search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மோசடி வழக்கு"

    • நியோமேக்ஸ் என்கிற நிதி நிறுவனம் ஒன்று அதிக வட்டி தருவதாக கூறி மோசடி.
    • கைது செய்யப்பட்ட இருவரும் மதுரை பொருளாதார குற்றப்பிரிவு நீதிமன்றத்தில் ஆஜர்.

    நெல்லையில் உள்ள நியோமேக்ஸ் என்கிற நிதி நிறுவனம் ஒன்று அதிக வட்டி தருவதாக கூறி மோசடி செய்த புகாரில் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

    இந்த விவகாரம் தொடர்பாக நியோமேக்ஸ் நெல்லை கிளை நிறுவனத்தின் இயக்குனர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    இருவரும் சிவகங்கை, தேவக்கோட்டை பகுதியை சேர்ந்த சைமன் ராஜா, கபில் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    கைது செய்யப்பட்ட இருவரும் மதுரை பொருளாதார குற்றப்பிரிவு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

    • சென்னை விமான நிலையத்தில் இருந்து கத்தார் நாட்டுக்கு செல்லும் விமானம் புறப்பட தயாராக இருந்தது.
    • விமானத்தில் செல்ல வந்த பயணிகளின் பாஸ்போர்ட் மற்றும் ஆவணங்களை குடியுரிமை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

    ஆலந்தூர்:

    ஐதராபாத்தை சேர்ந்தவர் காஜா மொய்தீன்(55). தொழில் அதிபர். இவர் மீது கடந்த 2019-ஆம் ஆண்டு, ஐதராபாத் மற்றும் தஞ்சாவூர் குற்றப்பிரிவு போலீசில் மோசடி வழக்கு உள்ளது. போலீசார் தேடுவதை அறிந்ததும் காஜா மொய்தீன் கடந்த 4 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்து வந்தார்.

    இந்தநிலையில் சென்னை விமான நிலையத்தில் இருந்து கத்தார் நாட்டுக்கு செல்லும் விமானம் புறப்பட தயாராக இருந்தது. அந்த விமானத்தில் செல்ல வந்த பயணிகளின் பாஸ்போர்ட் மற்றும் ஆவணங்களை குடியுரிமை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

    அப்போது காஜா மொய்தீனின் பாஸ்போர்ட் ஆவணங்களை குடியுரிமை அதிகாரிகள் சோதனை செய்தபோது, அவர் மோசடி வழக்கில் கடந்த 4 ஆண்டுகளாக தேடப்படும் தலைமறைவு குற்றவாளி என்று தெரியவந்தது.

    இதையடுத்து சென்னை விமான நிலைய குடியுரிமை அதிகாரிகள் காஜா மொய்தீனின் பயணத்தை ரத்து செய்து, அவரை கைது செய்து தனி அறையில் வைத்தனர். இதுபற்றி தஞ்சாவூர் மற்றும் தெலுங்கானா போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

    • பல்லடம் துணை போலீஸ் சூப்பிரண்டு சவுமியா தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு தீவிரமாக தேடி வந்தனர்.
    • நீதிமன்றம் அவரது ஜாமீனை ரத்து செய்து அவருக்கு பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டது.

    பல்லடம்:

    பல்லடம், திருப்பூர்,ஊத்துக்குளி, ஈரோடு உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த பலரிடம் தொழிலில் பங்குதாரராக சேர்த்துக் கொள்வதாக கூறி வங்கியில் கடன் பெற்று சொந்தத் தொழில் செய்யலாம் என கூறியும், அவர்களிடமிருந்து சொத்து பத்திரங்களை பெற்று வங்கியில் அவர்கள் பெயரிலேயே கடன் பெற்று சுமார் 100 கோடி அளவில் மோசடி செய்ததாக, பல்லடம் வேலப்ப கவுண்டம்பாளையம் பகுதியைச் சேர்ந்த சிவக்குமார்( வயது 51) ,அவரது அண்ணன் விஜயகுமார்(53) , மகன் ராகுல் பாலாஜி(27) மற்றும் பிரவீனா(41) உள்ளிட்டவர்கள் மீது பல்லடம், திருப்பூர், ஊத்துக்குளி,உள்ளிட்ட பல்வேறு காவல் நிலையங்களில் மோசடி வழக்கு உள்ளது.

