search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வாக்குபதிவு"

    • மக்களுக்கு பெரிய அளவில் விழிப்புணர்வை ஏற்படுத்தவில்லை என்பது தெளிவாக தெரிகிறது.
    • ஓட்டு போடனுமா என்கின்ற மனநிலைக்கு மக்கள் வந்துள்ளனர்.

    சென்னை:

    தே.மு.தி.க. பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    சொந்த ஊருக்கு சென்று வாக்களிக்க வேண்டும் என்ற நிலையில் இருப்பவர்களுக்கு, பஸ் கட்டணம், ரெயில் கட்டணம் மற்றும் அனைத்து போக்குவரத்து கட்டணங்களும் அதிகமாக இருப்பதனால் செலவு செய்து ஓட்டு போடனுமா என்கின்ற மனநிலைக்கு மக்கள் வந்துள்ளனர். தேர்தல் வரும் ஒவ்வொரு ஆண்டும் கோடை காலத்தில் தான் வருகிறது. எனவே வெயிலின் தாக்கம் அதிகம் என்கிற காரணத்தை ஏற்றுக்கொள்ள முடியாது.

    தேர்தல் ஆணையம் நூறு சதவீதம் ஓட்டு செலுத்த வேண்டும் என்று விளம்பரம் செய்தாலும், மக்களுக்கு பெரிய அளவில் விழிப்புணர்வை ஏற்படுத்தவில்லை என்பது தெளிவாக தெரிகிறது. இதில் முக்கியமாக சென்னை போன்ற மாநகரங்களில் வசதியானவர்கள், படித்தவர்கள், அடுக்குமாடி குடியிருப்பில் இருப்பவர்கள் வாக்களிப்பதை பெருமளவில் விரும்புவதில்லை என்பது வேதனையளிக்கிறது.


    நாம் யாருக்கு ஓட்டுப் போட்டால் என்ன? என்ன மாற்றம் வரப்போகிறது? என்கிற மனநிலைக்கு மக்கள் தள்ளப்படுகிறார்களா என்பது ஒரு கேள்விக்குறியாக இருக்கிறது.

    ஏற்கனவே வெற்றி பெற்றவர்களும் தொகுதி பக்கம் அதிகம் செல்வதில்லை, தொகுதி மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளையும் நிறைவேற்றுவதில்லை, அதுமட்டு மல்லாமல் இன்றைக்கு நிலவுகின்ற வேலையின்மை, வறுமை, அன்றாட பிரச்சனைகளை தீர்ப்பதற்கு கூட ஆளில்லை. யாருக்கு ஓட்டுப் போட்டால் என்ன என்ற மக்களின் வேதனையான மன நிலையை தான் இது நிரூபிக்கிறது. இதெல்லாம் மாறவேண்டும் என்றால் மத்திய, மாநில ஆட்சியில் இருப்பவர்கள் மக்களின் பிரச்சனைகளுக்கு அதிக கவனம் செலுத்த வேண்டியது அவசியமானதாகும். ஆனால் ஆளும் ஆட்சியாளர்களோ ஓட்டுக்கு காசு கொடுத்தும், ஒட்டு மொத்த மீடியாவையும் பயன்படுத்தி வெற்றி பெற்றுவிடலாம் என்கின்ற போக்கில் இருப்பதாக சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கிறார்கள்.

    எனவே மக்களுக்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றணும், வாக்களித்த மக்களை நேரடியாக சந்திக்கணும் என்கிற பாடத்தை இந்த தேர்தல் மூலம் கற்றுள்ளனர். எனவே தேர்தல் ஆணையமும், காவல்துறையும், நீதித்துறையும், ஆட்சியாளர்களும் வாக்களிப்பதன் அவசியத்தையும், நம்பிக்கையையும் மக்களுக்கு இனிவரும் காலங்களில் உறுதியாக ஏற்படுத்த வேண்டும் என தெரிவித்துக் கொள்கிறேன்.

    • வாக்குப்பதிவின்போது முதியவர்கள் அதிகமானோர் ஆர்வத்துடன் வந்து வாக்களித்தனர்
    • தேர்தல் அலுவலர்களின் உதவியுடன் தனது ஜனநாயக கடமையை ஆற்றினார்.

