search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வன வளம்"

    • உலகில் இரண்டாவது அதிக எண்ணிக்கையிலான யானைகள் உள்ள நாடு இந்தியா.
    • யானைகள் பல்லுயிர் பெருக்கம் மற்றும் உணவுச்சங்கிலியில் முக்கியப் பங்காற்றுகின்றன.

    திருப்பூர் :

    சூழலியல் கல்வியின் மற்றொரு அங்கமான வனம், அதுசார்ந்த விலங்கினங்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த, அவிநாசி அரசு கலை அறிவியல் கல்லூரியில் உலக யானைகள் தினம் கொண்டாடப்பட்டது.சிறப்பு அழைப்பாளராக திருப்பூர் வனச்சரக அலுவலர் சுரேஷ் கிருஷ்ணன் கலந்து கொண்டுபேசினார். அவர் பேசுகையில், உலகில், இரண்டாவது அதிக எண்ணிக்கையிலான யானைகள் உள்ள நாடு இந்தியா. நிலத்தில் வாழும் பாலூட்டிகளில் மிகப்பெரிய உயிரினமான யானைகள், பல்லுயிர் பெருக்கம் மற்றும் உணவுச்சங்கிலியில் முக்கியப் பங்காற்றுகின்றன.

    தினமும், பல கி.மீ., தூரம் பயணிக்கும் யானைகள், பல்வேறு மரங்களின் இழை, தழைகளை உண்பதன் மூலம் வெளியேற்றும் சாணம் மூலம், மரம், செடி, கொடிகளை வளரச் செய்து வன வளத்தை பெருக்குகிறது. இந்த உயிரினத்தை பாதுகாப்பது ஒவ்வொருவரின் கடமை. அரசியலமைப்பு சட்டப்படி பொறுப்பும் கூட என்றார். பொருளியல் இரண்டாமாண்டு படிக்கும் மாணவர்களால் தயாரிக்கப்பட்ட, 'களிறாற்றுப்படை' என்ற ஆவணப்படம் வெளியிடப்பட்டது.யானைகள் 50 முதல் 70 ஆண்டு வரை வாழும். பெண் யானைகளின் கர்ப்ப காலம் 24 மாதம். மனிதர்களின் குரலை அடையாளம் காணும் ஆற்றல், நினைவாற்றல் யானைகளுக்கு உண்டு. கேட்பதிலும், மனிதர்களை போன்றே உணர்ச்சி வசப்படக்கூடியது.

    தந்தத்திற்காக யானைகள் கொல்லப்படுகின்றன. மின் வேலியில் சிக்கியும் பலியாகின்றன. வனப்பரப்பு குறைந்ததால் பட்டினி சாவுகளை எதிர்கொள்கின்றன. 3 நிமிடத்திற்கு ஒரு வன விலங்கு வேட்டையாடப்படுகிறது என்ற பட்டியலில் யானைகளும் இடம் பிடித்தது குறிப்பிடத்தக்கது.கடந்த 2017ன் கணக்கெடுப்புபடி இந்தியாவில் 29 ஆயிரத்து 864 யானைகள் உள்ளன. ஒரு யானை தினமும் 300 முதல் 500 விதைகளை தன் சாணத்தின் மூலம் விதைக்கிறது. ஓராண்டுக்கு 36 ஆயிரத்து 500 மரங்கள் வளர மறைமுகமாக உதவுகின்றன. அழியும் பேருயிர்களை காப்பது நம் வளங்களையும், வருங்காலத்தையும் காப்பதற்கு சமம்.இவ்வாறு அந்த ஆவணப்படத்தில் அழுத்தமாக சில புள்ளி விவரங்கள் பதிவு செய்யப்பட்டிருந்தன.  

    ×