    ஆனால் போதுமான ஆதாரங்கள் இல்லாததால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியாமல் போலீசார் திணறி வந்த நிலையில், கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் பல்லடம் காவல் நிலையத்தில்,கோவை சாய்பாபா காலனியை சேர்ந்த குமரேசன்(48) என்பவர் புகார் செய்தார்.

    கடந்த 2018 ம் ஆண்டு சிவக்குமார், பிரவீனா, திருப்பூரைச் சேர்ந்த தமிழரசன் ஆகிய3 பேரும், சொத்து பத்திரத்தின் மூலம் கடன் பெற்று டெக்ஸ்டைல் தொழில் செய்யலாம் என குமரேசனிடம் ஆசை வார்த்தைகள் கூறியுள்ளனர். இதனை நம்பி சொத்து பத்திரங்களை கொடுத்துள்ளார். அதனை ஈரோடு பகுதியிலுள்ள அரசு வங்கியில் வைத்து ரூபாய் 2 கோடி கடன் பெற்றுள்ளனர்.

    ஆனால் டெக்ஸ்டைல்ஸ் தொழில் எதுவும் செய்யாமல், தாமதம் செய்துள்ளனர். இதனால் பணத்தை திருப்பிக் கொடுக்கும்படி குமரேசன் தொடர்ந்து கேட்டு வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த 2022 மார்ச் மாதம் வங்கியில் இருந்து கடன் பெற்ற தொகைக்கு அசலும், வட்டியும் கட்டச் சொல்லி குமரேசனுக்கு அறிவிப்பு நோட்டீஸ் வந்துள்ளது. இதையடுத்து மீண்டும் சிவக்குமார், பிரவீனா ஆகியோரை தொடர்பு கொண்ட போது முறையாக பதிலளிக்கவில்லை, எனவே மோசடியில் ஈடுபட்ட அவர்கள்மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பல்லடம் காவல் நிலையத்தில் குமரேசன் புகார் அளித்தார்.

    இதையடுத்து வழக்கு பதிவு செய்த போலீசார், வழக்கில் சம்பந்தப்பட்ட பல்லடம் வேலப்ப கவுண்டம்பாளையம் பகுதியைச் சேர்ந்த சிவக்குமார்,பல்லடம் வடுகபாளையத்தைச் சேர்ந்த பிரவீனா ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இதையடுத்து அவர்கள் ஜாமீனில் சிறையிலிருந்து வெளியே வந்து தலைமறைவாக இருந்து வந்தனர். இதில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பிரவினா கைது செய்யப்பட்டு மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார். சிவக்குமார் மீது பல்வேறு காவல் நிலையங்களில் மோசடி புகார்கள் அளிக்கப்பட்டது.

    இதையடுத்து நீதிமன்றம் அவரது ஜாமீனை ரத்து செய்து அவருக்கு பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டது. இதனைத் தெரிந்து கொண்ட சிவக்குமார் தலைமறைவானார். பல்லடம் துணை போலீஸ் சூப்பிரண்டு சவுமியா தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு தீவிரமாக தேடி வந்தனர். இந்த நிலையில் தேனி அருகே அவர் பதுங்கி இருப்பதாக வந்த ரகசிய தகவலை அடுத்து அங்கு சென்ற போலீசார் அவரை கைது செய்து பல்லடம் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி கோவை சிறையில் அடைத்தனர். மேலும் இந்த வழக்கில் சம்பந்தப்பட்டுள்ள அவரது அண்ணன் விஜயகுமார் , அவரது மகன் ராகுல் பாலாஜி முன் ஜாமீன் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • வழக்கு விசாரணைக்கு அழைக்கப்பட்ட சுதாகரனை போலீசார் திடீரென கைது செய்தனர்.
    • பல இடங்களில் போராட்டக்காரர்களுக்கும், போலீசாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநில காங்கிரஸ் தலைவராக இருப்பவர் சுதாகரன். இவர் போலி புராதனப்பொருட்கள் விற்பனை மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட மோன் சன் மாவுங்கல் என்பவருடன் தொடர்பில் இருந்ததாக குற்றம் சாட்டப்பட்டது.

    இந்த வழக்கு விசாரணைக்கு அழைக்கப்பட்ட சுதாகரனை போலீசார் திடீரென கைது செய்தனர். பின்னர் அவர் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார்.