    மதுரை:

    தமிழகம் முழுவதும் 39 தொகுதிகளுக்கு நேற்று பாராளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடந்தது. மதுரையில் பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட 6 சட்டமன்ற தொகுதிகளிலும் வாக்குப்பதிவு விறு விறுப்பாக நடைபெற்றது. மதுரையை பொருத்தவரையில் நேற்று நடைபெற்ற வாக்குப்பதிவின்போது முதியவர்கள் அதிகமானோர் ஆர்வத்துடன் வந்து வாக்களித்தனர்.

    இந்த நிலையில் மதுரை வடக்கு சட்டமன்ற தொகுதியை சேர்ந்தவர் லீலா (வயது 99). இவரது 2 மகள்கள் வெளிநாட்டில் உள்ளனர். இவரது மற்றொரு மகள் வீடு தவிட்டுசந்தை பகுதியில் உள்ளது. இவர் அப்பகுதியில் மகளுடன் வசித்து வருகிறார்.

    இவருக்கு மதுரைவடக்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கே.கே.நகர் பகுதியில் வாக்காளர் பட்டியலில் பெயர் இடம் பெற்றிருந்தது. இதற்கான வாக்குச்சாவடி கே.கே.நகர் மகரிஷி வித்யாமந்திர் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ளது. தபால் மூலம் வாக்களிக்கும் முதியவர்களுக்கான உரிமைக்கு விண்ணப்பிக்க காலம் கடந்ததாக கூறப்படுகிறது. எனவே நேரடியாக வாக்குச்சாவடிக்கு சென்று வாக்களிக்க விரும்பினார். 99 வயதான இவர் நடக்க முடியாத முதுமையான நிலையில் காணப்பட்டதால் வாக்களிக்க உதவுமாறு அமைச்சர் பழனிவேல் தியாகராஜனுக்கு கோரிக்கை விடுத்தார்.

    இவரது கோரிக்கையை ஏற்று மூதாட்டி லீலா ஆம்புலன்சில் சென்று வாக்களிக்க தேவையான ஏற்பாடுகளை செய்து கொடுக்குமாறு தனது உதவியாளருக்கு அமைச்சர் உத்தரவிட்டார். இதன் பேரில் ஆம்புலன்சு ஏற்பாடு செய்யப்பட்டு தவிட்டுசந்தையில் உள்ள அவரது மகள் இல்லத்தில் இருந்து மூதாட்டியை வாக்குச்சாவடி அமைந்துள்ள பள்ளிக்கு ஆம்புலன்சு மூலம் தன்னார்வலர்கள் அழைத்து சென்றனர். அங்கு அவர் தேர்தல் அலுவலர்களின் உதவியுடன் தனது ஜனநாயக கடமையை ஆற்றினார். 99 வயது மூதாட்டி லீலா தனது ஜனநாயக கடமையை ஆற்றுவதற்கு அமைச்சர் உதவிய சம்பவம் அந்த பகுதியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

    • வாக்காளர்கள் ஒருவர் கூட காலை 10 மணி நிலவரப்படி வாக்களிக்க வரவில்லை.
    • கருக்கனஅள்ளி கிராமத்தில் ஒரு சதவீதம் வாக்குகூட பதிவாகவில்லை.

    ராயக்கோட்டை:

    கிருஷ்ணகிரி பாராளுமன்ற தொகுதி வேப்பனஅள்ளி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மேட அக்ரஹார ஊராட்சியில் உள்ள கடவரஅள்ளி கிராமத்தில் நேற்று காலை வாக்கு பதிவுக்கான பணிகள் நடைபெற்று தயார் நிலையில் இருந்தன.

    ஆனால், கடவரஅள்ளி கிராமத்தில் உள்ள வாக்காளர்கள் ஒருவர் கூட காலை 10 மணி நிலவரப்படி வாக்களிக்க வரவில்லை.

