயோகிப்பட்ட மருத்துவ கழிவுகள் உட்பட குப்பைகள் நிறைந்து காணப்படுகின்றன.

    அவை முறையாக அகற்றப்படுவதில்லை என பொது மக்கள் புகார் கூறுகின்றனர்.

    பிரதான கட்டிடத்தில் இருந்து உள்நோயாளிகள் பிரிவிற்கும் உள்நோயாளிகள் கூட வரும் நபர்கள் தங்கும் கட்டத்திற்கு செல்லும் பாதையும் சேறும் சகதியுமாக நடக்கக்கூட முடியாத அளவிற்கு உள்ளது.

    எனவே அரசு மருத்துவமனை அருகில் உள்ள சேற்றையும், அங்குள்ள குப்பைகளையும் அகற்ற வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • பொதுமக்களுக்கு அரிசி உள்ளிட்ட பல்வேறு மளிகை பொருட்கள் வழங்கப்பட்டது.
    • பாமினியில் பழங்குடியினர் கவுரவிப்பு தினம் கொண்டாடப்பட்டது.

    திருத்துறைப்பூண்டி:

    இந்திய அரசின் திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் அமைச்சகத்தின் கீழ் இயங்கும் திருவாரூர் மக்கள் கல்வி நிறுவனம் சார்பில் சுதந்திர போராட்ட வீரர் பிர்சா முண்டாவின் பிறந்தநாளை முன்னிட்டு பழங்குடியினர் கவுரவிப்பு தினம் நவம்பர் 15-ந்தேதி முதல் 26-ந்தேதி வரை கொண்டாடப்படுகிறது.

    அதன் ஒருபகுதியாக நிறுவன தலைவர் கவுசல்யா தலைமையில் மன்னார்குடி அடுத்த பாமினியில் பழங்குடியினர் கவுரவிப்பு தினம் கொண்டாடப்பட்டது.

    விழாவில் திருவாரூர் மக்கள் கல்வி நிறுவன இயக்குநர் பால கணேஷ், ஸ்கார்டு செயலாளர் பாபு ராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    விழாவில் பேச்சு போட்டியில் வெற்றி பெற்றவர்கள் மற்றும் சாதனையாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

    ஸ்கார்டு தொண்டு நிறுவனம் சார்பில் அனைத்து குடும்பத்தினருக்கும் அரிசி உள்ளிட்ட மளிகை பொருட்கள் வழங்கப்பட்டது.

    விழாவில் கூட்டமைப்பு தலைவர் சின்னதுரை, மக்கள் கல்வி நிறுவன அலுவலர்கள் விஜயராகவன், கனகதுர்க்கா, திலகவதி, ஸ்கார்டு கள பணியாளர் சிந்துகவி, பயிற்றுனர்கள், பயனாளிகள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • சுவாசிப்பதில் சிரமப்பட்டதை அடுத்து தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டு அவருக்கு வென்டிலேட்டர் கருவி பொருத்தப்பட்டது.
    • மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் விசாரணை நடத்தப்படும் என மருத்துவக்கல்லூரி முதல்வர் ஜோசப் ராஜ் தெரிவித்துள்ளார்.

    திருவாரூர்:

    மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அடுத்த சிவனாகரம் கிராமத்தை சேர்ந்த மாரிமுத்துவின் மனைவி அமராவதி (வயது 48).

    இவர் மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரியில் ஒப்பந்த அடிப்படையில் தூய்மை பணியாளராக பணியாற்றி வந்தார். அமராவதிக்கு நுரையீரலில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக கடந்த சனிக்கிழமை அதிகாலை திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். சுவாசிப்பதில் சிரமப்பட்டதை அடுத்து தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டு அவருக்கு வென்டிலேட்டர் கருவி பொருத்தப்பட்டது.

