search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ராஜஸ்தான் முதல்வர்"

    • திவ்யா குமாரி, பிரேம் சந்த் பைரவா ஆகியோர் துணை முதல்-மந்திரியாக பதவி ஏற்றுக்கொண்டனர்.
    • பதவி ஏற்பு விழாவில் பிரதமர் மோடி, மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா, பாரதிய ஜனதா தேசிய தலைவர் ஜே.பி. நட்டா கலந்து கொண்டனர்.

    ராஜஸ்தான் மாநிலத்தில் நடந்த சட்டசபை தேர்தலில் பாரதிய ஜனதா 115 தொகுதிகளை கைப்பற்றி ஆட்சியை பிடித்தது. ஆளும் காங்கிரஸ் 65 தொகுதிகளில் மட்டுமே வென்று தோல்வியை தழுவியது.

    இதையடுத்து புதிய முதல் மந்திரியை தேர்ந்தெடுப்பதற்காக கடந்த செவ்வாய்க்கிழமை பாரதிய ஜனதா எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடந்தது. இதில் யாரும் எதிர்பாராத வகையில் பஜன்லால் சர்மா புதிய முதல்-மந்திரியாக தேர்வு செய்யப்பட்டார். மேலும் துணை முதல்-மந்திரியாக திவ்யா குமாரி மற்றும் பிரேம் சந்த் பைரவா ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

    புதிய முதல்-மந்திரி பதவி ஏற்பு விழா இன்று ஜெய்ப்பூரில் வரலாற்று சிறப்பு மிக்க ஆல்பர்ட் மண்டபத்தில் நடந்தது. இந்த விழாவில் பஜன்லால் சர்மா ராஜஸ்தான் மாநில புதிய முதல்-மந்திரியாக பதவி ஏற்றுக்கொண்டார். அவருக்கு அம்மாநில கவர்னர் கல்ராஜ் மிஸ்ரா பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

    மேலும் திவ்யா குமாரி, பிரேம் சந்த் பைரவா ஆகியோர் துணை முதல்-மந்திரியாக பதவி ஏற்றுக்கொண்டனர்.

    பதவி ஏற்பு விழாவில் பிரதமர் மோடி, மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா, பாரதிய ஜனதா தேசிய தலைவர் ஜே.பி.நட்டா பங்கேற்றனர். மேலும், கோவா முதல்வர் பிரமோத் சவந்த், திரிபுரா முதல்வர் மாணிக் சஹா, மகாராஷ்டிர மாநில முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, குஜராத் முதல்வர் பூபேந்திர பட்டேல், உத்தரகாண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தமி உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர். விழாவையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது.

    புதிய முதல்-மந்திரியாக பதவி ஏற்றுக்கொண்ட பஜன்லால் சர்மா சங்கேனர் தொகுதியில் இருந்து முதல் முறையாக சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டவர். தன்னை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளரை சுமார் 48,081 வாக்குகள் வித்தியாசததில் தோற்கடித்தவர்.

    ஆர்.எஸ்.எஸ். மற்றும் அகில இந்திய வித்யார்த்தி பரிஷத் அமைப்பில் நீண்ட காலமாக பணியாற்றிவர். ராஜஸ்தான் மாநில பாரதிய ஜனதா பொதுச்செயலாளராக இருந்து வருகிறார். எம்.எல்.ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்ட உடனே முதல்-மந்திரி பதவி அவரை தேடி வந்துள்ளது. பஜன்லால் சர்மா ராஜஸ்தான் கிழக்கு மாவட்டத்தில் ஒன்றான பத்பூரை பூர்வீகமாக கொண்டவர். அரசியல் அறிவியலில் எம்.ஏ. பட்டம் பெற்றவர்.

    ×