    இதுகுறித்து அந்த பகுதியைச் சேர்ந்த கிராம மக்கள் கூறும்போது, இந்த பகுதியில் 450 பேர் வாக்காளர்கள் உள்ளனர். இந்த நிலையில் இந்த பகுதியில் வீட்டுமனை பட்டா கேட்டு பல ஆண்டுகளாக அதிகாரிகளிடம் மனு அளித்தும், அவர்கள் எந்தவித நடவடிக்கை எடுக்காததால் தேர்தலை புறக்கணிக்கிறோம் என்றனர்.

    இதுகுறித்து தகவலறிந்த மாவட்ட தேர்தல் நடத்தும் உதவி அலுவலர், போலீஸ் டி.எஸ்.பி., மற்றும் அரசு அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து கடவரஅள்ளி கிராம மக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். இந்த பேச்சு வார்த்தை மாலை 5 மணி வரை நடைபெற்றது. இதில் தங்களது கோரிக்கை குறித்து நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதியளித்தனர். அதன்பிறகு அப்பகுதி பொதுமக்கள் சமாதானம் அடைந்து 5.20 மணி முதல் வாக்கு பதிவு செய்ய தொடங்கினர். 6 மணிக்கு பிறகு வாக்களிக்க வந்தவர்களுக்கு டோக்கன் விநியோகம் செய்யப்பட்டது. இதனால் இரவு 9 மணி வரை வாக்குபதிவு நடைபெற்றது.

    கடவரஅள்ளி பகுதியில் மொத்தம் 455 வாக்காளர்கள் உள்ளனர். இதில் 377 பேர் மட்டும் வாக்களித்தனர். அந்த பகுதியில் மொத்தம் 76 சதவீதம் வாக்கு பதிவாகி இருந்தது.

    இதேபோன்று தேன்கனிக்கோட்டை அருகே காரண்டஅள்ளி ஊராட்சிக்குட்பட்ட கச்சுவாடி கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கபள்ளியில் வாக்காளர் ஒருவர் கூட காலை 7 மணி முதல் 10 மணி வரை வாக்களிக்க வரவில்லை.

    கச்சுவாடி பகுதியில் சாலை வசதி கோரி அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கை எடுக்காததால் அப்பகுதி பொதுமக்கள் தேர்தல் புறக்கணிப்பதாக தெரிவித்தனர். உடனே அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று பேச்சு வார்த்தை நடத்தினர். இதில் சமரசம் அடைந்த அப்பகுதி பொதுமக்கள் மதியம் 1 மணிக்கும் மேல் வாக்களிக்க சென்றனர். 6 மணிக்கு மேல் வாக்களிக்க வந்தவர்களுக்கு அதிகாரிகள் டோக்கன் விநியோகம் செய்தனர். அதன்பிறகு டோக்கன் விநியோகம் செய்யப்பட்டவர்கள் இரவு 9 மணி வரை வாக்களித்தனர். இதில் 60 சதவீதம் வாக்குகள் பதிவாகின.

    இதேபோல் வேப்பனஅள்ளி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மற்றொரு கிராமமான கருக்கனஅள்ளி கிராமத்திலும் தேர்தலை புறக்கணித்து வாக்காளர் யாரும் வாக்களிக்கவில்லை.

    மேலும், அந்த பகுதியில் 1050 பேர் வாக்காளர்கள் உள்ளனர். இந்த பகுதியில் 4 வழி சாலை பணிகள் நடைபெற்று வருவதால், பொதுமக்கள் சாலையை கடக்கும் விதமாக மேம்பாலம் அமைக்கவில்லை. இதனால் பொது மக்கள் 4 வழிசாலை கடக்க முடியாமல் அவதிப்பட்டு வந்தனர். இதன் காரணமாக அந்த பகுதியில் உள்ள கிராம மக்கள் தேர்தலை புறக்கணித்து ஒருவர் கூட வாக்களிக்கவில்லை.

    அப்பகுதி பொது மக்களிடம் அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்தியும் அவர்கள் யாரும் சமாதானம் ஆகவில்லை. இதன் காரணமாக கருக்கனஅள்ளி கிராமத்தில் ஒரு சதவீதம் வாக்குகூட பதிவாகவில்லை.

    • இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியானது முதலே, தமிழகத்தில் கடந்த 15 நாட்களாக தீவிர பிரசாரம் களைகட்டியது.
    • பெண்கள் வீடுகளில் கட்சி சின்னங்களை கோலமாக வரைந்தும் வேட்பாளர்களை கவருகிறார்கள்.

    வாக்காள பெருமக்களே.. மறந்தும் இருந்து விடாதீர்கள்... என்ற வாகன பிரசாரம் வீடுகளுக்குள் இருந்தாலும் தற்போது காதில் ஒலித்துக் கொண்டே இருக்கிறது. அந்த அளவுக்கு இறுதிக்கட்ட பிரசாரம் தீவிரமாக நடந்து வருகிறது.

    நாளை மாலை 6 மணியுடன் பிரசாரம் ஓய்கிறது.

    இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியானது முதலே, தமிழகத்தில் கடந்த 15 நாட்களாக தீவிர பிரசாரம் களைகட்டியது.

    தி.மு.க. தலைமையிலான இண்டியா கூட்டணி, அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணி, பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி மற்றும் நாம் தமிழர் கட்சி என 4 முனை போட்டி நிலவுவதால், தேசிய மற்றும் மாநில கட்சிகளின் தலைவர்கள் தங்கள் கட்சி மற்றும் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களுக்காக தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

    அரசியல் கட்சியினருக்கு இணையாக சுயேட்சை வேட்பாளர்களும் வரிந்து கட்டிக்கொண்டு பிரசாரம் செய்கின்றனர்.

    வேலூர் மாவட்டத்தில் வேட்பாளர்கள் வெயிலையும் பொருட்படுத்தாமல் வீதி, வீதியாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

    இதனால், திரும்பிய பக்கமெல்லாம் வேட்பாளர்கள், கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் காணப்பட்டனர். மேள தாளங்கள் அடித்தப்படி ஊர்வலமாக சென்றனர்.

    பிரசார வாகனங்களில் கட்சிகளின் தொண்டர்களும் தங்கள் கட்சிக் கொடிகளை அசைத்து, நடனமாடினர்.

    பாடல்கள் ஒலிபரப்பிக்கொண்டு ஆட்டோ முன் செல்ல, வேட்பாளர்கள் வாக்கு சேகரித்தனர். அவர்களுடன் தொண்டர்கள் கையில் பதாதைகளை ஏந்தி நடனமாடிக் கொண்டே பின்தொடர்ந்து சென்றனர்.

    குறிப்பாக மலைக் கிராமங்கள், சாலை வசதியற்ற மற்றும் நீண்ட தொலைவில் உள்ள குக்கிராமங்களுக்கு வேட்பாளர்கள் சென்று குக்கிராமங்களிலும், வேட்பாளர்கள் வராத பகுதிகளிலும் வாக்காளர்களை கவரும் வகையில் வீடு வீடாக சென்று வாக்கு சேகரிக்கும் பணியில் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் ஈடுபட்டனர்.

    எங்கு பார்த்தாலும் அரசியல் கட்சியினரின் தலைகளாக காட்சி அளிக்கிறது. இதே போல் அரசியல் கட்சி தொண்டர்கள் தலைவர்கள் போல் வேடம் அணிந்து பிரசாரத்தில் ஈடுபட்டு அவர்கள் போல் பேசி பொதுமக்களை கவர்ந்தனர்.

    பெரியார் போல் வேடம் அணிந்து வருபவர்கள் சுய மரியாதை, பெண் விடுதலை குறித்தும் கருணாநிதி போல் வருபவர்கள் அவரது வசனம் மற்றும் கொள்கைகள் குறித்தும் பேசினர்.

    மேலும் எம்.ஜி.ஆர். போல் வேடம் அணிந்து வருபவர்கள் அவரது கொள்கைகள் குறித்தும் மற்றும் எம்.ஜி.ஆர். பாடிய பாடல்களை பாடி அவர் போல் நடித்து பிரசாரத்தில் ஈடுபட்டனர்.

    தொடர்ந்து கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டும் வருகிறது. மேலும் மேள தாளங்கள் முழங்க சினிமா பாடல்கள், அரசியல் கட்சி பாடல்கள் மூலம் ஆடல்-பாடல் நிகழ்ச்சி நடத்தினர்.