    இதைத்தொடர்ந்து நேற்று பிற்பகல் தீவிர சிகிச்சை பிரிவு வார்டில் மின்தடை ஏற்பட்டது. இதையடுத்து அமராவதி சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார். அமராவதிக்கு கொடுக்கப்பட்டிருந்த வென்டிலேட்டர் கருவிக்கு வரும் மின்சாரம் தடைப்பட்டு சிறிது நேரத்தில் கருவி செயலிழந்துவிட்டது. இதனால் அமராவதி உயிரிழந்ததாக அவரது உறவினர்கள் குற்றம் சாட்டினர்.

    இச்சம்பவத்திற்கு தமிழக பாரதிய ஜனதா தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்து இருந்தார்.

    இந்நிலையில், பெண் உயிரிழப்பு குறித்த திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி நிலைய மருத்துவ அதிகாரி தலைமையில் விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டுள்ளது.

    மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் விசாரணை நடத்தப்படும் என மருத்துவக்கல்லூரி முதல்வர் ஜோசப் ராஜ் தெரிவித்துள்ளார்.

    • சுவாசிப்பதில் சிரமப்பட்டதை அடுத்து அவர் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டார்.
    • தீவிர சிகிச்சை பிரிவு வார்டில் மின்தடை ஏற்பட்டது. இந்நிலையில் அமராவதி சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார்.

    திருவாரூர்:

    மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் அடுத்த சிவனாகரம் கிராமத்தை சேர்ந்தவர் மாரிமுத்து. இவரது மனைவி அமராவதி (வயது 48).

    இவர் மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரியில் ஒப்பந்த அடிப்படையில் தூய்மை பணியாளராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் அவருக்கு நுரையீரல் பிரச்சனை காரணமாக கடந்த சனிக்கிழமை அதிகாலை திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார். சுவாசிப்பதில் சிரமப்பட்டதை அடுத்து அவர் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு வென்டிலேட்டர் கருவி பொருத்தப்பட்டது.

    இதைத்தொடர்ந்து நேற்று பிற்பகல் தீவிர சிகிச்சை பிரிவு வார்டில் மின்தடை ஏற்பட்டது. இந்நிலையில் அமராவதி சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார்.

    அதனைத் தொடர்ந்து அமராவதிக்கு கொடுக்கப்பட்டிருந்த வென்டிலேட்டர் கருவிக்கு வரும் மின்சாரம் தடைப்பட்டு சிறிது நேரத்தில் கருவி செயலிழந்துவிட்டது. இதனால் அமராவதி உயிரிழந்ததாக அவரது உறவினர்கள் குற்றம் சாட்டினர். உயிரிழந்த அமராவதியின் உடல் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அமராவதியின் குடும்பத்தினர் மருத்துவக் கல்லூரி முதல்வரிடம் புகார் அளித்தனர்.

    இது குறித்து ஆஸ்பத்திரி டீன் கூறுகையில், 10 நிமிடங்களுக்குள் தடைபட்ட மின்சாரம் மீண்டும் வழங்கப்பட்டது. மின்சாரம் தடைபட்டாலும் வென்டிலேட்டர் கருவிகள் இயங்குவதற்கான மாற்று ஏற்பாடுகள் மருத்துவமனையில் தொடர்ந்து இருந்து வருகிறது. உயிரிழப்புக்கு மின் தடை காரணமில்லை. இது குறித்து உரிய விசாரணை நடத்தப்படும் என தெரிவித்துள்ளார்.

    • மழை காலங்களில் வடிகால் வாய்க்கால் வழியாக தண்ணீர் வடிந்து விடும்.
    • தற்போது வடிகால் வாய்க்கால் ஆக்கிரமிக்கப்பட்டு உள்ளது

    திருவாரூர்:

    திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை தெற்குகாடு கிராம கமிட்டியை சேர்ந்த மக்கள் முத்துப்பேட்டை தாசில்தார் மகேஷ்குமாரிடம் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

    முத்துப்பேட்டை பாமணி ஆறு உடைப்பு ஏற்பட்டகாலங்களிலும் மற்றும் மழை வெள்ளம் ஏற்பட்ட காலங்களிலும் முத்துப்பேட்டை சில்லாடி வழி பட்டறைக்குளம் வடிகால் வாய்க்கால் என்று அழைக்கப்படும் வடிகால் வாய்க்கால் வழியாக தண்ணீர் பட்டறைக்குளம் சென்று அங்கிருந்து கோறையாற்றில் தண்ணீர் வடிந்து விடும்.