    சுதாகரன் கைது செய்யப்பட்டதற்கு காங்கிரஸ் கட்சியினர் கடும் கண்டனத்தை தெரிவித்து உள்ளனர். மேலும் ஆளும் கட்சிக்கு எதிராக பல்வேறு போராட்டங்களிலும் அவர்கள் ஈடுபட்டுள்ளனர். திருவனந்தபுரம் தலைமை செயலகம் உள்பட பல்வேறு இடங்களில் கேரள முதல்-மந்திரி பினராயி விஜயனின் உருவ பொம்மையும் எரிக்கப்பட்டது. பல இடங்களில் போராட்டக்காரர்களுக்கும், போலீசாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

    இந்த சம்பவங்கள் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் காங்கிரஸ் கட்சியினர் இன்றும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    • சுதாகரன் கைது செய்யப்பட்டதை கண்டித்து கேரளாவில் போராட்டங்களில் ஈடுபட உள்ளதாக காங்கிரஸ் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    • மத்தியில் ஆளும் நரேந்திர மோடி அரசை போன்றே பினராயி அரசும் பாசிச அணுகுமுறையை கொண்டுள்ளது

    திருவனந்தபுரம்:

    கேரளாவில் பழங்கால பொருட்களை விற்பனை செய்து வந்தவர் மோன்சன் மாவுங்கால். இவர் தங்கம் கடத்தல் மற்றும் பழமையான பொருட்கள் விற்பனையில் மோசடி செய்ததாக கைது செய்யப்பட்டார். இதற்கிடையில் அவர் மீது பாலியல் வழக்கும் இருந்தது. இந்த வழக்கில் மோன்சன் மாவுங்காலுக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்து கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

    இந்நிலையில் மோன்சன் மாவுங்காலுடன் தொடர்பு வைத்திருந்ததாக கேரள மாநில காங்கிரஸ் தலைவர் சுதாகரன் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் போலீசார் தன்னை கைது செய்யாமல் இருக்க அவர், கோர்ட்டில் முன்ஜாமீன் பெற்றார்.

    இந்நிலையில் நேற்று கொச்சியில் உள்ள குற்றப்பிரிவு போலீஸ் அலுவலகத்திற்கு விசாரணைக்கு வந்த சுதாகரன் கைது செய்யப்பட்டார். அவரிடம் 7 மணி நேரம் விசாரணை நடத்திய போலீசார், பின்னர் அவரை ஜாமீனில் விடுவித்தனர்.

    அதன்பிறகு நிருபர்களிடம் பேசிய கேரள மாநில காங்கிரஸ் தலைவர் சுதாகரன், நான் நீதித்துறை மீது நம்பிக்கை வைத்துள்ளேன். எனக்கு எதிராக எந்த ஆதாரங்களும் இல்லை. கோர்ட்டில் வழக்கை சந்திப்பேன். நான் பயப்படவோ ஒளிந்து கொள்ளவோ போவதில்லை என்றார்.

    இந்நிலையில் சுதாகரன் கைது செய்யப்பட்டதை கண்டித்து கேரளாவில் 2 நாட்கள் கருப்பு தினம் கடைபிடிப்பதாகவும் போராட்டங்களில் ஈடுபட உள்ளதாகவும் காங்கிரஸ் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இது அரசியல் கட்சிகளுக்கு எதிராக கேரள அரசு பழிவாங்கும் நடவடிக்கையாக கூறி பிரசாரத்தை தீவிரப்படுத்த காங்கிரஸ் முடிவு செய்துள்ளது. மத்தியில் ஆளும் நரேந்திர மோடி அரசை போன்றே பினராயி அரசும் பாசிச அணுகுமுறையை கொண்டுள்ளது என்று குற்றம் சாட்டப்படுகிறது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சுரேஷ் பாபுவின் மனைவி நஸ்ரத். கணவர் லஞ்ச ஒழிப்பு துறை டி.எஸ்.பி.யாக இருப்பதால் அரசாங்கத்தில் பலரை தெரியும் என அந்த பகுதி மக்களிடம் கூறியுள்ளார்.
    • நஸ்ரத்திடம் பணம் மற்றும் நகைகளை கொடுத்து ஏமாந்தவர்கள், இது தொடர்பாக மலப்புரம் போலீசில் புகார் செய்தனர்.

    திருவனந்தபுரம்:

    கேரளாவின் திருச்சூர் கூட்டுறவு துறையின் லஞ்ச ஒழிப்பு துறை டி.எஸ்.பி.யாக பணிபுரிந்து வருபவர் சுரேஷ் பாபு.

