search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வீட்டுமனை விலை"

    சென்னையில் 1865-ம் ஆண்டில் நடந்த முதல் பத்திரப்பதிவில் 2750 சதுர அடி வீட்டுமனையின் விலை ரூ.500 தான் என தெரியவந்துள்ளது. #MadrasDay #ChennaiDay
    சென்னை:

    தென்னிந்தியாவின் நுழைவு வாயிலாக சென்னை மாநகரம் திகழ்கிறது. இது இந்தியாவில் உள்ள 4 முக்கிய நகரங்களில் ஒன்று.

    எப்போதும் சுறுசுறுப்பாகவும் பரபரப்பாகவும் இயங்கிக் கொண்டிருக்கும் இன்றைய சென்னை, விண்ணை முட்டும் உயரத்தில் அடுக்குமாடி கட்டிடங்கள், மேம்பாலங்கள், மெட்ரோ ரெயில் சேவை, துறைமுகம், விமான நிலையம், தொழில் நுட்ப பூங்கா என அதிநவீன நகரமாக புதுப்பொலிவுடன் திகழ்கிறது.

    வரலாற்று பாரம்பரியம் மிக்க சென்னை மாநகரம் 379-ம் ஆண்டுகளுக்கு முன்பு அதாவது 1639-ம் ஆண்டு ஆகஸ்டு 22-ந்தேதி உதயமானது. அதற்கு அடிக்கோலாக திகழ்ந்தவர் பிரான்சிஸ் டே என்ற ஆங்கிலேயர். இவர் கிழக்கிந்திய கம்பெனியின் ஏஜெண்டாக இருந்தார்.

    இன்று தலைமை செயலகம் இயங்கி கொண்டிருக்கும் செயின்ட் ஜார்ஜ் கோட்டை பகுதியை முதன் முதலாக விலைக்கு வாங்கினார். அங்கு செயின்ட் ஜார்ஜ் கோட்டை கட்டப்பட்டது. அதை சுற்றி குடியிருப்புகள் உருவானது.

    மதராச பட்டணம் என்று அழைக்கப்பட்ட அந்த பகுதி படிப்படியாக குடியிருப்புகளால் விரிவடைந்து மயிலாப்பூர், எழும்பூர், திருவல்லிக்கேணி, கோடம்பாக்கம், திருவான்மியூர், ராயபுரம், திருவொற்றி யூர் என சிறு சிறு கிராமங்கள் உருவாகியது. பின்னர் அவை நகரங்களாக மாறியது.

    இதற்கிடையே வடக்கு பகுதி மதராசபட்டணம் என்றும், தெற்கு பகுதி சென்னை பட்டணம் என்றும் அழைக்கப்பட்டது. வர்த்தகம் பெருகி மக்கள் நடமாட்டம் அதிகரிக்க தொடங்கியது.

    இக்கால கட்டத்தில் 1856-ம் ஆண்டு ராயபுரத்தில் முதல் ரெயில் நிலையம் உதயமானது. அதை தொடர்ந்து சென்னை நகரம் வளர்ச்சியால் விரிவடைய தொடங்கியது. பிழைப்பு தேடி மக்கள் இங்கு வந்து குவிய தொடங்கினர்.

    மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை பெருக்க சொத்துக்களை வாங்க தொடங்கினர். இன்று சென்னை மாநகரில் சொந்தமாக வீட்டு மனைகள் மற்றும் வீடுகள் வாங்குவது அனைவரின் கனவாக உள்ளது. இன்று ஒரு கிரவுண்டு வீட்டு மனையின் விலை பல லட்சம் மற்றும் கோடிக்கணக்கான ரூபாயை தாண்டி விற்கிறது.

    இந்த நிலையில் சென்னையில் முதன் முறையாக நிலம் மற்றும் வீட்டுமனை விற்பனை முதன் முறையாக 19-ம் நூற்றாண்டில் தொடங்கியது. அதை தொடர்ந்து சென்னை மாகாணத்தில் கடந்த 1865-ம் ஆண்டில் ராயபுரத்தில்தான் முதன் முறையாக நிலம் விற்பனை செய்யப்பட்டு பாரிமுனை அலுவலகத்தில் பத்திர பதிவு நடந்தது.


    இங்கு 1865-ம் ஆண்டு ஜனவரி 5-ந்தேதி முதல் பத்திர பதிவு நடந்தது. கைலாசம் ஆரோக்கிய முதலி என்பவர் விக்டோரியா பி கம்பெனி மெட்ராஸ் லிமிடெட் என்ற நிறுவனத்துக்கு 2,750 சதுர அடி (1 கிரவுண்டு மற்றும் 352 சதுர அடி) நிலத்தை வெறும் 500 ரூபாய்க்கு விற்பனை செய்தார்.

    இதற்கான பத்திரம் 3 பக்கம் ஆங்கிலத்தில் எழுதப்பட்டுள்ளது. நிலத்தை விற்ற கைலாச ஆரோக்கிய முதலி தமிழில் கையெழுத்திட்டு இருக்கிறார்.

    இதற்கிடையே கிழக்கிந்திய கம்பெனியின் ஆதிக்கத்தில் இருந்த பகுதிகள் இங்கிலாந்து அரசின் கட்டுப்பாட்டிற்குள் வந்த பிறகு மெட்ராஸ் மாகாணத்தில் 1865-ம் ஆண்டில் பத்திர பதிவு அலுவலகம் அதிகாரப்பூர்வமாக்கப்பட்டு ஒரு முழுவடிவம் பெற்றது. கர்னல் ராபர்ட் மகன்சி மெக்டொனால்டு இன்ஸ்பெக்டர் ஜெனரல் பதிவாளர் ஆனார்.

    அதை தொடர்ந்து மெட்ராஸ் மாகாணத்தில் 50 சப்-ரிஜிஸ்திரார் அலுவலகங்கள் திறக்கப்பட்டன. அவற்றில் மிகவும் பழமையானது பாரிமுனையில் உள்ள அலுவலகமாகும். இங்குதான் முதல் முறையாக நிலம் பத்திரப்பதிவு செய்யப்பட்டது. மேலும் அக்கால கட்டத்தில் தொடங்கப்பட்டவைகளில் மயிலாப்பூர், கோடம்பாக்கம், சைதாப்பேட்டை சப்-ரிஜிஸ்திரார் அலுவலகங்களும் அடங்கும்.

    அன்றைய கால கட்டத்தில் அழகிய கையெழுத்துடன் கூடிய பத்திரப்பதிவு நடந்தது. பசை கலந்த பருத்தி இழையிலான காகிதத்தில் எழுதப்பட்டது. இதனால் அவற்றின் தரம் இன்னும் குறையவில்லை. இன்றுவரை எழுத்துக்கள் அழியாமல் அப்படியே இருக்கின்றன. #MadrasDay #ChennaiDay
    ×