    தற்போது அந்த வடிகால் வாய்க்கால் ஆக்கிரமிக்கப்பட்டு உள்ளது. இதனால் மக்கள் துன்பங்களை அனுபவித்து வருகின்றனர். எனவே சில்லடி வாய்கால் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு உள்ளது.

    • சனிக்கிழமையை யொட்டி ஆஞ்சநேயர் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடை பெற்றது
    • தேரடி ஆஞ்சநேயர் கோவிலிலும் சிறப்பு வழிபாடு நடந்தது.

    திருவாரூர்:

    நீடாமங்கலம் சந்தானராமர் கோவிலில் சனிக்கிழமையை யொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதைமுன்னிட்டு

    சீதா, லெட்சுமண, அனுமன் சமேத சந்தானராமர், விஸ்வக் சேனர், ஆஞ்சநேயர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு அபிஷேக, ஆராதனைகள் நடந்தது. நீடாமங்கலம் வீர ஆஞ்சநேயர் கோவிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

    இதைமுன்னிட்டு வீரஆஞ்சநேயர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    திருவோணமங்கலம் ஞானபுரியில் எழுந்தருளியுள்ள சங்கடஹர மங்கல மாருதி ஆஞ்சநேயர் கோவிலில் 33 அடி உயர ஆஞ்சநேயருக்கு சிறப்பு ஆராதனைகள் நடந்தது.

    வடுவூர் தெற்கு தெருவில் உள்ள ஜெயவீர ஆஞ்சநேயர் கோவிலில் ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடத்தப்பட்டது. இதைப்போல தேரடி ஆஞ்சநேயர் கோவிலிலும் சிறப்பு வழிபாடு நடந்தது

    • நிலை தடுமாறிய அவர் அருகில் சென்ற உயர்மின் அழுத்த கம்பியின் மீது விழுந்துள்ளார்.
    • மன்னார்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    நீடாமங்கலம்:

    கும்பகோணம் அடுத்த வலங்கைமான் அருகே உள்ள வலங்கைமாபுரம் பகுதியை சேர்ந்தவர் பன்னீர்.

    இவரது தாய் உடல்நலக்குறைவு காரணமாக நேற்று இறந்துவிட்டார்.

    இந்நிலையில், இதுகுறித்து தகவல் அறிந்த பண்டித சோழநல்லூர் பகுதியை சேர்ந்த தனசேகரன் (வயது 43) என்பவர் துக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக பன்னீர் வீட்டுக்கு வந்தார்.

    தொழிலாளியான இவர் அப்பகுதியில் தென்னை மட்டைகள் பறிப்பதற்காக மரத்தில் ஏறி உள்ளார்.

    எதிர்பாராதவிதமாக தென்னை குருத்து உடைந்தது.

    இதில் நிலை தடுமாறிய அவர் அருகில் சென்ற உயர்மின் அழுத்த கம்பியின் மீது விழுந்துள்ளார்.

    இதில் மின்சாரம் தாக்கியதில் தனசேகரன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    பின்னர், அருகில் இருந்தவர்கள் அவரை மன்னார்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்து வலங்கைமான் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    துக்க நிகழ்ச்சிக்கு வந்தவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

    • மோட்டார் சைக்கிளில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
    • பறிமுதல் செய்யப்பட்ட புகையிலை பொருட்களின் மதிப்பு ரூ.5 ஆயிரம் ஆகும்.

    நீடாமங்கலம்:

    திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் குடமுருட்டி ஆற்றுப்பகுதியில் வலங்கை மான் இன்ஸ்பெக்டர் சந்தனமேரி, போலீஸ் சந்திரமோகன், சிறப்பு தனிப்படை போலீஸ் அறிவழகன் மற்றும் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது கும்பகோணத்தில் இருந்து வந்த ஒரு மோட்டார் சைக்கிளை நிறுத்தி சோதனை செய்தனர்.

