search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஸ்டிக்கர் ஒட்டும் பணி"

    நீலகிரி மாவட்ட வாகனங்களை அடையாளம் காண ஸ்டிக்கர் ஒட்டும் பணி தொடங்கி உள்ளது.
    ஊட்டி:

    ஊட்டியில் இருந்து மசினகுடிக்கு செல்லும் கல்லட்டி மலைப்பாதை 36 கொண்டை ஊசி வளைவுகளை கொண்டது. இந்த பாதையில் செல்லும் வெளியூர் வாகன ஓட்டிகளால் விபத்துகள் அதிகளவில் ஏற்படுகிறது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு காரில் சென்ற 5 சுற்றுலா பயணிகள் விபத்தில் சிக்கி உயிரிழந்தனர். இதனால் சாலை பாதுகாப்பு கருதியும் விபத்துகளை குறைக்கவும் நீலகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சண்முகப்பிரியா பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். இதன் ஒரு பகுதியாக கல்லட்டி மலைப்பாதையில் வெளியூர் சுற்றுலா பயணிகளின் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டது. ஆனால் நீலகிரி மாவட்டத்தை சேர்ந்த வாகனங்களை இயக்க அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. மேலும் தினமும் இரவு 8 மணி முதல் காலை 6 மணி வரை கல்லட்டி மலைப்பாதையில் எந்த வாகனங்களையும் இயக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது. மருத்துவ உதவி மற்றும் அவசர காலங்களில் போலீசாரின் அனுமதி பெற்று வாகனங்களை இயக்கி கொள்ளலாம் என்று அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது.

    இந்த நிலையில் நீலகிரி மாவட்டத்தில் பதிவு செய்த வாகனங்களை அடையாளம் காணும் வகையில் போலீசார் சார்பில் ஸ்டிக்கர்கள் ஒட்டும் பணி தொடங்கி உள்ளது. இந்த பணியை ஊட்டி அருகே உள்ள தலைகுந்தாவில் நடந்த நிகழ்ச்சியில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சண்முகப்பிரியா தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

    நீலகிரி மாவட்டத்தில் வட்டார போக்குவரத்து துறையின் ஆலோசனையின் பேரில் 2 ஆயிரம் ஸ்டிக்கர்கள் அச்சடிக்கப்பட்டு உள்ளது. நீலகிரி மாவட்ட வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் பதிவு செய்த வாகனங்களுக்கு ஸ்டிக்கர்கள் ஒட்டப்படும். இதனால் டிரைவர்கள் பதிவு சான்று, ஓட்டுநர் உரிமம், இருப்பிட சான்று உள்ளிட்ட ஆவணங்களுடன் ஊட்டியில் உள்ள துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும். இதையடுத்து போலீசாரின் ஆய்வுக்கு பிறகு சம்பந்தப்பட்ட வாகனங்களுக்கு ஸ்டிக்கர்கள் ஒட்டப்படும். தலைக்குந்தா மற்றும் கல்லட்டி பகுதியில் 24 மணி நேரமும் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார். இதில் மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கோபி, ஊட்டி போலீஸ் துணை சூப்பிரண்டு திருமேனி உள்பட பலர் கலந்துகொண்டனர்.
    ×