search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ேதாண்டப்பட்ட குழிகள்"

    • பாதாள சாக்கடை உள்ளிட்ட பணிகளுக்காக ஆங்காங்கே தோண்டபட்டு மூடப்படாமல் உள்ள குழிகளால் திருச்சி தூசு நிறைந்த நகராக மாறியுள்ளது
    • கடந்த சில நாட்களுக்கு முன்பு திருச்சி மத்திய பஸ் நிலையம் பகுதியில் பெரியார் சிலை அருகாமையில் சாலையின் நடுப்பகுதி துண்டிக்கப்பட்டது

    திருச்சி:

    திருச்சி மாநகராட்சி பகுதியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.1,000 கோடியில் பல்வேறு திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதில் மாநகரை அழகுபடுத்தும் திட்டங்களுக்கும் அதிக நிதி செலவிடப்படுகிறது.

    ஆனால் மாநகராட்சி பகுதியில் உள்ள சாலைகளை பார்க்கும் போது இது அழகான மாநகரமா? என்ற சந்தேகம் இயல்பாக எழுகிறது. காரணம், மாநகராட்சி பகுதியில் உள்ள பெரும்பாலான சாலைகள் துண்டிக்கப்பட்டு குண்டும், குழியுமாக கிடக்கின்றன. பாதாள சாக்கடை மற்றும் குடிநீர் பதிப்பதற்காக மேற்கண்ட சாலைகளில் குழிகள் தோண்டப்படுகிறது.

    இவ்வாறு சாலைகள் துண்டிக்கப்படும் போது சில நேரங்களில் குடிநீர் குழாய்களும் உடைந்து குடிநீர் வீணாக சாலையில் ஆறாக ஓடி அந்தப் பகுதி மழை இல்லாமலேயே சேரும், சகதியுமாக மாறிவிடுகிறது.

    சாலைகள் சீரமைக்கப்படாத காரணத்தினால் அந்தப் பகுதிகளில் கனரக வாகனங்கள் செல்லும்போது புழுதி புயல் பலமாக வீசுகிறது. இதனால் இருசக்கர வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர்.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு திருச்சி மத்திய பஸ் நிலையம் பகுதியில் பெரியார் சிலை அருகாமையில் சாலையின் நடுப்பகுதி துண்டிக்கப்பட்டது. அதற்கு முன்பாக தமிழ்நாடு ஓட்டல் பகுதி, அரிஸ்டோ கார்னர் பகுதி ஆகிய இடங்களில் உள்ள சாலைகள் துண்டிக்கப்பட்டன.

    ஏற்கனவே உறையூர், தில்லைநகர் உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் மக்கள் தங்கள் குறைகளை சொல்லொண்ணா துயரத்தை அனுபவித்து வருகிறார்கள்.

    நாளும் தூசு மண்டலத்தில் வசித்து வருவது போன்ற உணர்வை ஏற்படுத்துவதாக அவர்கள் வேதனை தெரிவிக்கிறார்கள். பொதுமக்கள் மட்டுமின்றி சாலையோரம் மற்றும் கடைகள் நடத்தும் வியாபாரிகளும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

    கடைகளில் உள்ள பொருட்கள் மீது துடைத்து வைத்த ஒரு சில விநாடிகளில் அந்த வழியாக கடக்கும் வாகனங்களால் மீண்டும் தூசு படிந்து விடுவதால் வாடிக்கையாளர்கள் கடைகளுக்கு செல்லவும், பொருட்களை வாங்கவும் மறுக்கின்றனர்.

    இது தொடர்பாக வாசன் ரோடு பகுதியைச் சேர்ந்த ஒருவர் கூறும் போது, சாலையை துண்டித்து பைப் லைன் பதித்து மண் போட்டு மூடி விடுகிறார்கள். அதன் பின்னர் வெகு நாட்கள் கழித்த பின்னரே ஜல்லி போட்டு பொக்லைன் எந்திரம் மூலம் சமன் செய்கின்றனர்.

    பின்னர் தார் போடுவதற்கு மேலும் சில வாரங்கள் தாமதம் செய்கிறார்கள். இதனால் ஜல்லிகள் பெயர்ந்து மீண்டும் குண்டும் குழியுமாக சாலை மாறி விடுகிறது. இதற்கெல்லாம் எப்போது விடிவு என்றே தெரியவில்லை என்றார்.

    இந்த சாலைகள் துண்டிக்கப்பட்டு மேடு பள்ளமாக இருப்பதால் கவுன்சிலர்களுக்கும் குடைச்சல் இருக்கிறது. அதனால் மாநகராட்சி மாமன்ற கூட்டத்திலும் அவ்வப்போது அனைத்து கட்சி கவுன்சிலர்களும் சாலை பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.

    இதுபற்றி அதிகாரிகள் தரப்பில் கூறும்போது, திருச்சி மாநகராட்சி பகுதியில் 1,330 கிலோமீட்டர் தொலைவிற்கு சாலைகள் உள்ளன. பாதாள சாக்கடை மற்றும் குடிநீர் குழாய்கள் பதிக்கும் பணிகள் நடந்து வருவதால் சாலைகள் துண்டிக்கப்படுகிறது.

    ஒரு இடத்தில் சாலையை துண்டித்தால் அந்த இடத்தில் பணிகளை விரைந்து முடித்து சாலைகளை சீரமைக்க காண்டிராக்டர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அனைத்து சாலைகளையும் சீரமைப்பதற்கான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. விரைந்து முடிப்போம் என்றார்.

    ×