    மோட்டார் சைக்கிளில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

    பின்னர், நடத்திய சோதனையில் அவரிடம் ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் ரொக்கம் இருப்பது தெரியவந்தது.

    தொடர்ந்து, அவரிடம் நடத்திய விசாரணையில் அவர் கும்பகோணம் அருகே உள்ள அண்ணலக்ரஹாரம் பகுதியை சேர்ந்த ராஜேஷ் (வயது 31) என்பது தெரியவந்தது.

    பின், போலீசார் அவரிடம் இருந்த புகையிலை பொருட்கள் மற்றும் ரொக்கத்தை பறிமுதல் செய்து ராஜேஷை கைது செய்தனர்.

    பறிமுதல் செய்யப்பட்ட புகையிலை பொருட்களின் மதிப்பு ரூ.5 ஆயிரம் ஆகும்.

    இதுகுறித்து வலங்கைமான் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்பத்தியது.

    • பஸ் நிலையம் கட்டுமான பணிக்கான பூமிபூஜை நடந்தது.
    • நிகழ்ச்சியில் மாரிமுத்து எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பணிகளை தொடங்கி வைத்தார்.

    திருத்துறைப்பூண்டி:

    திருத்துறைப்பூண்டி பஸ் நிலையத்தை மேம்படுத்த வேண்டும் என மாரிமுத்து எம்.எல்.ஏ. சட்டமன்றத்தில் கோரிக்கை விடுத்தார்.

    பின், புதிய பஸ் நிலையம் கட்ட ரூ.7 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. இதையடுத்து கட்டுமான பணிக்கான பூமிபூஜை நடந்தது. நிகழ்ச்சி நகர்மன்ற தலைவர் கவிதாபாண்டியன் தலைமை தாங்கினார்.

    துணை தலைவர் ஜெயப்பிரகாஷ், ஆணையர் மல்லிகா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    நிகழ்ச்சியில் மாரிமுத்து எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பணிகளை தொடங்கி வைத்தார்.

    இதில் நகராட்சி பொறியாளர் பிரதான் பாபு, அலுவலக ஊழியர்கள், நகர்மன்ற உறுப்பினர்கள், பேரிடர் ஆலோசனை குழு உறுப்பினர் செல்வகணபதி, பாலம் தொண்டு நிறுவன செயலாளர் செந்தில்குமார், அனைத்து ஒப்பந்ததாரர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • கலை போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பரிசு, சான்றிதழ் வழங்கப்பட்டது.
    • முடிவில் இணை செயலாளர் முருகானந்தம் நன்றி கூறினார்.

    மன்னார்குடி:

    மன்னார்குடி கூட்டுறவு அர்பன் வங்கி நகராட்சி மேல்நிலைப் பள்ளியில் தமிழ்க்கூடல் விழா நடைபெற்றது.விழாவிற்கு பள்ளி தலைமை ஆசிரியர் ராசசேகரன் தலைமை தாங்கினார்.

    பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ராசுப்பிள்ளை, நகர்மன்ற உறுப்பினர் ஸ்ரீதர், பள்ளி மேலாண்மை குழு தலைவர் அருள்மொழி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    சிறப்பு விருந்தினர்களாக மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவன முதல்வர் செல்வி கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.

    மன்னார்குடி கூட்டுறவு அர்பன் வங்கி நகராட்சி மேல்நிலைப் பள்ளி மாணவர்களின் கலை இலக்கிய படைப்பிதழான 'விளையும் பயிர்' கையெழுத்து ஏட்டினை திருவையாறு அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் இந்திரா பாண்டியன் வெளியிட அதனை மேனாள் தலைமை யாசிரியர் தவமணி சந்திரன் பெற்றுக்கொண்டார்.

    சாரணர் இயக்கத்தின் மாவட்ட ஆணையர் மீனாட்சி உள்ளிட்ட அனைவரும் குத்து விளக்கேற்றி வாழ்த்துரை வழங்கினர். பின், பல்வேறு கலை போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு, சான்றிதழ் வழங்கி பாராட்டினர்.

