search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வாக்குச்சாவடி மறுசீரமைப்பு"

    • வாக்குச்சாவடிகளை மறுசீரமைப்பு செய்வது தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சி பிரதிநிதிகளுடனான ஆலோனைக்கூட்டம் நடைபெற்றது.
    • வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயர் சரியாக உள்ளதா என்பதை அனைத்து வாக்காளர்களும் உறுதி செய்துகொள்ள விழிப்புணர்வுகளை ஏற்படுத்த வேண்டும் என தெரிவித்தார்.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் விசாகன் தலைமையில் வாக்குச்சாவடிகளை மறுசீரமைப்பு செய்வது தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சி பிரதிநிதிகளுடனான ஆலோனைக்கூட்டம் நடைபெற்றது.

    கூட்டத்தில் கலெக்டர் தெரிவித்ததாவது:-

    திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளில் மொத்தம் 2115 வாக்குச்சாவடிகள் உள்ளன. 1500 வாக்காளர்களுக்கு மேல் உள்ள வாக்குச்சாவடிகளை பிரித்து கூடுதல் வாக்குச்சாவடி அமைக்கவும், பொதுமக்கள் வசிக்கும் பகுதிக்கும் வாக்குச்சாவடிக்கும் இடையே உள்ள துாரம் 2 கி.மீட்டருக்கு மேல் இருந்தால், அந்த பகுதிகளைச் சேர்ந்தவர்கள் வாக்களிக்கும் வகையில், அங்கு கூடுதல் வாக்குச்சாவடிகள் அமைக்கவும் இந்திய தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

    அதன்படி, திண்டுக்கல் மாவட்டத்தில் வாக்குச்சாவடி மறுசீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டதில், ஆத்தூர் சட்டமன்ற தொகுதியில் தாடிக்கொம்பு பகுதியில் உள்ள வாக்குச்சாவடி எண் 40-ல் 1500-க்கும் அதிகமான வாக்காளர்கள் இருப்பதால் கூடுதல் வாக்குச்சாவடி அமைக்கவும், நத்தம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட எல்லைப்பட்டி பகுதியில் 2 கி.மீட்டர் தூரத்துக்கு மேல் உள்ள பகுதிகளைச் சேர்ந்தவர்கள் வாக்களிக்கும் வகையில் கூடுதலாக ஒரு வாக்குச்சாவடி அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    அதன்படி தற்போது மாவட்டத்தில் வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கை 2117 ஆக அதிகரித்துள்ளது. 2024-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னதாக மீண்டும் வாக்குச்சாவடி மறுசீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படும்.

    மேலும், நத்தம் சட்டமன்ற தொகுதியில் 7 இடங்களிலும், திண்டுக்கல் சட்டமன்ற தொகுதியில் 1 இடம் என மொத்தம் 8 இடங்களில் வாக்குச்சாவடிகள் உள்ள கட்டிடங்கள் பழுதடைந்த நிலையில், அவைகளுக்கு அருகில் புதிய கட்டிடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளன.

    தேர்தல் ஆணையம் அறிவுரைப்படி, திண்டுக்கல் மாவட்டத்தில் வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண் இணைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதற்காக மாவட்டம் முழுவதும் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

    ஆதார் இணைப்பு சிறப்பு முகாம்கள் நடைபெறும் நாட்களில், அந்தந்த பகுதிகளில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். மேலும், 31.12.2004-க்கு முன்னர் பிறந்தவர்கள் தங்கள் பெயர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்க விண்ணப்பிக்கலாம்.

    வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயர் சரியாக உள்ளதா என்பதை அனைத்து வாக்காளர்களும் உறுதி செய்துகொள்ள வேண்டும். அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினரும் இதற்கான விழிப்புணர்வுகளை ஏற்படுத்த வேண்டும் என தெரிவித்தார்.

    ×