search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஷிரேயாஸ் அய்யர்"

    ரி‌ஷப் பந்த், பிரித்வி ஷா அதிரடியாக ஆடினால் கட்டுப்படுத்துவது கடினம் எனவும் 2 பேரையும் அவர்கள் போக்கில் ஆட விட்டால் வெற்றிக்கு அழைத்து செல்வார்கள் எனவும் டெல்லி கேப்டன் கூறியுள்ளார். #ShreyasIyer #DCvsSRH
    விசாகப்பட்டினம்:

    ஐ.பி.எல். போட்டியில் டெல்லி அணி ஐதராபாத்தை வீழ்த்தி நாக்அவுட்டில் முதல்முறையாக வெற்றி பெற்றது.

    விசாகப்பட்டினத்தில் நடந்த எலிமினேட்டர் ஆட்டத்தில் முதலில் விளையாடிய சன்ரைசர்ஸ் ஐதராபாத் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 162 ரன் குவித்தது.

    கப்தில் 19 பந்தில் 36 ரன்னும் (1 பவுண்டரி, 4 சிக்சர்), மணிஷ் பாண்டே 30 ரன்னும், கேப்டன் வில்லியம்சன் 28 ரன்னும், விஜய் சங்கர் 11 பந்தில் 25 ரன்னும் (2 பவுண்டரி, 2 சிக்சர்) எடுத்தனர்.

    கீமா பால் 3 விக்கெட்டும், இஷாந்த் சர்மா 2 விக்கெட்டும், போல்ட், அமித் மிஸ்ரா தலா 1 விக்கெட்டும் எடுத்தனர். 163 ரன் இலக்குடன் டெல்லி அணி ஆடியது.

    பரபரப்பான இந்த ஆட்டத்தில் டெல்லி அணி 1 பந்து எஞ்சி இருந்த நிலையில் வெற்றி வெற்றது. அந்த அணி 19.5 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 165 ரன் எடுத்து 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    பிரித்வி ஷா 38 பந்தில் 56 ரன்னும் (6 பவுண்டரி, 2 சிக்சர்), ரி‌ஷப் பந்த் 21 பந்தில் 49 ரன்னும் (2 பவுண்டரி, 5 சிக்சர்) எடுத்தனர். புவனேஷ்வர் குமார், கலீல் அகமது, ரஷீத் கான் தலா 2விக்கெட்டும், தீபக் ஹூடா 1 விக்கெட்டும் எடுத்தனர்.

    பாஷில் தம்பி வீசிய 18-வது ஓவரில் ரி‌ஷப் பந்த் 2 பவுண்டரி, 2 சிக்சர் அடித்து ஆட்டத்தை மாற்றி டெல்லி அணியை வெற்றி பெற வைத்தார்.

    ஐ.பி.எல். வரலாற்றில் டெல்லி அணி முதன் முறையாக நாக்அவுட்டில் வெற்றி பெற்றுள்ளது. வெற்றி குறித்து அந்த அணி கேப்டன் ஷிரேயாஷ் அய்யர் கூறியதாவது:-

    கடைசி ஓவரில் எனது உணர்ச்சிகளை கட்டுப்படுத்த முடியவில்லை. நான் உட்கார்ந்து அந்த ஆட்டத்தை பார்த்துக்கொண்டிருந்தேன். வெற்றியால் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தேன். அணியில் உள்ள ஒவ்வொருவரது முகத்திலும் மகிழ்ச்சியை கண்டேன். இதை வார்த்தைகளால் சொல்ல முடியாது. வெற்றி பெற்ற பிறகு கொண்டாட்டம் தேவைதான்.

    கப்திலின் அதிரடியான ஆட்டத்தால் ஐதராபாத் அணி மிகப்பெரிய ஸ்கோரை எடுக்கும் என்று கருதினோம். ஆனால் அமித் மிஸ்ரா பிரமாதமாக பந்து வீசினார். அனைவரது பங்களிப்பும் சிறப்பாக இருந்தது.

    ரி‌ஷப் பந்த், பிரித்வி ஷா அதிரடியாக ஆடினால் கட்டுப்படுத்துவது கடினம். அவர்கள் போக்கில் ஆடினால் வெற்றிக்கு அழைத்து செல்வார்கள்.



    குவாலிபையர்-2 ஆட்டத்தில் சென்னை அணி எதிர்கொள்கிறோம். அந்த அணியை வீழ்த்துவோம் என்ற நம்பிக்கை இருக்கிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்டது குறித்து ஐதராபாத் அணி கேப்டன் வில்லியம்சன் கூறும்போது, ‘‘நாங்கள் கடினமான ஸ்கோரைதான் டெல்லி அணிக்கு நிர்ணயித்தோம். 162 ரன் என்பது வெற்றி பெறக்கூடிய இலக்குதான்.

    ஒரு கட்டத்தில் நாங்கள் வலிமையான நிலையில் இருந்தோம். வார்னரும், பேர்ஸ்டோவும் இல்லாதது அணிக்கு பாதிப்பே. கடைசி நேரத்தில் பந்துவீச்சு சிறப்பாக அமையவில்லை. இதுவே தோல்விக்கு காரணமாக அமைந்து விட்டது என்றார். #ShreyasIyer #DCvsSRH
    ×