search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "முதல் கட்ட விசாரணை"

    துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக நீதிபதி அருணா ஜெகதீசன் தனது முதல் கட்ட விசாரணையை நிறைவு செய்துவிட்டு நேற்று மாலை தூத்துக்குடியிலிருந்து விமானம் மூலம் சென்னை புறப்பட்டு சென்றார். #Thoothukudifiring #Arunajagadeesan
    தூத்துக்குடி:

    தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசனை கொண்ட ஒரு நபர் விசாரணை கமி‌ஷனை தமிழக அரசு நியமித்தது. இதைத்தொடர்ந்து நீதிபதி அருணா ஜெகதீசன் தூத்துக்குடி வந்து விசாரணை நடத்தினார்.

    தூத்துக்குடியில் துப்பாக்கி சூடு நடைபெற்ற கலெக்டர் அலுவலகம், திரேஸ்புரம், அண்ணாநகர் ஆகிய இடங்களையும் மற்றும் கலவர பகுதிகளையும் அவர் பார்வையிட்டார். கலெக்டர் அலுவலகத்தில் தீ வைத்து எரிக்கப்பட்ட வாகனங்கள், ஸ்டெர்லைட் ஆலை குடியிருப்பில் சேதப்படுத்தப்பட்ட பகுதிகளை அவர் பார்வையிட்டு ஆய்வு நடத்தினார்.

    கடந்த 4 நாட்களாக துப்பாக்கி சூட்டில் பலியானவர்கள் குடும்பத்தினரையும் அவர் நேரடியாக சந்தித்து விசாரணை நடத்தினார்.



    மேலும் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் காயம் அடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களையும் அவர் பார்வையிட்டு துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக விபரங்களை சேகரித்தார்.

    அதுமட்டுமின்றி தூத்துக்குடி சுற்றுலா மாளிகையில் உள்ள முகாம் அலுவலகத்தில் பாதிக்கப்பட்ட மக்களிடம் இருந்து பிரமாண வாக்குமூலம் பெற்றார். இதில் துப்பாக்கி சூட்டில் காயம் அடைந்த மற்றும் பலியானவர்களின் உறவினர்கள் ஏராளமானோர் பிரமாண வாக்குமூலம் தாக்கல் செய்தனர்.

    இதே போல் சென்னையில் கிரீன்வேஸ் ரோட்டில் உள்ள விசாரணை ஆணையத்தின் தலைமை அலுவலகத்தில் பிரமாண வாக்குமூலம் கொடுக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. வாக்குமூலம் பெறுவதற்காக பிரத்யேக ஊழியர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள். அவர்கள் தொடர்ந்து பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் பொதுமக்களிடமிருந்து பிரமாண வாக்குமூலத்தை பெற்று வருகின்றனர். வருகிற 30-ந்தேதி வரை பிரமாண வாக்குமூலம் சமர்ப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    இதனிடையே நீதிபதி அருணா ஜெகதீசன் தனது முதல் கட்ட விசாரணையை நிறைவு செய்து விட்டு நேற்று மாலை தூத்துக்குடியில் இருந்து விமானம் மூலம் சென்னை புறப்பட்டு சென்றார். ஓரிரு நாட்களுக்கு பின் அவர் மீண்டும் தூத்துக்குடிக்கு வந்து விசாரணை நடத்த உள்ளார். #Thoothukudifiring #Arunajagadeesan



    ×