    சுரேஷ் பாபுவின் மனைவி நஸ்ரத். கணவர் லஞ்ச ஒழிப்பு துறை டி.எஸ்.பி.யாக இருப்பதால் அரசாங்கத்தில் பலரை தெரியும் என அந்த பகுதி மக்களிடம் கூறியுள்ளார். தனக்குள்ள செல்வாக்கை பயன்படுத்தி பணம் கொடுத்தால் அரசு வேலை வாங்கி தருவதாகவும் தெரிவித்தார்.

    இதனை நம்பி பலர், அவரிடம் பணம் கொடுத்தனர். அவர்களுக்கு வேலை வாங்கி தருவதாக கூறி வந்த நஸ்ரத், பணம் வாங்கி பல நாட்கள் ஆனபின்பும் கூறியபடி வேலை வாங்கி கொடுக்க வில்லை. இது போல சிலரிடம் தங்க நகைகளையும் வாங்கி ஏமாற்றி உள்ளார்.

    நஸ்ரத்திடம் பணம் மற்றும் நகைகளை கொடுத்து ஏமாந்தவர்கள், இது தொடர்பாக மலப்புரம் போலீசில் புகார் செய்தனர். போலீசார் சம்பவம் குறித்து விசாரணை நடத்தினர். பின்னர் நஸ்ரத் மீது 9 வழக்குகள் பதிவு செய்து அவரை தேடி வந்தனர்.

    இந்த நிலையில் நஸ்ரத், திருச்சூரில் உள்ள செர்புவில், கணவர் சுரேஷ்பாபுவின் வீட்டில் பதுங்கி இருப்பது தெரியவந்தது. அங்கு விரைந்து சென்ற போலீசார், நஸ்ரத்தை கைது செய்தனர். அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • கொடுக்கல், வாங்கல் சம்பந்தமாக பிரச்சினை ஏற்பட்டது.
    • பழனிசெட்டிபட்டி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தேனி:

    சின்னமனூர் அருகே எரசக்கநாயக்கனூரை சேர்ந்தவர் ஜெயச்சந்திரன்(51). இவருக்கும் தேனி அருகே குப்பிநாயக்கன்பட்டியை சேர்ந்த போஸ், அவரது மனைவி பாப்பாத்தி ஆகியோருக்கு இடையே கொடுக்கல், வாங்கல் சம்பந்தமாக பிரச்சினை ஏற்பட்டது. இதுதொடர்பாக தேனி குற்றவியல் விரைவு நீதிமன்றத்தில் காசோலை மோசடி வழக்கு நிலுவையில் உள்ளது.

    இந்தநிலையில் ஜெயசந்திரனை வழக்கை வாபஸ் பெறக்கோரி போஸ் மற்றும் அவரது மனைவி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதுகுறித்து டி.எஸ்.பி அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது. அவரது உத்தரவின்பேரில் பழனிசெட்டிபட்டி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சொத்து பத்திரங்களை வாங்கி வங்கிகளில் அடமானம் வைத்து கடன் பெற்றுள்ளனர்.
    • பலமுறை புகார் அளித்தும் இதுவரை நடவடிக்கை இல்லை.

    பல்லடம் :

    பல்லடம் துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில், கோவை தொண்டாமுத்தூர் பகுதியை சேர்ந்த உமா மகேஸ்வரி, பிரியா உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட நபர்கள் மோசடி நபர்களிடம் இருந்து பணத்தை மீட்டுத் தரக்கோரி மனு அளித்தனர். இது குறித்து அவர்கள் கூறியதாவது :- எங்களிடம் பல்லடத்தை சேர்ந்த சிவகுமார், அவரது அண்ணன் விஜயகுமார் மற்றும் விஜயகுமார் மகன் ராகுல் பாலாஜி மற்றும் பிரவினா உள்ளிட்டோர் எங்களுக்கு கடன் வாங்கி தருவதாகவும், தொழிலில் பங்குதாரராக சேர்த்து கொள்வதாகவும் கூறி, எங்களது சொத்து பத்திரங்களை வாங்கி வங்கிகளில் அடமானம் வைத்து கடன் பெற்றுள்ளனர். இதுகுறித்து ஏற்கனவே பலமுறை புகார் அளித்தும் இதுவரை நடவடிக்கை இல்லை. பணத்தை இழந்து அவதிப்பட்டு வருகிறோம். இந்த மோசடியால் எங்களது குடும்பங்கள் பல்வேறு சோதனைகளை சந்தித்து வருகிறது.