    தொண்டர்கள் கட்சி சின்னங்களை உடலில் வரைந்து ஓட்டு கேட்டனர்.

    சைக்கிள், இருசக்கர வாகனங்களில் கட்சி சின்னங்களை வைத்து கொண்டு பல பகுதிகளில் சுற்றினர்.

    பெண்கள் வீடுகளில் கட்சி சின்னங்களை கோலமாக வரைந்தும் வேட்பாளர்களை கவருகிறார்கள்.

    வேலூரில் சிலர் கரகாட்டம் ஆடுபவர்களை அழைத்து வந்தனர். அவர்கள் வீதி வீதியாக சென்று வாக்காளர்களை கவரும் வகையில் கரகாட்டம் ஆடினர். மோகினி ஆட்டம், கதகளி ஆட்டமும் நடந்தது.

    இதை பொதுமக்கள் மற்றும் கட்சி தொண்டர்கள் பார்த்து ரசித்தனர்.

    இறுதிகட்ட பிரசாரத்தில் எங்கு பார்த்தாலும் தாரைதப்பட்டை ஆட்டம் என திருவிழா போல் காட்சி அளித்தது.

    • புன்னம் ஊராட்சி 3வது வார்டு உறுப்பினர் பதவிக்கு 3 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.
    • கிருஷ்ணராயபுரம் ஊராட்சி ஒன்றியம் வீரியபாளையம் 7வது வார்டு உறுப்பினர் பதவிக்கு 2 பேர் போட்டியிட்ட நிலையில் மொத்தமுள்ள 252 வாக்குகளி 186 வாக்குகள் என 73.60 சதவீத வாக்குகள் பதிவாகின. நாளை மறுநாள் (ஜூலை 12) வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்

    கரூர்:

    கரூர் மாவட்டத்தில் உள்ள 7 ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கான தேர்தலில் 5 பேர் போட்டியின்றி தேர்வான நிலையில் க.பரமத்தி ஊராட்சி ஒன்றியம் புன்னம் ஊராட்சி 3வது வார்டு உறுப்பினர் பதவிக்கான தேர்தல் ஆலாம்பாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி மற்றும் கிருஷ்ணராயபுரம் ஊராட்சி ஒன்றியம் வீரியபாளையம் 7வது வார்டு உறுப்பினர் பதவிக்கு வெள்ளையக்கவு ண்டன்பட்டி ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியிலும் நடைபெற்றது.

    புன்னம் ஊராட்சி 3வது வார்டு உறுப்பினர் பதவிக்கு 3 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். 206 ஆண்கள், 230 பெண்கள் என மொத்தம் 436 வாக்காளர்கள் உள்ளனர். வாக்குபதிவு காலை 7 மணிக்கு தொடங்கியது. மதிய வேளையில் ஒரு குறிப்பிட்ட வேட்பாளருக்கு ஆதரவாக ஒருவர் அடிக்கடி உள்ளே வருவதாக கூறி ஏஜண்ட் ஒருவர் புகார் கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. 146 ஆண்கள், 171 பெண்கள் என மொத்தம் 317 என 72.70 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது.

    வாக்குபெட்டி க.பரமத்தி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு அந்த அறைக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். கிருஷ்ணராயபுரம் ஊராட்சி ஒன்றியம் வீரியபாளையம் 7வது வார்டு உறுப்பினர் பதவிக்கு 2 பேர் போட்டியிட்ட நிலையில் மொத்தமுள்ள 252 வாக்குகளி 186 வாக்குகள் என 73.60 சதவீத வாக்குகள் பதிவாகின. நாளை மறுநாள் (ஜூலை 12) வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.

    கடலூர் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சிகளுகளில் வாக்குபதிவு செய்யப்பட்டது.

    கடலூர்:

    கடலூர் மாவட்டத்தில் 14 ஊராட்சி ஒன்றியங்களில் காலியாக உள்ள ஒருமாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கும், 4 ஊராட்சி மன்ற தலைவர்கள் பதவிக்கும், 26 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கும் என மொத்தம் 31 பதவி இடங்களை நிரப்புவதற்கான இடைத்தேர்தல் இன்று (சனிக்கிழமை) நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி இன்று காலை 7 மணிக்கு வாக்குபதிவு தொடங்கியது. காலை முதலே வாக்காளர்கள் வரிசசையில் நின்று ஆர்வத்துடன் வாக்களித்தனர்.

