search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ரவுடி உடல்"

    போலீஸ் நிலையத்தில் இறந்த ரவுடியின் உடல் பிரேத பரிசோதனைக்கு பிறகு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. ரவுடி மரணம் தொடர்பாக 3 போலீசார் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டனர். #RowdyDeath
    பெரம்பூர்:

    சென்னை வியாசர்பாடி பி.வி.காலனி 2-வது தெருவை சேர்ந்தவர் கார்த்திக் (வயது 28). ரவுடியான இவர் மீது எம்.கே.பி. நகர், வியாசர்பாடி, சோழவரம் ஆகிய போலீஸ் நிலையங்களில் கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன.

    கடந்த 13-ந் தேதி இரவு எம்.கே.பி. நகர் போலீசார் ரோந்து பணியில் இருந்தபோது கார்த்திக், அவரது கூட்டாளிகள் 3 பேர் கத்தியுடன் சுற்றி வந்தனர். இதனை பார்த்த போலீசார் அவர்களை பிடித்து போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்தனர்.

    போலீசார் நேற்று முன்தினம் கார்த்திக்கிடம் போலீஸ் நிலையத்தில் விசாரணை நடத்தினர். அப்போது அவர் மயங்கி விழுந்து இறந்தார். இதையடுத்து கார்த்திக்கின் உடல் ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.

    இந்நிலையில் எழும்பூர் மாஜிஸ்திரேட்டு சந்தோஷ்குமார் விசாரணைக்கு பின்னர் கார்த்திக் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு அவருடைய உறவினர்களிடம் நேற்று மாலை ஒப்படைக்கப்பட்டது. இதேபோல் எம்.கே.பி. நகர் போலீஸ் நிலையத்தில் விசாரணை நடத்திய போலீசார், கார்த்திக் உறவினர்களிடம் எழும்பூர் மாஜிஸ்திரேட்டு அரவிந்தன் நேரில் சென்று விசாரணை நடத்தினார்.

    பின்னர் கார்த்திக்கின் உடல் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் பெரம்பூரில் உள்ள இடுகாட்டில் அடக்கம் செய்யப்பட்டது. கார்த்திக் மரணத்தால் அசம்பாவித சம்பவங்கள் நடக்காமல் இருக்க வியாசர்பாடி, எம்.கே.பி.நகர் உள்ளிட்ட இடங்களில் சென்னை மேற்கு மண்டல இணை கமிஷனர் விஜயகுமாரி, மேற்கு மண்டல போக்குவரத்து இணை கமிஷனர் சுதாகர், துணை கமிஷனர்கள் சாய்சரண் தேஜஸ்வி, ஈஸ்வரன், உதவி கமிஷனர்கள் அழகேசன், ஹரிகுமார், விஜய் ஆனந்த் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    கார்த்திக் மரணம் தொடர்பாக எம்.கே.பி. நகர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் ஜெகதீசன், ராஜா, கொடுங்கையூர் போலீஸ்காரர் ஷியாம்சுந்தர் ஆகியோரை உடனடியாக ஆயுதப்படைக்கு மாற்ற துணை கமிஷனர்கள் உத்தரவிட்டனர். #RowdyDeath
    ×