search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ரேணுகாம்பாள்"

    திருவண்ணாமலை மாவட்டம் படவேட்டில் ரேணுகாம்பாள் கோவில் உள்ளது. இத்தலத்தில் ரேணுகாம்பாள் தலையை மட்டும் பிரதானமாகக் கொண்டு அருள்பாலித்து வருகிறாள்.
    திருவண்ணாமலை மாவட்டம் படவேட்டில் ரேணுகாம்பாள் கோவில் உள்ளது. இத்தலத்தில் ரேணுகாம்பாள் தலையை மட்டும் பிரதானமாகக் கொண்டு அருள்பாலித்து வருகிறாள். ரேணுகாதேவி ஜமதக்னி முனிவரை மணந்து பரசுராமரைப் பெற்றெடுத்தாள். தன் மனைவியின் கற்புத்திறன் மீது சந்தேகம் கொண்ட ஜமதக்னி முனிவர், தன் மகன் பரசுராமரிடம், தாயைக் கொல்லும்படி ஆணையிட்டார். பரசுராமரும் தாய் ரேணுகாதேவியை வெட்டினார்.

    இருந்தாலும், தந்தையிடம் மன்றாடி, தன் தாயை உயிர் பிழைக்க வைத்தார். ஆனால், வெட்டப்பட்ட ரேணுகாதேவியின் தலை, வேறு பெண்ணின் உடலோடு சேர்ந்து விட்டது. உயிர் வாழ விருப்பமில்லாத ரேணுகாதேவி தீயில் விழுந்தாள். அப்போது மழை பெய்ததால் தீ அணைந்து, உடலில் கொப்புளங்கள் ஏற்பட்டன.

    உடை அணிய முடியாமல் போனதால், வேப்பிலையை ஆடையாக அணிந்தாள். அத்துடன் சிவனைக் குறித்து தவமிருந்து, தனது தலை மட்டும் இந்த பூமியில் இருக்கட்டும், பாழும் உடல் வேண்டாம் என்ற வரத்தைப் பெற்றாள். அதன்படி இத்தலத்தில் சுயம்பு மூர்த்தியாக தலையை மட்டும் பிரதானமாகக் கொண்டு பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறாள்.

    சக்திக்குள் அனைத்தும் அடக்கம் என்பதற்கு ஏற்ப இங்குள்ள மூலஸ்தானத்தில் பிரம்மா, விஷ்ணு, சிவன் மூவரும் அரூபமாக அருள்பாலிக்கின்றனர். எனவே, அம்பிகையை வழிபட்டால் முப்பத்து முக்கோடி தேவர்களையும் வழிபாடு செய்த பலன் கிடைக்கும்.

    அத்தி மரத்தால் ஆன அம்மனின் முழு உருவமும், அதன் கீழ் சுயம்புவாக தோன்றிய அம்மனும், அம்மனின் இடப்பக்கம் ரேணுகாதேவியின் சிரசும் உள்ளது. பரசுராமரின் உருவமும் கருவறையில் உள்ளது. ஆதி சங்கரர் பிரதிஷ்டை செய்த பாணலிங்கத்தையும், ஜனாஹர்ஷண சக்கரத்தையும் வழிபாடு செய்தால் நினைத்தது நிறைவேறும்.

    கண்பார்வைக் குறைபாடு, அம்மை, வயிற்று வலி உள்ளவர்கள், குழந்தைப் பாக்கியம் வேண்டுவோர் திருநீற்றைத் தண்ணீரில் கலந்து அருந்தி பலன் அடைகிறார்கள். பரசுராமரை வழிபாடு செய்து தொட்டில் கட்டினால் குழந்தைப் பாக்கியம் கிடைக்கும் என்பது நம்பிக்கையாக உள்ளது.

    ×