    கடலூர் ஒன்றியத்தில் கடலூர் முதுநகர் (நான்முனிசிபல்) 9-வது வார்டுக்கும், கீழ்குமாரமங்கலத்தில் 6-வது வார்டுக்கும், மருதாடு பஞ்சாயத்து தலைவர் பதவிக்கும் இடைத்தேர்தல் நடந்தது. இந்த தேர்தல் மாலை 6 மணிவரை நடக்கிறது. இதில் பதிவான வாக்குகள், வருகிற 12-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) எண்ணப்படுகிறது. இதற்கிடையே இடைத்தேர்தலையொட்டி தேர்தல் நடைபெறும் பகுதிகளில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசன் மேற்பார்வையில் 700-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு,பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    • மொரப்பூர் ஊராட்சி 4-வது வார்டு உறுப்பினர் பதவிக்கும், 7-வது வார்டு உறுப்பினர் பதவிக்கும் இடைத்தேர்தல் நடந்தது.
    • வாக்காளர்கள் வரிசையில் நின்று வாக்களித்தனர்.

    தருமபுரி, 

    தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் இறப்பு மற்றும் பதவி விலகல் போன்ற காரணங்களால் காலியாக உள்ள பதவிகளுக்கு இன்று தேர்தல் நடந்தது.

    தருமபுரி மாவட்டத்தில் ஊராட்சி ஒன்றியம், கிராம ஊராட்சி, கிராம ஊராட்சி வார்டுகள் ஆகியவற்றில் காலி இடங்களுக்கு இடைத்தேர்தல் வாக்குபதிவு நடந்தது.

    காரிமங்கலம் ஒன்றியம் 19-வது வார்டு உறுப்பினர் பதவிக்கும், பாலக்கோடு ஊராட்சி ஒன்றியம் குட்லானஅள்ளி கிராம ஊராட்சி தலைவர் பதவிக்கும், பாலக்கோடு ஒன்றியம் பேளார அள்ளி ஊராட்சி 8-வது வார்டு உறுப்பினர் பதவிக்கும், மொரப்பூர் ஒன்றியம் மொரப்பூர் ஊராட்சி 4-வது வார்டு உறுப்பினர் பதவிக்கும், 7-வது வார்டு உறுப்பினர் பதவிக்கும் இடைத்தேர்தல் நடந்தது.

    தருமபுரி மாவட்டத்தில் 4 இடங்களுக்கு 12 பேர் போட்டியிடுகிறார்கள். வாக்குசாவடி மையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. முகக்கவசம் அணிந்தும், சமூக இடைவெளியை கடைபிடித்தும் வாக்காளர்கள் வாக்களித்தனர்.

    இதே போல் கிருஷ்ணகிரி மாவட்டம், கெலமங்கலம் ஒன்றிய ஊராட்சி ஒன்றிய 12-வது வார்டு உறுப்பினர் பதவிக்கும், கொப்பக்கரை கிராம ஊராட்சி 4-வது வார்டு உறுப்பினர் பதவிக்கும், தளி ஊராட்சி ஒன்றிய 16-வது வார்டு உறுப்பினர் பதவிக்கும் இன்று தேர்தல் நடந்தது.

    இதனால் கெலமங்கலம் ஊராட்சிக்குட்பட்ட பேவநத்தம், பொம்மதாதனூர், கொப்பக்கரை ஆகிய ஊராட்சிகள் மற்றும் தளி ஒன்றியத்திற்குட்பட்ட அன்னியாளம், கக்கதாசம், தேவருளிமங்கலம் ஆகிய ஊராட்சிகளில் அந்தந்த பகுதிகளில் வாக்குசாவடி அமைக்கப்பட்டு இருந்தது.

    இதனால் அப்பகுதி வாக்காளர்கள் வரிசையில் நின்று வாக்களித்தனர். வாக்குசாவடிக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    ×