search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வல்லநாடு இரட்டை கொலை"

    நெல்லையில் இன்று அதிகாலை போலீசார் நடத்திய அதிரடி வேட்டையில் 14 ரவுடிகள் கைது செய்யப்பட்டனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    நெல்லை:

    தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாடு அருகே உள்ள பக்கப்பட்டி கிராமத்தில் கடந்தமாதம் 26-ந் தேதி முத்துசாமி, அவரது பேரன் சுடலைமணி ஆகிய இருவரும் ஒரு கும்பலால் அரிவாளால் சரமாரியாக வெட்டி கொலை செய்யப்பட்டனர். இது தொடர்பாக சகோதரர்கள் இரண்டு பேர் ஆலங்குளம் கோர்ட்டில் சரணடைந்தனர்.

    ஆனால் இந்த கொலை வழக்கில் உண்மையான குற்றவாளிகள் தலைமறைவாக இருப்பதாகவும், அவர்களை கைது செய்ய வேண்டும் என்றும் பல்வேறு அமைப்புகள் கோரிக்கை விடுத்தன. இதுதொடர்பாக தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தினார்கள்.

    அதில் மேலும் பலருக்கு இரட்டை கொலையில் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதுதொடர்பாக தனிப்படை போலீசார் அருண்குமார், சின்னதம்பி ஆகிய இரண்டு பேரை தீவிரமாக தேடிவந்தனர். அவர்கள் நெல்லை தச்சநல்லூர் பகுதியில் உள்ள சில அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகள் ஆதரவுடன் பதுங்கியிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    இதைத்தொடர்ந்து நெல்லை சரக போலீஸ் டி.ஐ.ஜி. கபில்குமார் சரத்கர் உத்தரவின்பேரில் தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு முரளிரம்பா, நெல்லை மாநகர போலீஸ் துணைகமி‌ஷனர் சுகுணாசிங் ஆகியோர் மேற்பார்வையில் சுமார் 20-க்கும் மேற்பட்ட போலீசார் துப்பாக்கியுடன் இன்று அதிகாலை 3 மணியளவில் தச்சநல்லூர் சத்திரம்புதுக்குளம் பகுதிக்கு சென்றனர்.

    அங்குள்ள கண்ணபிரான், எஸ்டேட் மணி ஆகியோர் வீடுகளை போலீசார் சுற்றி வளைத்து அதிரடி சோதனை நடத்தினார்கள். போலீசார் உள்ளே நுழைந்ததை பார்த்ததும் அங்கு தங்கியிருந்த 20-க்கும் மேற்பட்டவர்கள் பல்வேறு திசைகளில் தப்பி ஓடினார்கள். போலீசாரும் அவர்களை விரட்டி சென்று பிடித்தனர்.

    இதில் தேவேந்திரகுல வேளாளர் கூட்டமைப்பு மாநில இளைஞரணி செயலாளர் கண்ணபிரான் (வயது 40), எஸ்டேட் மணி (35), குமுளி ராஜ்குமார் (38) அருண், செல்லபாண்டி, கணேசன், விஜி, ஆறுமுகம், ராஜதுரை உள்பட 14 பேரை போலீசார் கைது செய்தனர். இவர்கள் மீது பல்வேறு கொலை, அடிதடி உள்பட ஏராளமான வழக்குகள் உள்ளன.

    இவர்களது பெயர் போலீஸ் நிலையங்களில் ரவுடிகள் பட்டியலிலும் உள்ளது. இவர்களிடம் தீவிர விசாரணை நடத்திய போலீசார், அவர்கள் பதுங்கியிருந்த வீடுகளில் சோதனை நடத்தினார்கள். அப்போது வீடுகளின் மறைவிடங்களில் ஏராளமான அரிவாள்களும், நாட்டு வெடிகுண்டுகளும் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

    அங்கு ஒரு சொகுசு கார் உள்பட 2 கார்கள் நின்றன. அதிலும் நாட்டு வெடிகுண்டுகள் மற்றும் அரிவாள்கள் இருந்தன. அனைத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர். மொத்தம் 9 நாட்டு வெடிகுண்டுகள், 27 அரிவாள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் 2 கார்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

    போலீசார் இன்று அதிகாலை நடத்திய இந்த அதிரடி சோதனையால் அந்த பகுதி முழுவதும் போர்களம் போல் பரபரப்பாக காணப்பட்டது.

    கைதான 14 ரவுடிகளையும் பாளை ஆயுதப்படை போலீஸ் மைதானாத்தில் உள்ள அலுவலகத்திற்கு கொண்டு சென்று போலீசார் தீவிர விசாரணை நடத்தினார்கள். அவர்களில் பக்கப்பட்டி இரட்டை கொலையில் யார் யாருக்கு தொடர்பு உள்ளது? வேறு சதிசெயல்களில் அவர்கள் ஈடுபட்டார்களா? திட்டம் தீட்டினார்களா? என போலீசார் துருவி துருவி விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    வருகிற 10-ந் தேதி, தேவேந்திரகுல வேளாளர் கூட்டமைப்பின் நிறுவன தலைவர் பசுபதிபாண்டியனின் நினைவு நாள் வருகிறது. இதை முன்னிட்டு சிலரை கொலை செய்யவும், அவர்கள் திட்டம்தீட்டி இருந்ததாகவும் கூறப்படுகிறது. இதுதொடர்பாக உயர் போலீஸ் அதிகாரிகளும் பிடிபட்டவர்களிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    நாட்டு வெடிகுண்டுகள் மற்றும் அரிவாள்களுடன் 14 ரவுடிகள் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    ×