search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "முதியோர் ஓய்வூதியம்"

    • சமூகப் பாதுகாப்பு வழங்குவதில் இது மிகச்சிறந்த நடவடிக்கை என்பதில் ஐயமில்லை.
    • ஆந்திர அரசுடன் ஒப்பிடும் போது இது மிக மிக குறைவு ஆகும்.

    சென்னை:

    பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    ஆந்திரத்தில் முதியோர், கைம்பெண்கள், ஆதரவற்றோர், மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கான மாத ஓய்வூதியம் ரூ.3,000 ஆக உயர்த்தபட்டுள்ளது. பயனாளிகளின் எண்ணிக்கையும் 66.34 லட்சமாக உயர்த்தப்பட்டிருக்கிறது. உயர்த்தப்பட்ட ஓய்வூதியம் வழங்கும் திட்டத்தை ஆந்திர முதல்-மந்திரி ஜெகன்மோகன் ரெட்டி இன்று தொடங்கி வைத்திருக்கிறார். ஆந்திர மாநில மக்களுக்கு சமூக நீதியும், சமூகப் பாதுகாப்பும் வழங்குவதில் இந்தத் திட்டம் மிகப்பெரிய மைல்கல் ஆகும்.

    ஆந்திர மாநிலத்தில் முந்தைய தெலுங்கு தேசம் ஆட்சியின் போது பயனாளிகளுக்கு வழங்கப்பட்ட ஓய்வூதியம் வெறும் ரூ.1000 மட்டுமே. பயனாளிகளின் எண்ணிக்கையும் 39 லட்சமாக மட்டுமே இருந்தது. கடந்த ஐந்தாண்டுகளில் மாத ஓய்வூதியம் 3 மடங்கு அளவுக்கும், பயனாளிகளின் எண்ணிக்கை இரு மடங்காகவும் உயர்த்த பட்டிருக்கிறது. ஓய்வூதியத் திட்டத்திற்காக செலவிடப்படும் தொகை ஆண்டுக்கு ரூ.4800 கோடியிலிருந்து ரூ.23,000 கோடியாக, அதாவது நான்கரை மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. சமூகப் பாதுகாப்பு வழங்குவதில் இது மிகச்சிறந்த நடவடிக்கை என்பதில் ஐயமில்லை.

    தமிழ்நாட்டில் முதியோர், கைம்பெண்கள், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்டோருக்கு கடந்த பல ஆண்டுகளாக மாதம் ரூ.1000 மட்டுமே ஓய்வூதியமாக வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஓய்வூதியம் ரூ.1500 ஆக உயர்த்தி வழங்கப்படும் என்று தி.மு.க. அதன் தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளித்திருந்தது. ஆனால், கடந்த ஜூலை மாதத்தில் தான் மாற்றுத்திறனாளிகளுக்கான ஓய்வூதியம் ரூ.1500 ஆகவும், மற்ற பிரிவினருக்கான ஓய்வூதியம் ரூ.1200 ஆகவும் உயர்த்தப்பட்டது. ஆந்திர அரசுடன் ஒப்பிடும் போது இது மிக மிக குறைவு ஆகும்.

    ஆந்திரத்தில் உள்ள குடும்பங்களின் எண்ணிக்கையில் 66 சதவீதத்தினருக்கு சமூகப் பாதுகாப்பு ஓய்வூதியம் வழங்கப்படும் நிலையில், தமிழ்நாட்டில் குறைந்தது 1.35 கோடி பேருக்கு ஓய்வூதியம் வழங்கப்பட வேண்டும். குறைந்தபட்சம் ஓய்வூதியத்திற்காக விண்ணப்பித்துக் காத்திருக்கும் 75 லட்சம் பேருக்கும் ஓய்வூதியம் வழங்கி, பயனாளிகளின் எண்ணிக்கையை 1.05 கோடியாக உயர்த்த வேண்டும்.

    மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் ஓய்வூதியத்தின் அளவை மாதம் ரூ.5 ஆயிரமாகவும், மற்ற பிரிவினருக்கான ஓய்வூதியத்தை மாதம் ரூ.3 ஆயிரமாகவும் உயர்த்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    ×