    இது குறித்து பல்லடம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்து ஒரு மாதத்திற்கு பின்பு வழக்கு பதிவு செய்யப்பட்டது. விசாரணைக்கு ஆஜர்படுத்துமாறு பல்லடம் நீதிமன்றம் ஒரு மாதத்திற்கு முன் பிடிவாரண்ட் பிறப்பித்தும் போலீசார் அவர்களை கைது செய்ய தாமதப்படுத்துகின்றனர். மோசடி கும்பல் ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்து வருகின்றனர். ஆனால் போலீசார் தலைமறைவாக உள்ள அவர்களை கைது செய்யாமல் உள்ளனர். இதனால் மோசடி கும்பலுக்கு போலீசார் துணை போவதாக எங்களுக்கு சந்தேகம் எழுந்துள்ளது. எனவே இந்த மோசடி வழக்கினை சிபிஐ. விசாரணைக்கு மாற்ற வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    • திருமணம் நடந்த ஒரே நாளில் சலபதியின் நடவடிக்கையில் மாற்றம் ஏற்பட்டதை கண்ட மாணவி அதிர்ச்சியடைந்தார்.
    • சப்-இன்ஸ்பெக்டர் சுதாகர் போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்து சலபதியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம் திருப்பதி அருகே உள்ள கங்காபுரம் பகுதியை சேர்ந்தவர் சலபதி (வயது 33). இவர் அங்குள்ள தனியார் கல்லூரியில் பேராசிரியராக வேலை செய்து வந்தார்.

    இவருக்கு திருமணம் ஆகி மனைவி மற்றும் ஒரு மகள் உள்ளனர். அதே கல்லூரியில் 17 வயது மாணவி ஒருவர் இன்டர் மீடியட் 2-ம் ஆண்டு படித்து வந்தார்.

    மாணவியிடம் சலபதி நெருக்கமாக பழகினார். உன்னை திருமணம் செய்து கொண்டு மகிழ்ச்சியாக வைத்துக் கொள்கிறேன் என அவரிடம் ஆசை வார்த்தை கூறினார். அவரது பேச்சில் மாணவி மயங்கினார்.

    கடந்த புதன்கிழமை இறுதி தேர்வு எழுதிய மாணவியை பேராசிரியர் திருப்பதிக்கு அழைத்துச் சென்றார். அங்குள்ள ஒரு கோவிலில் வைத்து மாணவிக்கு தாலி கட்டினார்.

    திருமணம் நடந்த ஒரே நாளில் சலபதியின் நடவடிக்கையில் மாற்றம் ஏற்பட்டதை கண்ட மாணவி அதிர்ச்சியடைந்தார். மேலும் அவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகி குழந்தை இருப்பதும் தெரியவந்தது.

    இதுகுறித்து தனது பெற்றோரிடம் தெரிவித்தார். அவர்கள் தனது மகளை ஆசைவார்த்தை கூறி ஏமாற்றி அழைத்துச் சென்று திருமணம் செய்ததாக பேராசிரியர் மீது கங்காவரம் போலீசில் புகார் செய்தார்.

    சப்-இன்ஸ்பெக்டர் சுதாகர் போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்து சலபதியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    மாணவர்களுக்கு நல்ல போதனைகளை வழங்க வேண்டிய பேராசிரியர் ஒருவரே மாணவியை ஏமாற்றி அழைத்துச் சென்று திருமணம் செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • சேகர் கொடுத்த புகாரின் பேரில் புதுக்கோட்டை மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர்.
    • 3 பேரை கைது செய்த போலீசார் அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே உள்ள நாட்டார்மங்கலத்தை சேர்ந்தவர் சேகர். இவர் வெளிநாட்டிற்கு வேலைக்கு செல்லும் ஆர்வத்தில் இருந்தார். அதற்கான முயற்சிகளையும் தொடர்ந்து மேற்கொண்டு வந்தார்.

