search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    சாம்சங் கேலக்ஸி ஃபோல்டு இந்திய வெளியீடு - அதிகாரப்பூர்வ அறிவிப்பு
    X

    சாம்சங் கேலக்ஸி ஃபோல்டு இந்திய வெளியீடு - அதிகாரப்பூர்வ அறிவிப்பு

    சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி ஃபோல்டு மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனின் இந்திய வெளியீடு பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை தொடர்ந்து பார்ப்போம். #GalaxyFold



    சாம்சங் நிறுவனம் தனது கேலக்ஸி எஸ்10 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை கடந்த மாதம் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்தது. இவற்றுடன் சாம்சங் தனது முதல் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனான கேலக்ஸி ஃபோல்டு மாடலையும் அறிமுகம் செய்தது. 

    கேலக்ஸி ஃபோல்டு மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனிற்கான முன்பதிவு ஏப்ரல் மாதம் துவங்கும் என சாம்சங் அறிவித்துள்ளது. சர்வதேச சந்தையில் கேலக்ஸி ஃபோல்டு 1980 டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.1,40,000) என விலை நிர்ணயம் செய்யப்பட்டிருக்கும் நிலையில், இதன் இந்திய வெளியீடு பற்றி எவ்வித தகவலும் வழங்கப்படாமல் இருந்தது.

    இந்தியாவில் கேலக்ஸி எஸ்10 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் நேற்று (மார்ச் 6) அறிமுகம் செய்யப்பட்டது. இந்நிகழ்வை தொடர்ந்து தேர்வு செய்யப்பட்ட ஊடகங்களிடம் பேசிய சாம்சங் தலைவர் மற்றும் தலைமை செயல் அதிகாரி டி.ஜே. கோ கேலக்ஸி ஃபோல்டு ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகமாகும் என தெரிவித்திருக்கிறார்.



    இந்திய சந்தை, மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது - முதலீடு மற்றும் அனைத்திலும், எங்களது நீண்ட கால திட்டங்களில் இந்தியா முக்கிய சந்தையாக இருக்கிறது. இங்கு எங்களது புதுவித தொழில்நுட்பத்தை நிச்சயம் வெளியிடுவோம் என அவர் தெரிவித்தார். எனினும், ஸ்மார்ட்போனின் வெளியீட்டு காலம் பற்றி எவ்வித தகவலையும் அவர் வழங்கவில்லை.

    ஸ்மார்ட்போனின் விலையை கட்டுக்குள் வைக்க, சாம்சங் தனது மொபைலை இந்தியாவிலேயே உற்பத்தி செய்ய விரும்புவதாக டி.ஜே. கோ தெரிவித்தார். எனினும், ஸ்மார்ட்போனில் மேட் இன் இந்தியா டேக் இடம்பெறுமா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. குறைந்த எண்ணிக்கையில் தயாராகும் கேலக்ஸி ஃபோல்டு ஸ்மார்ட்போன் இந்தியாவில் வெளியானாலும், இதன் விலை சர்வதேச சந்தையை விட அதிகமாகவே நிர்ணயம் செய்யப்படும் என தெரிகிறது.

    மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் மட்டுமின்றி இந்தியாவில் 5ஜி சேவை வழங்கப்படும் போது கேலக்ஸி எஸ்10 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும் என டி.ஜே. கோ தெரிவித்தார். இந்தியாவில் 5ஜி தொழில்நுட்பத்தை வழங்குவதற்கான பணிகள் நடைபெற்று வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.
    Next Story
    ×