    முன்னதாக பாரதியார் தமிழ் இலக்கிய மன்ற செயலாளர் முதுகலை தமிழாசிரியர் ராச கணேசன் அனைவரையும் வரவேற்று நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார்.

    இணை செயலாளர் சுகந்தி இலக்கிய மன்றத்தின் செயல்பாடுகள் குறித்த ஆண்டறிக்கையை வாசித்தார்.

    முடிவில் இணை செயலாளர் முருகானந்தம் நன்றி கூறினார்.

    • இந்துக்கள் சர்க்கரை பொங்கலை சமைத்து எடுத்து வந்து பள்ளிவாசலில் கொடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
    • பாத்தியா ஓதி வழிபாடு நடத்தப்பட்ட பின்பு அது அனைவருக்கும் விநியோகிக்கப்பட்டது.

    திருவாரூர்:

    திருவாரூர் நகரத்திற்கு ட்பட்ட கொடிக்கால்பாளை யத்தில் உள்ள முகைதீன் ஆண்டவர் பள்ளிவாசலில் நூற்றாண்டுகள் பழமையான மத நல்லிணக்க  பாச்சோறு திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது.

    அதன் அடிப்படையில் இந்த ஆண்டிற்கான பாச்சோற்று திருவிழா கடந்த நவம்பர் 14-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    இந்த பாச்சோற்று திருவிழா மொத்தம் 9 நாட்கள் நடைபெறும்.

    இந்த திருவிழா தொடங்கிய நாள் முதல் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த இஸ்லாமியர்கள் மற்றும் இந்துக்கள் தங்களது நேர்த்தி கடனை நிறைவேற்றும் பொருட்டு தங்களது வீடுகளில் சர்க்கரை பொங்கல் சமைத்து அதனை எடுத்து வந்து பள்ளிவாசலில் வைத்து பாத்தியா ஓதி வழிபாடு செய்து வருகின்றனர். அதைத் தொடர்ந்து ஹஜ்ரத் செய்யதினா செய்யது மஃஸூம் சாஹிப் ஒலியுல்லாஹ் நினைவிடத்தில் சந்தனம் பூசி வழிபாடு நடத்தப்பட்டது.

    இந்த திருவிழாவின் இறுதி நாளும் ஹஜ்ரத் செய்யதினா செய்யது மஃஸூம் சாஹிப் ஒலியுல்லாஹ் வின் நாளுமான நேற்று முக்கிய நிகழ்வான பாச்சோறு திருவிழா நடைபெற்றது.

    இதில் திருச்சி, தஞ்சை, நாகை, மயிலாடுதுறை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து இஸ்லாமியர்கள் மற்றும் இந்துக்கள் தங்களது வீட்டில் சர்க்ரைப் பொங்கலை சமைத்து எடுத்து வந்து பள்ளிவாசலில் கொடுத்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர்.

    இவ்வாறு நூற்றுக்க ணக்கான சட்டிகளில் சர்க்கரை பொங்கல் சமைத்து எடுத்து வந்து பள்ளிவாசலில் கொடுத்தனர். அந்த அனைத்து பாத்திரங்களிலிருந்தும் சர்க்கரை பொங்கல் எடுக்கப்பட்டு மொத்தமாக ஒரு பெரிய சட்டியில் இடப்பட்டு பாத்தியா ஓதி வழிபாடு நடத்தப்பட்ட பின்பு அது அனைத்து தரப்பு மக்களுக்கும் விநியோகிக்கப்பட்டது.

    இந்து முஸ்லீம் என அனைத்து தரப்பு மக்களும் மதப் பாகுபாடு இன்றி கலந்து கொண்டு தங்களது நேர்த்திக்கடனை இங்கு செலுத்தினர்.

    இந்த திருவிழாவில் செவ்வாடை அணிந்து ஆதி பராசக்தி பக்தர் ஒருவர் தலையில் சக்கரை பொங்கல் அடங்கிய பாத்திரத்தை எடுத்து வந்து வழிபாடு நடத்தியது அனைவரையும் ஆச்சரியத்திற்கு உள்ளாக்கியது.

    ×