    அப்போது அவருக்கு கே.புதுப்பட்டி அருகேயுள்ள போசம்பட்டி பகுதியை சேர்ந்த சந்தோஷ் ராஜா (வயது 35) என்பவர் அறிமுகமாகி உள்ளார். அவர் சேகரிடம் லண்டன் அல்லது பிரான்ஸ் நாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறியுள்ளார். அதற்காக உடனடியாக ரூ.15 லட்சம் பணத்தையும் வாங்கியுள்ளார்.

    ஆனால் காலம் கடந்த பின்னரும் அவரை லண்டன் நாட்டிற்கு அனுப்பாமல் கிர்கிஸ்தான் நாட்டிற்கு அனுப்பியுள்ளார். இவரை போலவே சீனிவாசன், சுப்பையா மற்றும் சிலரிடம் சுமார் ரூ.92 லட்சம் வரை பணம் பெற்றுக்கொண்டு சரியான வேலையை வாங்கி தராமல் மோசடியில் ஈடுபட்டுள்ளனர்.

    இதில் சந்தோஷ் ராஜாவிற்கு துணையாக கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் பகுதியைச் சேர்ந்த ஆதில்வினோ என்பவரது மனைவி நிவேதா (26), கேரளாவை சேர்ந்த ஜோஸ்வா நிதின், மதுரை கோச்சடை பகுதியைச் சேர்ந்த ராஜ்கமல் மற்றும் சிலர் உதவியுள்ளனர். சேகர் கொடுத்த புகாரின் பேரில் புதுக்கோட்டை மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர்.

    இதில் மோசடியில் ஈடுபட்ட சந்தோஷ்ராஜா, மதுரையை சேர்ந்த ராஜ்கமல், கன்னியாகுமரியை சேர்ந்த நிவேதா ஆகியோரை போலீசார் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • தமிழகத்தில் அதிக வட்டித்தொகை தருவதாக ஆசை காட்டி பொதுமக்களிடம் முதலீட்டு தொகையை பெற்று 4 நிதி நிறுவனங்கள் பெரியளவில் மோசடி செய்துள்ளன.
    • வெளிநாடுகளுக்கு தப்பியோடியவர்களை கைது செய்வதற்கு சி.பி.ஐ. போலீஸ் உதவியுடன் சர்வதேச போலீஸ் மூலமாக உரிய நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

    சென்னை:

    தமிழகம் முழுவதும் குறிப்பிட்ட 4 நிதி நிறுவனங்கள் முதலீட்டு தொகை பெற்று பொதுமக்களிடம் ரூ.13 ஆயிரத்து 700 கோடி மோசடி செய்துள்ளதாகவும், ஏமாந்த பொதுமக்களுக்கு உரிய முதலீட்டு தொகையை மீட்டு தருவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாக பொருளாதார குற்றப்பிரிவு ஐ.ஜி. ஆசியம்மாள் கூறினார்.

    இதுதொடர்பாக அவர் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    தமிழகத்தில் அதிக வட்டித்தொகை தருவதாக ஆசை காட்டி பொதுமக்களிடம் முதலீட்டு தொகையை பெற்று 4 நிதி நிறுவனங்கள் பெரியளவில் மோசடி செய்துள்ளன. முதலீட்டு தொகைக்கு மாத வட்டியாக 25 சதவீதம் முதல் 30 சதவீதம் வரை வழங்கப்படும் என்று கவர்ச்சியான அறிவிப்புகளை வெளியிட்டு பொதுமக்களிடம் முதலீட்டு தொகையை பெற்று ஏமாற்றி உள்ளனர்.

    சென்னை அமைந்தகரையில் செயல்பட்ட 'ஆருத்ரா கோல்டு' நிறுவனம், கீழ்ப்பாக்கத்தில் இயங்கிய 'ஹிஜாவு' நிறுவனம், கிண்டியில் செயல்பட்ட 'எல்.என்.எஸ்.-ஐ.எப்.எஸ்.' நிறுவனம், திருச்சியை தலைமையிடமாக கொண்டு இயங்கிய 'எல்பின்' நிறுவனம் ஆகிய 4 நிதி நிறுவனங்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் தொடர்புடைய குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    வெளிநாடுகளுக்கு தப்பியோடியவர்களை கைது செய்வதற்கு சி.பி.ஐ. போலீஸ் உதவியுடன் சர்வதேச போலீஸ் மூலமாக உரிய நடவடிக்கை எடுத்து வருகிறோம். இதற்காக பல்வேறு தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.

