search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ரஷியா இந்தியா ஒப்பந்தம்"

    இந்தியா- ரஷியா இடையே S-400 ஏவுகணைக்கான ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ள நிலையில் இந்தியாவை மிரட்டும் தொனியில் நட்பு நாடுகளுக்கு அமெரிக்கா பொருளாதார தடை எச்சரிக்கை விடுத்துள்ளது. #S-400 #IndiaRussiaDefenceSystem
    வாஷிங்டன் :

    ரஷிய அதிபர் விளாதிமிர் புதின், இரு நாள் பயணமாக இந்தியாவுக்கு இன்று வர இருக்கிறார். இருநாட்டுத் தலைவர்கள் இடையே நடைபெறும் இந்திய -ரஷிய வருடாந்திர சந்திப்பில் பங்கேற்பதற்காக வருகை தரும் அவர், பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துப் பேசவுள்ளார். இப்போது 19-ஆவது ஆண்டாக இரு நாட்டுத் தலைவர்கள் சந்திப்பு நடைபெறவுள்ளது.

    புதினின் இந்தப் பயணத்தின்போது ரஷியாவிடம் இருந்து எஸ்-400 விமான எதிர்ப்பு ஏவுகணைகள் வாங்கும் ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தில் மதிப்பு ரூ.36,792 கோடியாகும். இந்த ஏவுகணை வாங்கப்பட்டால், சீன எல்லையில் இந்தியாவின் பாதுகாப்பு ஏற்பாடுகள் பல மடங்கு வலுவடையும்.

    இது ரஷியாவின் அதிநவீன ஏவுகணையாகும். 400 கி,மீ சுற்றளவில் எதிரி நாட்டு ஏவுகணைகளை வான் வெளியில் இடை மறித்து தாக்கக்கூடிய ஆற்றல் இந்த ஏவுகணைக்கு உள்ளது. இந்த ரக ஏவுகணைகளில் 5 வாங்க இந்தியா முடிவு செய்துள்ளது.

    அவற்றில் இரண்டு பாகிஸ்தான் எல்லைகளிலும், இரண்டு சீன எல்லையிலும் நிலைநிறுத்தி மீதம் உள்ள ஒன்றை தலைநகர் டெல்லியில் நிலை நிறுத்த அரசு தீர்மானித்துள்ளது. இதனால் இந்திய பாதுகாப்புத்துறையின் வலிமை மேலும் வலுப்பெரும் என்பது நினைவு கூறத்தக்கது.

    புதின் மற்றும் பிரதமர் மோடி சந்திப்பின் போது இதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகும் என ரஷிய அதிபர் விளாடிமிர் புதினின் வெளியுறவு கொள்கை ஆலோசகர் யுரி உசாகோவ் தெரிவித்துள்ளார்.

    இந்நிலையில், ரஷியாவிடம் இருந்து ஆயுதங்களை கொள்முதல் செய்யும் நாடுகள் மீது பொருளாதார தடை விதிக்கப்படும் என அமெரிக்க உள்துறை அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் தெரிவித்துள்ளார். மேலும், ரஷியாவிடம் S-400 ஏவுகணைகளை வாங்கினாலும் இந்த தடை விதிக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
     
    இந்தியா ரஷியா இடையே இன்று அல்லது நாளை S-400 ஏவுகணைக்கான ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ள நிலையில் இந்தியாவை மிரட்டும் தொனியில் நட்பு நாடுகளுக்கு அமெரிக்கா இந்த எச்சரிக்கை விடுத்துள்ளதாக கருதப்படுகிறது.

    ஏற்கெனவே ஈரான் மீது விதிக்கப்பட்ட் பொருளாதார தடையினால் அந்நாட்டிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்த வேண்டும் என இந்தியாவிற்கு அமெரிக்கா அழுத்தம் கொடுத்துவரும் நிலையில், பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்த S-400 ஏவுகணை ஒப்பந்தத்தை எதிர்த்து அமெரிக்க எச்சரிக்கை விடுத்துள்ளது.



    கடந்த 2016-ம் உக்ரைன் மற்றும் கிரிமியாவில் ரஷியாவின் தலையீடு, சிரியாவில் அரசு படைகளுக்கு ரஷியா ஆதரவு அளிப்பது, 2016-ம் ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தலில் ரஷியாவின் தலையீடு போன்ற காரணங்களால் ரஷியா மீது அமெரிக்கா பொருளாதார தடைகளை விதித்துள்ளது.

    மேலும், ரஷியாவுடன் வர்த்தக தொடர்பு வைத்துக்கொள்ள கூடாது எனவும் தனது நட்பு நாடுகளுக்கு அறிவுறுத்தியுள்ளது. அதன்படி சீனா சமீபத்தில் ரஷ்யாவிடமிருந்து Su-35 f என்ற போர் விமானங்களையும், S-400 ஏவுகணைகளையும் வாங்கியது. சீனாவின் நடவடிக்கை அமெரிக்காவுடனான உறவில் விதிமீறும் செயல் என்று சீனாவுக்கு சில பொருளாதாரத் தடைகளை அமெரிக்கா விதித்தது குறிப்பிடத்தக்கது.  #S-400  #IndiaRussiaDefenceSystem 
    ×