search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஹரியாழி தேவி கோவில்"

    உத்திரகாண்ட் மாநிலத்தில் ருத்ரபிரயாக் மாவட்டத்தில் உள்ளது ஜசோலி கிராமம். இங்கு தான் ஹரியாழி தேவி கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
    செல்வத்துக்கு அதிபதி மகாலட்சுமி. வாழ்க்கைக்கு தேவையான எல்லாவிதமான வசதிகளையும், அதாவது வீட்டுமனை, மாடு, நிலம், செல்வம் போன்ற அனைத்து செல்வங்களையும் அளிப்பவள். மகா விஷ்ணுவின் பல பெயர்களில் ‘ஹரி’ என்பதும் ஒன்றாகும். அவரின் அம்சமாக அவதரித்தவளே ‘ஹரியாழி தேவி.’ இந்த அன்னைக்கு இமயமலை உச்சியில் ஜசோலி என்ற இடத்தில் கோவில் உள்ளது. இங்கு வீற்றிருக்கும் ஹரியாழி தேவி தன்னை நாடி வரும் பக்தர்களின், குறைகளை நீக்கி, அனைத்து செல்வங்களையும் வாரி வழங்கி வருகிறாள்.

    உத்திரகாண்ட் மாநிலத்தில் ருத்ரபிரயாக் மாவட்டத்தில் உள்ளது ஜசோலி கிராமம். இங்கு தான் ஹரியாழி தேவி கோவில் அமைந்துள்ளது. கடல் மட்டத்தில் இருந்து 1,371 மீட்டர் உயரத்தில் இமயமலை உச்சியில் இந்த ஆலயம் இருக்கிறது. சக்தி பீடத்தில் வீற்றிருந்து அருள்பாலிக்கும் அன்னையர் களுக்கு ஈடாக இந்த ஆலயத்தில் வீற்றிருக்கும் ஹரியாழி அன்னையும் போற்றப்படுகிறாள். இந்த தேவியை தரிசிப்பதன் மூலம் இவ்வுலகில் வாழும்போதே முக்தி கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

    தல வரலாறு :

    மதுராவின் அரசனான கம்சனின் உயிருக்கு, அவனது தங்கை தேவகி வயிற்றில் பிறக்கும் எட்டாவது குழந்தையால் ஆபத்து ஏற்படும் என்று கூறப்பட்டது. இதனால் அச்சமடைந்த கம்சன், தேவகியையும் அவளது கணவன் வசுதேவரையும் சிறையில் அடைத்தான். தேவகிக்கு பிறந்த ஒவ்வொரு குழந்தையையும் இரக்கம் இன்றி வெட்டிக் கொலை செய்தான். தேவகிக்கு ஏழாவது பெண் குழந்தை பிறந்திருப்பதை அறிந்த கம்சன், சிறைச் சாலைக்குச் சென்றான்.

    அந்தக் குழந்தையைக் கொல்வதற்காக தரையில் தூக்கி வீசினான். தரையில் விழுந்த அந்தக் குழந்தையின் உடல் சிதறி விண்ணில் பறந்தது. உடலின் பல பாகங்களும், பல்வேறு இடங்களில் விழுந்தது. அதில் கை விழுந்த இடம் தான் ஜசோலி கிராமம் ஆகும். இந்த இடத்தில் பின்னர் கோவில் ஒன்று எழுப்பட்டது. இந்த கோவில் உயரமான மலையாலும், அடர்த்தியான காடுகளாலும் சூழப்பட்டது. இங்குள்ள அம்மன் மஞ்சள் நிற உடையை அணிந்து, ஒரு சிங்கத்தின் மேல் உட்கார்ந்து காட்சிக்கொடுக்கிறாள். இந்த கோவிலில் சத்ரபாலு மற்றும் ஹீத் தேவி ஆகியோரின் சிலைகளும் உள்ளன.

    ஹரியாழி தேவி

    கோவில் அமைப்பு :

    கோவில் செங்கல் மற்றும் சுண்ணாம்பினால் கட்டப்பட்ட அழகான கட்டமைப்பு ஆகும். கோவிலின் அடிப்படை அலங்காரமானது, பச்சை மற்றும் மஞ்சள் வண்ணங்களைக் கொண்டு செய்யப்படுகிறது. இந்த ஆலயம் புனித தலமாக கருதப்படுகிறது. 1371 மீட்டர் உயரத்தில் உள்ளதாலும், காலநிலைக்கு எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்துவதாலும், ஆலயம் பல முறை புதுப்பிக்கப்பட்டு வந்துள்ளது. ஹரியாழி தேவி கோவில், கட்டிடக்கலையை விட ஆன்மிகத்திற்கு முக்கியத்துவம் பெற்றதாக விளங்குகிறது.

    கோவில் முன் இரண்டு சிங்கத்தின் சிலைகள் உள்ளன. கோவிலின் உள்ளே கண் கவரும் வண்ணம் அம்பாள் சிங்கத்தின் மேல் அமர்ந்து காட்சிக் கொடுக்கிறாள். கோவில் அர்ச்சகர் வருபவர்களுக்கு அர்ச்சனை செய்து பக்தர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு சொல்கிறார்.

    ஜென்மாஷ்டமி, நவராத்திரி மற்றும் தீபாவளி பண்டிகைகள் இந்த ஆலயத்தில் மிக சிறப்பாக கொண்டாடப்படுகின்றன. ஆயிரக்கணக்கான பக்தர்கள் இந்தக் கோவிலுக்கு வந்து செல்கின்றனர். இந்த புனித நாட்களில், பக்தர்கள் ஹரியாழி சிலையை எடுத்துக்கொண்டு 7 கிலோமீட்டர் தொலைவில் ஹரியியாகி காந்தாவை அடைகின்றனர். இது மலையுச்சியில் இருக்கிறது. இங்கு சக்திவாய்ந்த காளி கோவில் உள்ளது. விரதமிருந்து இக்கோவிலுக்கு செல்கின்றனர்.

    எப்படி செல்வது? :

    விமானத்தில் டெஹ்ராடூன் சென்று அங்கு இருந்து காரிலும், ரெயில் மூலமும் ரிஷிகேஷ் மற்றும் ஹரித்வார் செல்ல வேண்டும். அங்கிருந்து சாலை வழியாக ருத்ரபிரயாக் என்ற பகுதிக்குச் சென்று, அந்த இடத்தில் இருந்து ஹரியாழி தேவி கோவிலை அடையலாம்.
    ×