    வெளிநாடுகளுக்கு தப்பி சென்றவர்களை பிடித்து கொடுக்க 'ரெட் கார்னர்' நோட்டீசு வழங்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் மீது 'லூக் அவுட்' நோட்டீசும் அனுப்பப்பட்டுள்ளது. மேற்கண்ட 4 நிதி நிறுவனங்களும் தமிழகம் முழுவதும் 2 லட்சத்து 84 ஆயிரம் பேர்களிடம் ரூ.13 ஆயிரத்து 700 கோடி அளவுக்கு முதலீட்டு தொகை பெற்று மோசடி செய்துள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.

    இந்த 4 நிறுவனங்களில் 1,115 வங்கி கணக்குகள் முடக்கி வைக்கப்பட்டுள்ளது. இந்த நிறுவனங்களுக்கு சொந்தமான கார்கள் போன்ற அசையும் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அசையா சொத்துக்களை கணக்கிட்டு வருகிறோம். மேற்கண்ட நிதி நிறுவனங்களிடம் பணத்தை இழந்த பொதுமக்கள் கவலைப்பட தேவையில்லை. அவர்கள் ஏமாந்த பணத்தை கோர்ட்டு மூலமாக பெற்று தர உரிய நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

    பொருளாதார குற்றப்பிரிவு போலீசை வலுப்படுத்த 28 சப்-இன்ஸ்பெக்டர்களை கூடுதலாக பணி நியமனம் செய்து டி.ஜி.பி. உத்தரவிட்டுள்ளார். இந்த சப்-இன்ஸ்பெக்டர்கள் மூலம் பல்வேறு தனிப்படைகள் அமைக்கப்பட்டு குற்றவாளிகளை கைது செய்தல், மோசடி நிறுவனங்களின் சொத்துக்களை கண்டறிதல் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறோம்.

    இந்த 4 நிதி நிறுவனங்களில் எல்.என்.எஸ்.-ஐ.எப்.எஸ். நிதி நிறுவனம் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துவிட்டோம். மற்ற 3 நிறுவனங்கள் மீதும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • தனியார் நிறுவனம் பொதுமக்களிடமிருந்து வசூலிக்கப்படும் டெபாசிட் தொகைக்கு 15 சதவீதம் வட்டி தருவதாக அறிவிப்பு வெளியிட்டது.
    • முதலீட்டாளர்களை வளைப்பதற்காக ஏஜெண்டுகளையும் நியமித்து பண வசூலில் ஈடுபட்டது.

    சென்னை:

    சென்னையை சேர்ந்த தனியார் நிறுவனம் ஒன்று அதிக வட்டி ஆசையை காட்டி 10 ஆயிரம் பேரிடம் ரூ.800 கோடி வரை சுருட்டிய வழக்கில் இதுவரை 5 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

    "ஹிஜாயூ அசோசியேட் பிரைவேட் லிமிடெட்" என்ற பெயரில் செயல்பட்டு வந்த தனியார் நிறுவனம் பொதுமக்களிடமிருந்து வசூலிக்கப்படும் டெபாசிட் தொகைக்கு 15 சதவீதம் வட்டி தருவதாக அறிவிப்பு வெளியிட்டது.

    இதையடுத்து முதலீட்டாளர்களை வளைப்பதற்காக ஏஜெண்டுகளையும் நியமித்து பண வசூலில் ஈடுபட்டது. இதன்படி இந்த நிறுவனத்தில் பலர் ஏஜெண்டுகளாக பணிபுரிந்து பொது மக்களிடமிருந்து பணத்தை வசூலித்து கட்டினார்கள்.

    இது தொடர்பாக கடந்த ஆண்டு நவம்பர் மாதம் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

    இதுதொடர்பாக நேரு, குரு மணிகண்டன், முகமது ஷெரீப் ஆகிய 3 பேர் ஏற்கனவே கைது செய்யப்பட்டிருந்தனர். இந்த வழக்கில் கூடுதல் நடவடிக்கையாக சாந்தி, கல்யாணி, சுஜாதா ஆகிய 3 பெண்கள் தற்போது கைது செய்யப்பட்டுள்ளனர். ரூ.800 கோடி மோசடி வழக்கில் மொத்தம் 21 பேர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டிருந்தனர். இவர்களில் 6 பேர் கைது செய்யப்பட்டிருக்கும் நிலையில் மீதமுள்ள 15 பேரையும் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    ×