search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வேளாண்மை அதிகாரி தகவல்"

    • மானாவாரி பயிராக பயன்படுவதுடன் மண் அரிமானத்தையும் தடுக்கிறது.
    • நிலக்கடலை புண்ணாக்கு கால்நடை உணவாகவும், மண்ணிற்கு உரமாகவும் பயன்படுகிறது.

    ராயக்கோட்டை,

    கிருஷ்ணகிரி மாவட்டம், கெலமங்கலம் வட்டாரம், ராயக்கோட்டை அருகே உள்ள நல்லூர் கிராமத்தில், நிலக்கடலை விதைப்பண்ணையை மாவட்ட விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று உதவி இயக்குனர் அருணன் ஆய்வு செய்தார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    நிலக்கடலையானது 100 முதல் 130 நாட்கள் வரை வளரக் கூடிய எண்ணெய் வித்துப்பயிராகும். இது வறட்சியை தாங்கி வளரக்கூடிய தன்மையும் இருப்பதால் மானாவாரி பயிராக பயன்படுவதுடன் மண் அரிமானத்தையும் தடுக்கிறது. இப்பயிரானது வளிமண்டலத்தில் உள்ள தழைச்சத்தினை மண்ணிற்கு கிரகிக்கும் தன்மையுடையதால் மண்வளத்தையும் பெருக்குகிறது.

    மேலும் இதன் தண்டுப்பகுதி கால்நடைகளுக்கு உணவாகப் பயன்படுவதுடன், நிலக்கடலை புண்ணாக்கு கால்நடை உணவாகவும், மண்ணிற்கு உரமாகவும் பயன்படுகிறது.

    நிலக்கடலை எண்ணெய் சமையலுக்கு பெரிதளவு பயன்படுத்தப்படுகிறது. நிலக்கடலையானது முக்கியமான எண்ணெய் வித்துப்பயிராக உள்ளதால் அதன் விதைத்தேவையை பூர்த்தி செய்வது அவசியமாகிறது.

    வேளாண்மை துறை மூலம் விதைப்பண்ணைகள் அமைத்து மாவட்டத்தின் நிலக்கடலை விதைத் தேவை பூர்த்தி செய்யப்படுகிறது.

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தரணி, கதிரி கே-1812, கே-9,வி.ஆர்.ஐ.-8, ஆகிய ரகங்களில் விதைப்பண்ணைகள் அமைக்கப்படுகிறது.

    விதைப்பண்ணை அமைப்பதனால் அதிக மகசூல் பெறுவதுடன், சந்தைவிலையைவிட கூடுதலான விலைக்கு கொள்முதல் செய்வதால் அதிக லாபமும், ஊக்க தொகையும் கிடைக்கிறது.

    எனவே விதைப்பண்ணை அமைக்க விரும்பும் விவசாயிகள் அருகிலுள்ள தங்களது வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தை அணுகுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ஆய்வின் போது ஓசூர் விதைச்சான்று அலுவலர் குமரேசன் உள்பட பலர் உடனிருந்தனர். இதற்கான ஏற்பாடுகளை கெலமங்கலம் வட்டார உதவி விதை அலுவலர் கணபதி செய்திருந்தாார்.

    ×