search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை"

    சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் லஞ்சம் மற்றும் திருட்டு சம்பவங்களை தடுக்கும் வகையில் கூடுதலாக 125 நவீன கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. #RajivGandhiHospital
    சென்னை:

    சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்கும், பணிவிடை செய்வதற்கும் ஊழியர்கள், வார்டு ஊழியர்கள், துப்புரவு பணியாளர்கள் பணம் பெறுவதாக குற்றச்சாட்டு எழுந்தது.

    இதேபோல் தமிழகத்தில் உள்ள முக்கிய அரசு ஆஸ்பத்திரிகளிலும் இதே நிலை காணப்படுவதாகவும் லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    இதையடுத்து சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை உள்பட தமிழகம் முழுவதும் பல்வேறு அரசு ஆஸ்பத்திரிகளில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினார்கள். ஆஸ்பத்திரி ஊழியர்களிடமும் விசாரணை நடத்தினார்கள்.

    அப்போது முறைகேடு குறித்த ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. கணக்கில் வராத பணமும் கைப்பற்றப்பட்டது.

    இந்த நிலையில் சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் லஞ்சம் மற்றும் திருட்டு சம்பவங்களை தடுக்கும் வகையில் கூடுதலாக 125 நவீன கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.


    இது தொடர்பாக மருத்துவமனை டீன் டாக்டர் ஜெயந்தி நிருபர்களிடம் கூறியதாவது:-

    ராஜீவ் காந்தி பொது மருத்துவமனையில் ஏற்கனவே 62 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு செயல்பட்டு வருகிறது.

    தற்போது லஞ்சம், ஊழல் மற்றும் திருட்டு சம்பவங்களை தடுக்கும் வகையில் கூடுதலாக 125 நவீன கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதன் மூலம் மருத்துவமனை வளாகம் முழுவதும் கண்காணிப்பில் இருக்கும்.

    21 கேமராக்கள் மருத்துவமனை வெளி வளாகத்திலும், 104 கேமராக்கள் மருத்துவமனை கட்டிடங்களிலும் வைக்கப்பட்டுள்ளன.

    வெளி வளாகத்தில் பொருத்தப்பட்டுள்ள கேமராக்கள் 280 மீட்டர் வரை பார்க்கக்கூடிய திறன் கொண்டது. இந்த கேமராக்கள் இரவு நேரங்களிலும் தெளிவாக படம் பிடிக்கும் வசதிகள் கொண்டவை.

    ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் லஞ்சம் மற்றும் ஊழலை தடுக்கும் வகையில் தினமும் 2 பேராசிரியர்கள் கொண்ட குழு அமைக்கப்பட உள்ளது.

    இந்த குழு தினமும் மருத்துவமனையின் அனைத்து வார்டுகளையும் ஆய்வு மேற்கொண்டு அவர்களது அறிக்கையை கொடுக்கும். அந்த அறிக்கையின் அடிப்படையில் தக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

    தனியார் ஒப்பந்த ஊழியர்கள் மீது கொடுக்கப்பட்ட புகார்களின் அடிப்படையில் 5 பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. ராஜீவ்காந்தி மருத்துவமனையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

    அவர்களிடம் இருந்து உரிய அறிக்கை வந்தவுடன் அதன்பேரில் ஊழியர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார். #RajivGandhiHospital
    ×